உள்ளூர் செய்திகள்

விட்டலனின் விளையாட்டு - 12

மாடுமேய்க்கும் கண்ணனின் மாயம் ஸந்த் நரஹரி எழுதிய 'க்ருபாகரீ பண்டரீநாதா' எனத் தொடங்கும் 'அபங்' பாடலின் பொருள். பண்டரிநாதா... தயவு காட்டு. உன் மகிமை அறியாமல் செய்த தவறுகளை மன்னித்துவிடு. நீ பக்தர்களை ரட்சிப்பவன். அனாதைகளிடம் தயை காட்டுபவன். பாவியாகிய நான் உன்னை சரணாகதி அடைகிறேன். நான் அவகுணங்களை உடையவன். தயை புரிந்து என்னை புண்ணியவனாக்கு. தயாசாகரா, அனந்தா, பண்டரி நாதா கருணை செய். உன் நாமத்தை நிரந்தரமாக இனி ஜபிக்கிறேன்....'அப்பா, உத்தவர் என்பவரின் மறு அவதாரம் தான் நாமதேவர் என்றீர்களே, உத்தவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்' என கேட்டாள் சிறுமி மைத்ரேயி. பத்மநாபன் கூறத் தொடங்கினார். 'உத்தவர் கிருஷ்ண பக்தர். அது மட்டுமல்ல, கிருஷ்ணர் ஆட்சியில் அமைச்சராக விளங்கினார். ஒரு கட்டத்தில் கிருஷ்ண அவதாரம் முடிவுக்கு வர வேண்டிய நேரம் உண்டானது. இதை அறிந்த உத்தவர் 'கண்ணா என்னையும் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்வாயா?' என வேண்டினார்.'உத்தவரே, உங்கள் ஆயுள் காலம் முடிந்த பின் வைகுண்டத்துக்கு வரலாம்' என்றார். எனினும் உத்தவரின் மனம் பற்றற்ற வாழ்வில் ஈடுபட முடிவெடுத்தது.இதை உணர்ந்த கிருஷ்ணர் 'உங்கள் ஆயுட்காலம் முடியும் வரை பத்ரிகாஸ்ரமத்திற்குச் சென்று தவம் மேற்கொள்ளுங்கள்' என உத்தரவிட்டார். அப்போது உத்தவர் 'கண்ணா... அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்தாய். அதுபோல எனக்கும் ஆத்ம உபதேசத்தை அருள வேண்டும்' என்றார் உத்தவர். கண்ணனும் அப்படி உபதேசம் செய்தார். அதை உத்தவ கீதை என்பர். அதில் 1367 சுலோகங்கள் உள்ளன. இவை 31 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன' என விளக்கிய பத்மநாபன் பின்னர் நாமதேவரின் திருமணத்திற்கு பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அடுக்கத் தொடங்கினார்....நாமதேவர், ராஜாபாய் திருமணம் சிறப்பாக நடந்தது. மழையாய்ப் பொழிந்த அத்தனை தங்கக் காசுகளையும் சம்பந்தி வீட்டாருக்கும் திருமணச் செலவுக்கும் செலவு செய்தார் தாம்ஸேட்டி. எனவே வீட்டில் பழையபடி கைக்கும் வாய்க்குமான வாழ்க்கைதான் நடைபெற்றது. எளிய வணிகராக தாம்ஸேட்டி இருக்க, தையல் வேலைகளைச் செய்து குறைவான தொகையை குணாபாய் சம்பாதித்தார். நாமதேவரோ விட்டலனே கதி என கோயிலில் கிடந்தார்.ஒருநாள் தன் வீட்டு திண்ணையில் யாரோ ஒரு மாட்டுக்காரன் அமர்ந்து கொண்டு 'நாமதேவரே, நாமதேவரே' என்று குரல் கொடுத்தது உள்ளே இருந்த குணாபாயின் காதுகளில் விழுந்தது. வீட்டுக்கு வருபவர்களுக்கெல்லாம் உணவளித்து பழக்கப்பட்ட தம்பதிகள்தான் அவர்கள். ஆனால் அப்போது வீட்டில் நிலைமை சரியில்லையே. வாசலுக்குச் சென்ற குணாபாய் 'யாரப்பா நீ? இடத்தை காலி செய்' என்றாள் கொஞ்சம் கோபமாக. வந்தவனோ 'பசியும் தாகமுமாக இருக்கும் என்னை விரட்டுகிறீர்களே' என்றான் கெஞ்சலாக.குணாபாயின் கோபம் அதிகமானது. 'சந்திரபாகா நதிக்குச் சென்று உன் தாகத்தைத் தணித்துக் கொள். இங்கிருந்து கிளம்பு' என்றாள் கறாராக.வந்த மாட்டுக்காரனும் கேலிப் புன்னகையுடன் 'இப்படிப்பட்ட கஞ்சர்கள் இருக்கும் வீட்டுக்கா என் முதலாளியான கேசவ சவுகார் பத்து பைகள் பொற்காசு கொடுத்து அனுப்பி இருக்கிறார்' என்று கூறியபடி தான் கொண்டு வந்திருந்த ஒரு பையின் வாயைத் திறக்க, அதிலிருந்து சில பொற்காசுகள் கீழே சிந்தின. குணாபாயும் அப்போது அங்கு வந்து சேர்ந்த தாம்ஸேட்டியும் வாய் பிளந்து இதைப் பார்த்தனர். மாட்டுக்காரனும் சட்டென்று மறைந்து விட, அவர்களுக்கு உண்மை விளங்க அதிக நேரமாகவில்லை. வந்தவன் விட்டலன். தன் பக்தன் நாமதேவன் வீட்டினர் வறுமையில் வாடுவதை பார்த்து அவன் செய்த உதவி.நாமதேவருக்கு ஒரு வழக்கம். விட்டல பக்தர்களை தன் வீட்டுக்கு அழைப்பார். வயிறு நிறைய உணவு படைப்பார். இப்போது பொற்காசுகள் சேர்ந்தவுடன் விருந்தே படைத்தார். குந்தித் தின்றால் குன்றும் குறையும் என்பார்கள். அதுதான் நடந்தது. மீண்டும் வீட்டில் வறுமை தாண்டவம் ஆடியது. மற்றவர்கள் வருத்தத்தில் ஆழ்ந்திருக்க, நாமதேவருக்கு மட்டும் இன்பமோ இன்பம்! காரணம் அவர் மனதில் தான் எப்போதும் விட்டலன் நிறைந்திருந்தானே.இப்போது புதிதாக வந்த ஒரு ஜீவனும் (ராஜா பாய்) கவலைப்பட்டுக் கொண்டிருந்தது. கணவரின் பக்தி மெச்சத் தகுந்ததாக இருந்தாலும் வீட்டின் நிதி நிலைமையைப் புரிந்து கொள்ளாதவராக இருக்கிறாரே. அவளுக்கு ஒரு பணக்கார தோழி இருந்தாள். அவள் ஒருநாள் மிகப் பெருமையாக தன் கணவர் தனக்கு ஒரு ரசவாதக் கல்லை பரிசாக அளித்ததாகக் கூறினாள். அந்தக் கல்லால் எதைத் தேய்த்தாலும் அது சிறிது சிறிதாகத் தங்கமாக மாறுமாம்.'ஒரே ஒருநாள் எனக்கு அந்த கல்லைக் கடனாகக் கொடுப்பாயா?' என்று கெஞ்சுதலாகக் கேட்டாள் ராஜாபாய். என்னதான் வறுமை இருந்தாலும் அதுவரை தன்னிடம் எதுவுமே கேட்டிராத ராஜாபாய் இப்போது ஒரு உதவி கேட்க அதை மறுக்கத் தோன்றவில்லை தோழிக்கு.'உண்மை அறிந்தால் என் கணவர் திட்டுவார். ஒரே ஒரு நாளைக்கு தருகிறேன்' என்றபடி அந்தக் கல்லை ரகசியமாக ராஜாபாய்க்குக் கொடுத்தாள்.ரசவாதக் கல்லை எடுத்து வந்த ராஜாபாய் மகிழ்ச்சி பொங்க தன் வீட்டில் இருந்த சில பாத்திரங்களை அந்தக் கல்லால் தேய்க்க அவை தங்கம் ஆயின. அந்த நேரம் பார்த்து விட்டல கீர்த்தனைகளைப் பாடியபடி நாமதேவர் அங்கு வந்து சேர்ந்தார். நடப்பதைக் கண்டவுடன் அவர் மனம் நொந்தார். பேரின்பத்தை விட சிற்றின்பமே வாழ்க்கை என தன் மனைவி கருதுவது அவருக்கு கசப்பைத் தந்தது. அந்தக் கல்லை அவளிடமிருந்து பிடுங்கினார். விறுவிறுவென்று வெளியே நடந்தார். சந்திரபாகா நதிக்கரையை அடைந்தார். நதிக்குள் கல்லை வீசினார். வேகவேகமாக அவரைப் பின்தொடர்ந்த அவர் மனைவி இது கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.மறுநாள் தயங்கித் தயங்கி அழுதபடியே நடந்ததை தன் தோழியிடம் விவரித்தாள் ராஜாபாய்.அடுத்த அறையில் இருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த பணக்காரத் தோழியின் கணவர் பெரும் கோபமடைந்தார். நாமதேவரை தேடிச் சென்றார். அவர் சந்திரபாகா நதிகரையில் விட்டலன் குறித்த பாடல்களைப் பாடியபடி நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து வேகமாக நதிக்கரையை அடைந்தார்.'ஏனடா என் ரசவாதக் கல்லை நதிக்குள் வீசி எறிந்தாய்?' என கேட்டபடி அவரைத் தாக்க முற்பட்டார். 'இந்தா உன் ரசவாத கல்' என்றபடி நதிக்கரையிலிருந்து ஒரு பிடிமண்ணை எடுத்து அவன் உள்ளங்கையில் வைத்தார் நாமதேவர். அந்த மணல் மின்னியது. அத்தனையும் தங்கத் துகள்கள்! பிரமித்துப் போன அவர் நாமதேவரின் கால்களில் விழுந்தார். விட்டலனின் அருள் பெற்ற ஒருவருடன் கொண்ட தொடர்புதான் ரசவாதக் கல்லை விட பெரியது என்பதை உணர்ந்ததால் அறிந்த மரியாதை அது. ரசவாதக் கல்லைக் கொண்டு விளையாடல் புரிந்த விட்டலன் அடுத்து கருங்கல் கொண்டு நாமதேவருடன் லீலை புரியத் தீர்மானித்தான்.-தொடரும்ஜி.எஸ்.எஸ்.,aruncharanya@gmail.com