உள்ளூர் செய்திகள்

விட்டலனின் விளையாட்டு - 25

பரவசத்தால் விளைந்த விபரீதம்ஸந்த் சோகாமேளர் எழுதிய 'டாளீ வாஜவாவீ' என்று தொடங்கும் 'அபங்' பாடலின் பொருள். 'தாளம் போடுங்கள். கொடியை உயர்த்திப் பிடியுங்கள். பண்டரிபுரம் நோக்கி நடந்து செல்லுங்கள். அங்குள்ள சந்தையில் பகவானுக்குரிய பூஜைப் பொருள்கள் கிடைக்கும். அங்கு கொடிகளைச் சுமந்து செல்லும் பக்தர்களின் கூட்டத்தை காணலாம். பீமா நதிக்கரையில் ஜெய ஜெய என்ற ஒலி கேட்கும். ஹரி நாமம் உரத்து உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். இதனால் இந்த வாழ்க்கையைப் பற்றிய பயம் விலகும். இதையே பகவத்கீதையும், பாகவதமும் கூறுகின்றன. பண்டரிபுரத்துக்கு வரும் பாவிகளும் பரிசுத்தமாகி திரும்பிச் செல்கின்றனர். சோகாமேளராகிய நான் இதை முரசு கொட்டிச் சொல்கிறேன்'...'இன்று உங்களுக்கு வாரக்ரீ யாத்திரை பற்றி சொல்லப் போகிறேன்' என்று கூறி ஆவலைத் துாண்டினார் பத்மநாபன்.பத்மாசினி, குழந்தைகள் மயில்வாகனனும், மைத்திரி மூவரும் கேட்க ஆவலாக நின்றனர்.வாரக்ரீ அல்லது வாரீ எனப்படும் இந்த யாத்திரை ஆலந்தி என்ற நகரில் இருந்து தொடங்கும். பக்தரான ஞானேஸ்வரரின் ஊர் அது. அங்கிருந்து பண்டரிபுரம் 150 கி.மீ., தொலைவில் உள்ளது. அவ்வளவு துாரத்தை பக்தர்கள் நடந்தே செல்வார்கள்.'அந்தப் பயணத்துக்கு எத்தனை நாட்கள் ஆகும்''மூன்று வாரம் வரை ஆகலாம். யாத்திரையின் போது பக்தர்கள் வேகமாக நடக்கமாட்டார்கள். ஆஷாட மாதத்தில் (ஆடி மாதம்) கிருஷ்ண பட்ச அஷ்டமி திதியில் கிளம்புவார்கள். சுக்லபட்ச தசமி திதியன்று பண்டரிபுரத்தை அடைய வேண்டும். இதற்கேற்ப பயணத்தை அமைத்துக் கொள்வர்'.'எவ்வளவு பேர் இதில் பங்கேற்கிறார்கள்?''குழுக்களாகக் கிளம்புவர். ஒவ்வொரு குழுவையும் திண்டி என்பர். ஆண்டுக்கு 2,600 திண்டிகள் கிளம்புகின்றன. இவை ஒரு ரதத்தைப் பின் தொடர்ந்து செல்லும்'.'அந்த ரதத்தில் விட்டலனின் உருவம் இருக்குமா?' எனக் கேட்டான் மயில்வாகனன்.'அதில் இரு பாதுகைகள் இருக்கும். அவை ஞானேஸ்வரரின் பாதுகைகள். அவரே அன்று விட்டலனைக் காண பண்டரிபுரம் செல்வதாக ஐதீகம். அதுமட்டுமல்ல, ஞானேஸ்வரருடையதாக கருதப்படும் குதிரை ஒன்றும் யாத்திரையில் இடம் பெறும்''வாரக்ரீ யாத்திரையில் இன்னும் பல சுவாரஸ்யம் உண்டு' என்ற பத்மநாபன் விட்டலனின் முக்கியமான பக்தர் ஒருவரைப் பற்றி சொல்லத் தொடங்கினார்....மண் பாண்டம் செய்யும் குயவரான கோராகும்பரின் மனம் எப்போதும் விட்டலனையே சிந்திக்கும். கால்களால் மண்ணைப் பிசைந்தபடி பாடல்களைப் பாடி ஆடுவது வழக்கம்.'கொஞ்ச நேரம் நம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். சிறிது நேரம் வெளியே சென்று விட்டு வருகிறேன்' என்று சொல்லிச் சென்றாள் அவரது மனைவி. அப்போது குழந்தை துாங்கிக் கொண்டிருந்தான். அவரும் வழக்கம் போல மண்ணைப் பிசைந்த படி பாட்டு பாடிக் கொண்டு ஆடத் தொடங்கினார். சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட குழந்தை அப்பாவை நோக்கி தவழ்ந்து வரத் தொடங்கியது. அதை அறியாத கோராகும்பர் பரவசத்துடன் ஆடிக்கொண்டிருந்தார். குழந்தை அந்த மண்ணுக்குள் புதைந்தது. கோராகும்பரின் பாதங்கள் குழந்தையின் மீது வலிமையுடன் அழுந்தின. அதைக் கூட அறியாமல் பக்தியில் திளைத்துக் கொண்டிருந்தார்.வெளியே சென்ற மனைவி வீடு திரும்பினாள். குழந்தையைக் காணாமல் திகைத்தாள். கணவரின் காலடியில் கிடந்த தசைக்குவியல் நடந்ததை உணர்த்த அலறியபடி மயங்கி விழுந்தாள்.சத்தத்தை கேட்டு நினைவு திரும்பிய கோரா கும்பர் நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். 'விட்டலா, இது என்ன சோதனை?' எனக் கதறினார். அவரது மனைவிக்கு மெல்ல மெல்ல நினைவு திரும்பியது.மனைவியை சமாதானப்படுத்த எண்ணி 'பத்மாவதி, நான் கொஞ்சமும் எதிர்பாராத ஒன்று நடந்துவிட்டது' என மன்னிப்புக் கேட்கும் குரலில் பேசத் தொடங்கினார்.'போதும் நிறுத்துங்கள். நீங்களும் உங்கள் விட்டல பக்தியும் பாழாய்ப் போகட்டும். என் குழந்தையைக் கொன்ற நீங்களும், உங்களை நிலை மறைக்கச் செய்த விட்டலனும் பெரும் பாவிகள்' எனக் கத்தினாள். மகனை இழந்த தாயின் இயல்பான வெளிப்பாடு அது. என்றாலும் அந்த நிலையிலும் விட்டலன் குறித்து மனைவி இழிவாகப் பேசுவதை அவரால் ஏற்க முடியவில்லை. அவளை அடிக்கக் கை ஓங்கினார். 'இனி உங்கள் கை என் மீது படக்கூடாது. இது உங்கள் விட்டலனின் மீது ஆணை' எனக் கர்ஜித்தாள் பத்மாவதி. துாக்கிய கை அப்படியே நின்றது.சில நாட்கள் கடந்தன. ஒருவழியாக மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள் பத்மாவதி. கணவன் செய்தது கொடுஞ்செயல் என்றாலும் அதை அறியாமல் செய்து விட்டார் என்பதையும் தங்களின் குழந்தை மீது அவரும் நிறைய பாசம் கொண்டிருந்தார் என்பதையும் இந்த நிலைக்கு தானே காரணமாகி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார் என்பதையும் உணர்ந்த மனைவி பத்மாவதி மனம் மாறினாள். ஒருநாள் தன் கணவரின் தோளைப் பற்றியபடி சமாதானப்படுத்த முயற்சித்தாள். தள்ளிச் சென்றார் கோராகும்பர். ' விட்டலின் மீது ஆணையிட்டு உன்னை தொடக் கூடாது எனக் கூறியிருக்கிறாய். இனி நாம் ஒருவரை ஒருவர் தொடுவது கூடாது' என உறுதியாக கூறினார். அதுமட்டுமல்ல... தன் மனைவி கையால் சமைத்த உணவையும் ஏற்க மறுத்தார். பத்மாவதி விசனப்பட்டாள். வெறும் தண்ணீரைக் குடித்துக்கொண்டு எவ்வளவு காலம் கணவர் உயிர் வாழ்வார்? தங்களின் வம்சம் தழைக்க வேண்டாமா? மகனை இழந்த ஆத்திரத்தில் வீசிய கடுஞ்சொற்கள் இப்படி தவறான பலனை கொடுத்து விட்டதே! யோசித்த பத்மாவதி தன் தங்கையை மணம் முடித்து வைக்க தீர்மானித்தாள். தன் தந்தையையும் சம்மதிக்க வைத்தாள். மகளின் குடும்ப வாழ்வின் பின்னணி எதுவும் அவருக்குத் தெரியாது. மனைவியின் கண்ணீரும் மாமனாரின் கெஞ்சுதலும் கோராகும்பரின் மனதை மாற்ற, இரண்டாவது திருமணம் நடந்தேறியது. தன் இரு மகள்களில் ஒருத்தியை மாப்பிள்ளை தவறாக நடத்தினாலும் அது தனக்கு வருத்தத்தை அளிக்கும் அல்லவா? எனவே மருமகனிடம் ஒரு சத்தியத்தை வாங்கிக் கொண்டார். 'என் மூத்த மகளை எப்படி நடத்துகிறீர்களோ அதே போல என் இளைய மகளையும் நடத்த வேண்டும்' என்பதுதான் அவர் வாங்கிய சத்தியம்! -தொடரும்ஜி.எஸ்.எஸ்.,98841 75874