வரதா... வரம்தா... (21)
மணப்பாக்கத்து நம்பி ஒரு வேதாந்த தேசிகனை சந்திக்க வரும் போது தட்டு நிறைய மலைவாழை, மல்லி, முல்லை ஆகியவற்றை கொண்டு வந்திருந்தார். அப்போது வைணவப் பெருமக்களோடு காஞ்சிவாழ் மக்களும் அங்கிருந்தனர்.தேசிகனின் வீட்டின் முன் பெரிய திண்ணை! தென்னங்கிடுகுகளால் வேயப்பட்ட பந்தலால் அவர் வீட்டு முகப்பு குளுமையாக இருந்தது. அதன் நிழலில் புத்த பிட்சு ஒருவரும் நின்றிருந்தார்! தேசிகனிடம் சினேக பாவமும், உன்னத நோக்கமும் இருந்ததால் அவரைக் காண சமய பேதங்கள் இல்லை.இந்நிலையில் தான் சாரங்கன் திருமணத்திற்காக பொன் கேட்டு நின்றான்! எடுப்பார் கைப்பிள்ளையான அவனை, தேசிகர் மீது பொறாமை கொண்ட கும்பல் ஏவி விட்டுள்ளதை புரிந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தேசிகரிடம் ''சுவாமி.. சிலர் ஏவியதால் இவன் வந்திருக்கிறான். உங்களை அவமானப்படுத்துவது தான் அவர்களின் நோக்கம். இவனுக்காக எதுவும் செய்ய வேண்டாம்'' என்றார். ஆனால் இன்னொருவரோ, ''சுவாமி... பொறாமை கொண்டவர்களும் வெட்கும்படியாக நீங்கள் இவனுக்கு உதவ வேண்டும்'' என்றார். வேதாந்த தேசிகனிடம் சலனம் இல்லை. அமைதி காத்தார். மணப்பாக்கத்து நம்பியும், என்ன செய்யப் போகிறார் என்ற தவிப்போடு நின்றிருந்தார். சாரங்கனை அருகில் அழைத்தார் தேசிகர்.''திருமணமானால் அத்தை மகளோடு சந்தோஷமாக வாழ்வாய் தானே?'' எனக் கேட்டார்.''ஆமாம் சுவாமி... ஆனால் அது உங்கள் கைகளில் அல்லவா உள்ளது?'' என்றான்.''கவலைப்படாதே... நுாறு பொன்னுக்கு கோடி பொன்னே கிடைக்கப் போகிறது! மகாலட்சுமி அள்ளித் தர போகிறாள். அதைக் கொண்டு நல்ல விதமாக வாழ்வதோடு நற்செயல்களையும் நீ செய்திட வேண்டும்''''தாராளமாகச் செய்கிறேன் சுவாமி''''சரி.. என்ன நற்செயல்களைச் செய்வாய்?''''அது...அது...''''ஏன் தடுமாறுகிறாய்?''''நற்செயல்கள் என்றால் என்ன? அதுவே எனக்குத் தெரியாதே?''''பின்னர் எதை வைத்து செய்கிறேன் என்கிறாய்?''''உங்களைக் கேட்டுத் தான்...''அப்பாவியாக அவன் சொன்ன பதில் வேதாந்த தேசிகனை உருக்கியது. ''நீ தான் எத்தனை நல்லவன்! கபடம் உன்னிடம் இல்லை. சுத்தமான தங்கம் எப்படி நகையாகாதோ, அதுபோல மிக நல்லவனாலும் நினைத்ததை செய்ய முடியாது. வீரம், விவேகம், நுட்பம் என்ற உணர்வுகளும் ஆண்மகனுக்கு அவசியம். தீட்சையாக அவற்றை உனக்கு அளிக்கிறேன்.அப்படியே என் தாயான திருமகளிடம் பொருளையும் யாசிக்கிறேன். எம்பெருமானே ஆதிபரம்பொருள் என்பது உண்மையானால், அவனின் ஆத்மபத்னி லட்சுமி தேவி என்பது உண்மையானால், என் யாசிப்பை ஏற்று அருள் புரிவாளாக'' என வேண்டி மகாலட்சுமி மீது பாடத் தொடங்கினார்.தன்னை மறந்து விண்ணை நோக்கி கை கூப்பி பாடிய போது, பொன்மழை பொழிந்தது. அதைக் கண்டவர்கள் சிலிர்த்து கூப்பிய கைகளும், பனித்த விழிகளுமாக வேதாந்த தேசிகரின் மேன்மை அறிந்து வணங்கினர். தேசிகருடைய விழிகளிலும் பனிப்பு!''அம்மா... கருணா சாகரீ! பரம கல்யாணி! திவ்ய மகாதேவி... நாராயணி... தாயே... தன்யனானேன்'' என மெய் சிலிர்த்தார். அன்று அவர் பாடியது தான் 'ஸ்ரீஸ்துதி' என்னும் மந்திர நுால். ராஜாவுக்கு பிறந்த குழந்தை இளவரசனாகி பின் அவனே ராஜா ஆவது போல், கருட மந்திரத்தால் சித்தி பெற்ற தேசிகரிடம் பிறந்த இந்த மந்திரம் மகாலட்சுமியை வசீகரித்து வறுமையை விரட்டும் அருமருந்தானது.அப்புறம் என்ன?கேள்வி கேட்டவர்கள், பொறாமைப்பட்டவர்கள், சந்தேகப்பட்டவர்கள் வாயடைத்து நின்றனர். சாரங்கனுக்கு பொன்னை அள்ளிக் கொடுத்தார் தேசிகன்!வறுமை மட்டுமல்ல, வெகுளித்தனம், அறியாமை என எல்லாம் அவனை விட்டுப் போனது. அவனும் பொன்னானவன் ஆனான். எல்லாவற்றையும் பார்த்தபடி எம்பெருமானாக கருதி தேசிகனின் காலில் விழுந்து வணங்கினார் மணப்பாக்கத்து நம்பி. தேசிகனும் ஆட்கொண்டார். ''சுவாமியை நான் அறியலாமா?''''அடியேன் மணப்பாக்கத்தை சேர்ந்த நம்பி''''நம்பி என்ற பெயரே எதையும் நம்பு - அதற்கான எதிரான சிந்தனைகளை துளியும் கொள்ளாதே என்ற நேர்மறை எண்ணத்தின் விளைவு தான். அப்பெயரை தாங்கள் கொண்டிருப்பதும் நன்றே!''''செரிவான விளக்கம்! எம்பெருமான் தரிசனம் பெற காஞ்சிக்கு வந்தேன். எம்பெருமானிடம் ஒரு பிரார்த்தனையை முன் வைத்தேன்.கலிமாயை உலகை ஆட்டிப் படைக்கிறது. எது நல்லது,கெட்டது என்ற தெளிவின்றி மக்கள் பல வழிகளில் செல்கின்றனர். அரிதான மனிதப் பிறவியின் நோக்கமே மீண்டும் பிறவாத நிலை கண்டு எம்பெருமானைச் சேர்வதே... தவறான வழியால் பிறப்பை வீணாக்காமல் வைணவ நெறியை போதித்து அவர்களை எம்பெருமானின் திருவடியில் சேர்ப்பதே லட்சியம்!''''அருமையான லட்சியம். உயர்வான நோக்கு. எம்பெருமான் உம்மை வழி நடத்தட்டும்''''அவனருள் மட்டும் போதாது. கலியில் கடைத்தேற்றம் ஆச்சார்ய புருஷர்களால் தான் தங்களின் ஆசியும், உபதேசமும் முக்கியம்''''என் ஆசி எப்போதும் உண்டு''''ஆச்சார்ய புருஷரே.. தங்களிடம் மேலும் சில கருத்துக்களை பகிர விரும்புகிறேன்''''கூறுங்கள்''''கலிமாயை என முன்பே சொன்னேன். அதன் விளைவு இன்று நம் மண்ணில் பலவழிப் போக்குகள். வேதங்களை கண்களாக கருதும் நிலையில், அவை வெறும் ஏடுகள் என்பாரும் உண்டு. இந்த மண்ணைச் சாராத அந்நியர்கள் இமயம் வரை வந்து பாரதத்தின் வடபகுதியை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். புண்ணிய பூமியின் தென்பகுதி சற்று பாதுகாப்பாக இருந்தாலும் அதற்கும் ஆபத்து நேரும் எனத் தோன்றுகிறது''''எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது''''அதற்காக நாம் ஏதாவது செய்ய வேண்டுமே?''''நிச்சயமாக'''' ஒரு முடிவு செய்துள்ளேன். வைணவ சித்தாந்தத்தை கற்றுத் தெளிந்து அதன் மறைவுபொருளை பிறருக்கு போதிக்கவும், அதற்காக உயிரை இழக்கவும் சித்தமாயுள்ளேன்!''''மேலான எண்ணம். முயற்சி சிறக்கட்டும்''''இதற்காக நான் ஸ்ரீரங்கம் புறப்பட்டேன். அங்கு பிள்ளைலோகாச்சாரியர் என் குறை தீர்ப்பார் என்பது வரதன் இட்ட கட்டளை! தங்களை கண்டதும் உங்களாலேயே குறை தீரும் என மனதிற்குப் படுகிறது''மணப்பாக்கம் நம்பி சொன்னதைக் கேட்டு வேதாந்த தேசிகனிடம் ஒரு சலனம்!தொடரும் இந்திரா சௌந்தர்ராஜன்