உள்ளூர் செய்திகள்

வரதா வரம்தா... (20)

கி.பி.1323...பாரதத்தின் தலைநகரான டெல்லியை துக்ளக் வம்சத்தைச் சேர்ந்த கியாசுதீன் ஆட்சி செய்த காலம். பாரசீக மொழியே அலுவல் மொழி. நான்கு வருடங்களே கியாசுதீன் துக்ளக்கின் ஆட்சி நடந்தது. அதன்பின் வந்த முகம்மது பின் துக்ளக் 1351 வரை 26 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இந்த சமயம் மாறவர்மன் குலசேகரன் மதுரையை தலைநகராக பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். மகன்களான சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் இவனைத் தொடர்ந்து ஆட்சி செய்தனர். காஞ்சியம்பதி அப்போது வலுவிழந்த சோழர்களின் பிடியில் இருந்தது. ஆயினும் காஞ்சி வரதனின் கருணையால் மும்மாரிக்கு குறைவில்லை.இந்த நிலையில் காஞ்சிக்கு ஒருநாள் மணப்பாக்கத்து நம்பி என்ற வைணவர் வந்தார். இவருக்கு வைணவ சம்பிரதாயங்களை அறிந்து தெளியும் ஆவல் இருந்தது. இந்த சம்பிரதாயங்கள் கலியின் மாயையால் இடர்பாட்டுக்கு உள்ளாகி, மக்கள் அறியாமல் தத்தளிக்கக் கூடும் என்ற அச்சமும் அவருக்கு இருந்தது. அச்சம் தீர ஒரே வழி காஞ்சிவரதனிடம் சரணடைவதே என எண்ணி அவன் சன்னதியை நாடினார். கண்ணீர் சிந்திய நிலையில் வரதராஜனிடம், ''எம்பெருமானே... என் மரணகாலம் வரை வைணவ சம்பிரதாயங்களை அறிந்து தெளிவதோடு, அதை ஒரு நாளைக்கு ஒருவருக்காவது உபதேசிக்கவும் விரும்புகிறேன். நீ தான் வழிகாட்ட வேண்டும்'' என பிரார்த்தித்தார். கண்ணயர்ந்த நம்பியின் கனவில், ''நம்பி... உன் விருப்பம் ஈடேற ஸ்ரீரங்கம் செல். முன்னதாக வேதாந்த தேசிகனைக் கண்டு ஆசி பெறு. கேட்டது கிடைக்கும். ஸ்ரீரங்கத்தில் பிள்ளைலோகாசார்யன் என்பவன் வைணவமே மானிட உருவெடுத்தது போல வாழ்கிறான். அவன் நாவில் வெளிப்படும் அவ்வளவும் என் கூற்றே! இதை நீ உணர்வாய். அப்படியே ஒரு சோதனைக் காலம் வர உள்ளது என்று மட்டும் சொல்!'' என்றான் காஞ்சிவரதன். கண் விழித்த நம்பி காஞ்சி நோக்கி நடக்கலானார். இதற்கு முன்னதாக அந்த சமயம் வேதாந்த தேசிகரின் புகழ் எங்கும் பரவியிருந்தது. அவரது இல்லம் பண்டிதர்கள், வேத விற்பன்னர்கள் சூழ்ந்த கலாசாலையாக விளங்கியது. தேசிகரின் மனைவியான திருமங்கை தேவியாரும் வருவோரை உபசரித்த வண்ணம் இருந்தாள்.இந்நிலையில் தேசிகரின் புகழைக் கண்ட சிலருக்கு பொறாமைத் தீ எரிந்தது. அவர்கள் ஒன்று கூடி தேசிகரை மட்டம் தட்டிப் பேசி வந்தனர்.''இந்த தேசிகன் சுத்த சுயம்பிரகாசராம்! அப்படி என்ன பெரிய பிரகாசத்தை அவர் கண்டு விட்டார் எனத் தெரியவில்லை'' என ஒருவர் ஆரம்பிக்க மற்றவர்கள் நகைத்தனர். ''சரியாகத் தான் கேட்டீர்... இரவில் அவரை தெருவில் நடக்கச் சொல்லி பார்க்க வேண்டும். இரவின் கடுமையில் காணாமல் போகிறாரா இல்லை... தீப்பந்தம் போல ஜிகுஜிகு என எரிகிறாரா என்று...''''என்னவோ போங்கள்... அவரைப் பார்த்தாலே பாவம் போகும் என்றும், அவர் ஆசி கிடைத்தால் எல்லாம் கிடைத்து விட்டது என்றும் அர்த்தமாம். பேசாமல் கோயில்களை இழுத்து மூடி விட்டு தேசிகன் தான் இனி எல்லாம் என அறிவிக்கலாம்...''இப்படி ஆளுக்கு ஆள் பேசிய போது தெருவில் சோகமாக நடந்து சென்றான் சாரங்கன் என்பவன்! சாரங்கனுக்கு முப்பது வயது. தேக்கு மரம் போல உடம்பு.. தோற்றத்திலும் அழகன். மாநிறம்! ஆனால் மணமாகவில்லை!அவனுக்கு தாய் மட்டும் இருக்கிறாள். வறுமையான குடும்பம்! அதனால் மெனக்கெட யாரும் இல்லை. பெண் பார்க்க வேண்டும் என்றால் முதலில் பொன் சேர்க்க வேண்டும். இந்த நாள் போல் இல்லை அன்று...!ஆண் தான் பெண்ணைப் பெற்றவருக்கு பொன் தந்து பெண் கேட்க வேண்டும். ஒரு பெண்ணைப் பெற்று வளர்த்து அவர் ஆளாக்கியதற்கு தரும் சன்மானம் அது! பெண்ணின் அழகுக்கேற்ப பொன்னின் அளவும் அதிகரிக்கும். இப்படி ஒரு காலகட்டத்தில் பொன், பொருள் இன்றி ஏழையாகவும், கபடம் இல்லாதவனாகவும் இருந்தான் சாரங்கன்! அவனைப் பார்த்த பொறாமைக்காரர்களுக்கு ஓர் எண்ணம் தோன்றியது!''இவனைக் கொண்டு தேசிகரை சோதித்தால் என்ன?'' என்றொரு கேள்வி. ''அடேய் சாரங்கா... வா இப்படி?''''வந்தேன்... எதற்கு அழைத்தீர்கள்?''''உன் வயது என்ன?''''முப்பதுக்கும் மேல் என்பாள் என் அம்மா. சரியாகத் தெரியாது''''வயது கூட தெரியவில்லை. நீ எல்லாம் எதற்கு வாழ்கிறாய்?''''அதுதான் எனக்கும் தெரியவில்லை''''போடா பைத்தியம். உனக்கு ரோஷமே இல்லையா? கோபமே வரமாட்டேன் என்கிறதே?''''கோபப்பட்டு என்னாகப் போகிறது. என் அம்மா உங்களைப் போலத் தான் பேசுவாள். என் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது என்றும் கூறுவாள்'' ''உண்மைதானே? உனக்கு மணமாகியிருந்தால் பல குழந்தைகளுக்குத் தகப்பனாகியிருப்பாய்''''அப்படியா?'' ''என்ன அப்படியா.. உனக்கு கல்யாண ஆசை கிடையாதா?''''நிறையவே. என் மாமன் மகள் கோமளம் என்றால் உயிர். அவளை மணக்க நுாறு பொன் வேண்டுமே.. என்னிடம் ஒரு பொற்காசும் இல்லையே..''''இது தான் பிரச்னையா?''''ஆமாம். அதனால் என் தாயும் பெருமாளிடம் தினமும் அழுகிறாள்''''அப்படியா சங்கதி.. போகட்டும். நான் உனக்கு வழி காட்டுகிறேன்''''என்ன அது?''''உனக்கு வேதாந்த தேசிகரை தெரியும் தானே?''''அவரைத் தெரியாதவரும் உண்டா... அவருக்கு என்ன?'' ''அவரிடம் போ... அவர் வேறு பெருமாள் வேறு இல்லை என ஊரே சொல்கிறதே? எனக்கு மணமாக ஆயிரம் பொன்னுக்கு மேல் வேண்டும். எனவே மகாலட்சுமியிடம் கேட்டு வாங்கித் தாருங்கள்.. எனச் சொல்!'' '' வாங்கித் தருவாரா?''''அவர் தான் சுயம்பிரகாசர் ஆயிற்றே! அவர் கேட்டு மகாலட்சுமி மறுப்பாளா?''''நிஜமாகவா..'''' நீ கேள். பிறகு தெரியும்! நாங்கள் அனுப்பி வைத்தோம் என்றும் சொல்''''எனக்கு கோமளம் கிடைத்தால் போதும். இப்போதே செல்கிறேன்''சாரங்கன் அவர்களின் சூது தெரியாமல் கள்ளம் இல்லாமல் வேதாந்த தேசிகனைத் தரிசித்து நடந்ததை தெரிவித்தான். அதைக் கேட்டதும் தேசிகருக்கு சூழ்ச்சி புரிந்தது.அந்நிலையில் மணப்பாக்கத்து நம்பியும் தேசிகரை காண அங்கு நின்றார்! - தொடரும்இந்திரா சௌந்தர்ராஜன்