வரதா வரம்தா... (13)
சோழ நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட திருவாலி என்னும் நாட்டின் அரசன் தான் நீலன். பரகாலன் என்றும் அழைக்கப்பட்டவன். நீலனுக்கு காஞ்சி வரதன் அருள் செய்த விதம் அபாரமானது!இவனே பின்னாளில் திருமங்கையாழ்வார் என்னும் திருநாமம் பெற்று பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக திகழ்ந்தார். இவரது காலத்தை தொடர்ந்து கால வெள்ளத்தின் ஓட்டத்தில் காஞ்சியை எண்ணும் போது நினைவுக்கு வருபவர் ராமானுஜர். கி.பி.1017ல் காஞ்சிக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதுாரில் பிறந்த இவர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளின் அருளால் பிறந்தவர். ஆசூரி கேசவாச்சாரியார், காந்திமதி தம்பதியருக்கு தொடக்கத்தில் குழந்தைப்பேறு இல்லை. வேதவித்தகரான கேசவாச்சாரியார் திருவல்லிக்கேணிக்கு வந்த போது பெருமாளிடம் உருகி வழிபட்டதன் பயனாக ஆதிசேஷன் அம்சமாக பிறந்தவரே ராமானுஜர்!ஸ்ரீபெரும்புதுாருக்கு அருகிலுள்ள தலமான காஞ்சியே ராமானுஜரின் நடுத்தர வயது வரை பெரும் பங்கு வகித்தது. இங்கு தான் தன் 32ம் வயதில் இல்வாழ்வை வெறுத்து துறவியானார். ராமானுஜரை நினைக்கும் போது ஸ்ரீபெரும்புதுார், காஞ்சி, மேல்கோட்டை, திருவரங்கம் என்ற நான்கு ஊர்கள் மனதிற்குள் பளிச்சிடும். இதில் பிறந்தது ஸ்ரீபெரும்புதுாரில் என்றாலும் வளர்ந்தது மலர்ந்தது சிறந்தது எல்லாம் காஞ்சியில் தான்! பிறகே 80 வயதில் கர்நாடகத்தில் உள்ள மேல்கோட்டைக்கு சென்று திருநாராயணப் பெருமாள் கோயிலைக் கட்டினார். பின் முற்றிய முதுமையில் திருவரங்கம் சென்று எஞ்சிய காலத்தைக் கழித்தார்.ராமானுஜரின் வாழ்வில் எவ்வளவோ அரிய செயல்கள்! அதில் பிரதானமானது திருக்கோஷ்டியூரில் அவருக்கு கிடைத்த மந்திர உபதேசம்! இதற்கான விதை காஞ்சி வரதராஜனின் சன்னதியில் தான் அவருக்குள் விழுந்தது!யாதவப் பிரகாசரை குருவாக ஏற்ற ராமானுஜர் பல துன்பத்திற்கு ஆளான போதிலும், அவற்றை ஞான பாடமாக ஏற்று மதிப்புக்கும், மாண்புக்கும் உரியவரானார். காஞ்சி மட்டுமின்றி உலகமே வணங்கும் ஒருவராகத் திகழ்ந்த ஒரு நாளில் தான் அத்திகிரி வரதனின் சன்னதியில் அந்த விதை விழுந்தது. உருக்கமாய் வரதனை தரிசித்து விட்டு பிரகாரத்தில் நடந்த தருணம்! அவருடன் கூரேசர், திருவரங்கத்து அமுதனார், முதலியாண்டான் என்ற சீடர் குழாமும் வந்தது. அனந்த சரஸை ஒட்டி வரும் போது தென்றல் மேனியில் பட்டு சிலிர்ப்பைத் தந்தது. அங்கேயே அமர்ந்திட எண்ணம் வந்தது. அந்த திருக்குளத்தைப் பார்த்தார் ராமானுஜர். அதை கவனித்த கூரேசர்,''ஸ்வாமி..''''சொல்...கூரேசா?''''குளத்தை தாங்கள் காண்பதில் இனம் புரியாத உணர்வு தெரிகிறதே?''''உண்மை தான்.. பாற்கடலுக்கு நிகரானது இந்த குளம். எல்லா புண்ணிய நதிகளிலும் நீராடுவதும், இதில் நீராடுவதும் ஒன்று என என் மனதிற்குள் ஒரு குரல் சொல்கிறது''''அப்படியானால் அது எம்பெருமான் குரலாகத் தான் இருக்க வேண்டும்...''''ஆம்.. ஆழ்மனம் மிக விசித்ரமானது. அதன் சக்தி அலாதியானது. ஜென்மாந்திர தொடர்புகளும், பதிவுகளும் அதனுள் தான் இருக்கிறது..''''அரிய கருத்து. இன்று இவ்வாறு தாங்கள் சிந்திக்கக் காரணம்?''''தெரியவில்லை.. ஒன்று மட்டும் உறுதி! இக்குளம் வருங்காலத்தில் பெரிய அளவில் சிந்திக்கப்படும். இதன் ஒவ்வொரு சொட்டிலும் அந்த நாரணனின் ஜீவ கருணை தளும்பிக் கிடக்கிறது''''பிரம்மனால் உருவான இக்குளம் பிரம்ம சிருஷ்டிகளான நமக்கெல்லாம் மோட்சம் தருமோ?''''தருமோ என்ற கேள்வி தவறு. தரப் போகிறது என்ற விருப்பமும் நம்பிக்கையுமே சரி...''''ஸ்வாமி...'' இடையிட்டார் திருவரங்கத்து அமுதனார்.''சொல்லுங்கள் அமுதனாரே..''''இந்த குளத்துக்கு சற்றும் குறையாதது எங்கள் திருவரங்கத்து சந்திரபுஷ்கரணி''''உண்மை... எம்பெருமானின் திவ்ய தேசத்து குளங்கள் எல்லாமே பாற்கடலுக்கு இணையானவை தான். அனைத்தையும் தரிசிக்க வேண்டும். அனைத்திலும் நீராட வேண்டும். இது என் நெடுநாள் விருப்பம்...''''அதன் முதல்கட்டமாக திருவரங்கத்து ஆச்சாரியனான ஆளவந்தார் இடத்தில் தாங்களும் அமர்ந்து எம்மையும் நாம் சார்ந்த வைணவத்தையும் வழிநடத்த வேண்டும்''''அது பெரும் கடமையல்லவா?''''இன்றுள்ள நிலையில் அக்கடமையைச் செய்ய தங்களைத் தவிர யாருமில்லை''''அப்படி எல்லாம் சொல்லாதீர்! வைணவம் தனி ஒருவனை நம்பியிருக்கும் மார்க்கம் அல்ல. அது அனைவராலும் இழுக்கப்பட வேண்டிய தேர்!''''சரியாகச் சொன்னீர்... தேருக்கு சாரதி வேண்டும் அல்லவா? அதற்கு தங்களை தவிர யார் இருக்கிறார்கள்?''''உங்களுக்குத் தான் என் மீது எவ்வளவு அன்பு! நீங்கள் அறியாத ஒன்றும் உள்ளது..'' என ராமானுஜர் சொல்லவும் எல்லோரும் அவரை 'எது அது?' என்பது போல பார்த்தனர்.''எனக்கு மந்திர உபதேசம் ஆகவில்லை. அஷ்டாட்சர மந்திரத்தின் உட்பொருளை நான் இன்னமும் உபதேசிக்கப் பெறவில்லை. என்னால் எப்படி ஆளவந்தாரின் இடத்தில் அமர்ந்து அனைவரையும் நெறிப்படுத்த முடியும்?'' என்ற ராமானுஜரைப் பார்த்த அமுதனார் ''அதை உபதேசிக்கப் பெற்றவர்களை விட, தங்களின் சொல்லும் செயலும் மேலனதாக இருக்கும் போது அது ஒரு குறையா என்ன?'' என்று எதிர்க்கேள்வி கேட்டார்.''அமுதனாரே!வழிவழியாக உள்ள வழிமுறைகளை மதிப்பது முக்கியம். அதை விட்டு விலகுவது சுலபம். ஆனால் அது பாவம்!'' ''அப்படியானால் தாங்கள் ரகஸ்யாத்ரம் அறிய தகுந்த குருவை நாடலாமே?''''இன்று காஞ்சி வரதனிடம் என் விண்ணப்பம் அது தான். எனக்கொரு நல்வழி காட்டு என்றே வேண்டினேன்''''ஸ்வாமி... நான் ஒரு கருத்தைக் கூறலாமா?'' அமுதனார் தான் கேட்டார்.''தாராளமாக'' ''அஷ்டாட்சர மந்திர உபதேசம் பெற்றிட கைதேர்ந்த ஆச்சாரியன் திருக்கோஷ்டியூரில் இருக்கிறார். நம்பி - அவரது திருநாமம்!திருக்கோஷ்டியூர் சென்றால் திவ்ய தேசம் ஒன்றை தரிசித்தது போலும் ஆயிற்று. தங்களுக்கு உபதேசமும் ஆகி விடும். அதன் பின் தாங்கள் பூரணமான ஆச்சாரியனாகி விடுவீர்கள்...''அமுதனார் சொல்லவும் ராமானுஜரின் முகம் மலர்ந்தது.''இந்த காஞ்சி வரதன் அருளாளன் என்பதை நிரூபித்தான் பார்த்தீர்களா? பிரார்த்தித்து சிறிது நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் திருக்கோஷ்டியூர் திசையைக் காட்டி, ஆச்சார்ய நம்பியையும் தங்கள் மூலம் உணர்த்தி விட்டானே?''''ஆம்... இந்த அருளாளன் அருளோடு நாளையே திருக்கோஷ்டியூர் புறப்படுவோம். பயண ஏற்பாட்டை செய்கிறேன்'' என்றார் முதலியாண்டான். ஆமோதித்தார் கூரேசர், ஆனந்தமானார் அமுதனார்... ஆனால் ஒருவருக்குமே தெரியாது. திருக்கோஷ்டியூர் பயணம் கால காலத்திற்கும் ஞானப்பாடமாக போகிறது என்று!தொடரும்அத்திவரதரை பாடிய பக்தர் கடந்த இரண்டு இதழ்களில் வெளிவந்த அத்திவரதர் ஸ்லோகத்தை இயற்றியவர் ஆயுர்வேத மருத்துவர் அய்யப்பன் காரியாட். நாராயணீய சகஸ்ர நாமம் எழுதிய இவர், தமிழ் வளர்ச்சித்துறை உதவியுடன் திருக்குறள், நீதி இலக்கியங்களை மலையாளத்தில் மொழி பெயர்த்துள்ளார். பகவத் கீதையின் ஸ்லோக அமைப்பில் உள்ள அத்திவரத ஸ்தோத்திரத்தின் பொருளை படிக்க பலன் கிடைக்கும். இவரை தொடர்பு கொள்ள 94444 87160இந்திரா சௌந்தர்ராஜன்