உள்ளூர் செய்திகள்

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 3

 வள்ளி மலை'வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்' என்னும் பாடலை ரசித்துக் கேட்டான் யுகன். சுவாமி படங்களுக்கு பூ வைத்தபடி இருந்த பாட்டி, “ இது சுவாமி பாட்டா இல்ல சினிமா பாட்டா?” என கேட்டாள்.“சினிமா பாட்டு தான் பாட்டி''''வள்ளி வடிவேலன் என வரவும் சுவாமி பாட்டுன்னு நினைச்சேன். ஆமா, ஆபிஸ் போக நேரமாகுதே. வேலைக்கு போகலையா?”“ இல்ல பாட்டி, உடம்பு களைப்பா இருக்கு. மனசும் சோர்வா இருக்கு. அதனால விடுப்பு எடுத்து இருக்கேன்”“எந்த நேரமும் லேப் டாப் பாத்துட்டு இருந்தா உடம்பும் மனசும் களைப்பாயிடும். அமுதனை கூட இப்படி நீ மடி மீது உட்கார்த்தி வச்சு நான் பார்த்ததில்லை. ஆனா இந்த லேப் டாப் பொழுதுக்கும் மடியிலேயே வச்சு உட்கார்ந்திருந்தா களைப்பு வராமல் என்ன செய்யும்''“என்ன பண்றது பாட்டி! வாழ்க்கையே பரபரப்பா மாறிப் போச்சு. அதுல இருந்து எப்படி வெளியே வர்றது என எல்லோரும் யோசிக்கிறாங்க”“அதுக்கு அப்பப்ப இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கு போகணும். அப்ப மனசு அமைதி பெறும். நமக்கு நிறைய மலைக்கோயில்கள் இருக்கே”“நீயே நல்ல இடமா சொல்லேன் பாட்டி”“குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் தானே. முருகன் கோயிலைத் தரிசிப்பதே மனநிறைவைத் தருமே... இப்ப பாடுச்சே… வள்ளி வடிவேலன்னு. அதான் வள்ளிமலை, அங்க போகலாம்”யுகனுக்கு அந்த பெயரே பிடித்துப் போனது. இருந்தாலும் பாட்டியை வம்புக்கு இழுத்தான்.“ பாட்டி, ரெண்டு வாரமா நீயும், முருகப்பெருமான், மேல இருந்து விழுந்த அருணகிரியை தாங்கிப் பிடிச்சார், வானத்துல இருந்து விழுந்த அமிர்த கலசத்தை கேட்ச் பிடிச்சார்னு சொன்ன. இப்போ இந்த வள்ளி மலையில் யாரை அவர் பிடிச்சார்?”“சாட்சாத் அந்த வள்ளியைத்தான். இங்கு கேட்ச் பிடிக்கலை, கரம் பிடிச்சார்”“வள்ளிக்கும் முருகனுக்கும் அங்கு மலை மேல கல்யாணம் நடந்ததா?”“ஆமா அதே வள்ளிமலை தான். இன்னமும் அந்த மலை அதே அழகு, இயற்கையோட காட்சியளிக்குது. மலைக்கு போக 444 படிகள் இருக்கு. அடிவாரத்தில் அருணகிரிநாதர் கோயிலை தரிசிச்சிட்டு மலை ஏறலாம். ஏறும் போதே வேங்கை மரமாக முருகன் மாறிய இடம், அவர் நீர் பருகிய சுனையை பார்க்கலாம். அதைத் தாண்டி போனால் வள்ளி நீராடிய சுனை இருக்கும். மலை உச்சியில் அழகிய மண்டபத்தின் கீழே மல்லிகார்ஜுன சுவாமி அருள்புரிகிறார். இங்குதான் வள்ளி, முருகன் இருவரும் சிவபெருமானை தரிசித்தனர்”“சரி பாட்டி, அங்க முருகனுக்கும், வள்ளிக்கும் காதல் கல்யாணமாமே”“அது சுவாரஸ்யமான கதை. வள்ளி ஒரு வேடுவப் பெண். வயசு பெண்ணான அவ வயலை பாதுகாக்கிற வேலை செய்தா. பரண் மீது அமர்ந்து தானியங்கள் தின்ன வரும் பறவைகளை விரட்டுவாள். அந்த மலை மீது சுற்றிய முருகனுக்கு அவள் மீது காதல் வந்தது.வேடன் உருவில் அவ்வப்போது வரத் தொடங்கினார். காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்ய வற்புறுத்தினார்”“முருகன் அழகனாச்சே! வள்ளி சம்மதம் சொல்லி இருப்பாங்களே”“அதுதான் இல்ல, வந்தது முருகன்னு தெரியுமா? 'நான் முருகனையே கணவராக பெற வேண்டும்' என மனதில் வைராக்கியம் இருப்பதாகச் சொல்லி ஆனந்த அதிர்ச்சி அளித்தாள்”“ஓ! இது வேறயா!”''முருகன் சேட்டைக்கார பையன். வள்ளி மனசுல தான் தான் இருக்கேன்னு தெரிஞ்சும் அவளுடன் விளையாடுவதில் ஒரு சுகம். நாட்கள் ஓடிட்டே இருக்க, ஒருநாள் முதியவர் வேடத்தில் முருகன் வந்தார். தான் ஏற்பாடு செய்திருந்தபடி தன் சகோதரர் விநாயகரை காட்டு யானை வடிவில் வரச் சொல்லி அவளை துரத்தச் செய்தார். வள்ளி பயந்து போய் முதியவரைக் கட்டிக் கொண்டாள். தன்னை மணந்து கொண்டால் காப்பாற்றுவதாக முதியவர் சொல்ல, 'கிழவனை எப்படி மணப்பது' என வள்ளி பின்வாங்கினாள். முருகன் தன் உண்மையான வடிவத்தை அவளுக்குக் காட்டினார்”“ காதலுக்காக அண்ணனையே துணைக்கு அழைச்சிருக்காரு முருகன். பெரிய ஆளுதான்! நமக்கு ஒரு நண்டு சிண்டு கூட வரல. ம்ம்ம்!” என பெருமூச்சு விட்டான் யுகன்.“ இவங்க திருமணம் செய்ய முடிவு செய்ததும் வள்ளியின் தந்தை நம்பிராஜன் படையுடன் வந்து முருகனை பிடிக்க முற்பட்டார்”“அதானே பார்த்தேன்! என்னடா இந்த காதலுக்கு வில்லன் இல்லையேன்னு”“அப்புறம் நம்பியும் முருகனும் சண்டை போட, நம்பியும் அவனுடன் வந்தவர்களும் மரணம் அடைந்தனர். பின் வள்ளி மன்றாட உயிர் பிழைக்கச் செய்து அவர்கள் முன்னிலையில் வள்ளியை மணந்தார்”“ஒரு வழியா சுபம் போட்டாச்சு”“ஆமா, அதனாலதான் திருமணம் தள்ளிப் போறவங்க வள்ளி மலைக்கு வந்தா தடை விலகுது. மலை மீது முருகன் பிரம்மாண்ட குகையில தேவியரோடு அருள்புரிகிறார். உண்மையில் தெய்வயானை, வள்ளி இருவரும் முற்பிறவியில் இரட்டையராக பிறந்த சகோதரிகள். அமுதவல்லி, சுந்தரவல்லி என்பது அவர்களின் பெயர். மகாவிஷ்ணுவின் கண்களில் தோன்றியவர்கள். சிறிதும் கோபம் வராத கணவனை மணக்க அவர்கள் விரும்பினார்கள். அதனால் அந்த குணங்களைக் கொண்ட முருகனைப் பார்க்கவே, இருவரும் அவரை மணந்தனர்”“ஏதேது... முருகனுக்கு கோபம் வராதா! பழத்துக்காக கோவிச்சுக்கிட்டு பழநி மீது நின்னவரு தானே”“அது சின்ன வயசு, அதற்குப் பிறகு முருகன் யார் மீதும் கோபப்பட்டதில்லை”“என்னமோ பாட்டி, நீ சொன்னா சரிதான்.” என்றான் யுகன் சிரித்தபடி.“குகைக்கோயில்ல தாழ்வான நுழைவாயில் தான் இருக்கும். கொஞ்சம் குனிஞ்சு வளைஞ்சா தான் நுழைய முடியும். மலை மீதிருந்து பார்த்தால் எங்கும் பசுமை, எங்கும் பிரம்மாண்ட மலைகள்னு ரம்மியமாக இருக்கும். அங்கிருந்து பார்த்தால் ஞானமலை, பொன்னை நதி எல்லாம் தெரியும். வழி எங்கும் பாறை இடுக்குகளில் சுனை இருக்கு. அது மட்டுமில்ல, சூரியன் காணாத சுனை நீரும் மலை மீதிருக்கு. அந்தத் தண்ணியை குடிச்சா புத்துணர்ச்சி வரும். வள்ளி மலையை நேரில் பார்த்தால் ஆன்மிக ஈடுபாடு, புத்துணர்ச்சி கிடைக்கும். குழந்தைகளுக்கும் நம் பண்பாடு, கலாசாரம், ஆன்மிக வரலாறு எல்லாம் தெரிய வரும்”“ நிச்சயமா பாட்டி”“ அது மட்டும் இல்லடா யுகா, கோயில்ல இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் சச்சிதானந்தர் ஆசிரமம் இருக்கு'' “அமுதனுக்கு இதை எல்லாம் கூட்டிட்டு போய் காட்டணும் பாட்டி”“அமுதனுக்கு மட்டும் இல்லடா, வேலை பளுவால உங்க ரெண்டு பேருக்கும் ஏற்பட்டு இருக்கிற சோர்வும் இங்கு தீரும்”“சரி, இந்த ஞாயிறன்று போகலாமா? நீயும் வர்றியா பாட்டி?”“வர்றேனே! சென்னையில் இருந்து இரண்டரை மணி நேரம் தான். ராணிப்பேட்டை மாவட்டத்தில இது இருக்கு. காலை 7:00 மணி - மாலை 5:00 மணி வரை மலைக்கோயில் திறந்திருக்கும். ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். அருணகிரி நாதர் இந்த வள்ளிமலை முருகன் மீது 11 திருப்புகழ் பாடியிருக்கார். நாலு வரி பாடறேன் கேளு.வல்லசுரர் மாள நல்லசுரர் வாழவல்லை வடிவேலைத் தொடுவோனேவள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவுவள்ளி மணவாளப் பெருமாளே”''அதெல்லாம் சரி. உன்னால மலை ஏற முடியுமா? பாதி வழியில நின்னுட போற!”“வைரம் பாய்ஞ்ச கட்டைடா இது. எங்கப்பன் முருகன் இருக்க எனக்கு என்ன கவலை. வேல் வேல் வெற்றி வேல்”.-இன்னும் இனிக்கும்பவித்ரா நந்தகுமார்94430 06882