உள்ளூர் செய்திகள்

விட்டலனின் விளையாட்டு - 8

விட்டலனே விடை கூறுஸந்த் நரஹரி எழுதிய 'க்ருபாகரீ பண்டரீநாதா' என்று தொடங்கும் 'அபங்' பாடலின் பொருள். பண்டரிநாதா, தயவு செய். உன் மகிமையை அறியாமல் நான் செய்த தவறுகளை மன்னித்துவிடு. நீ பக்தர்களை ரட்சிப்பவன். அனாதைகளிடம் தயை காட்டுபவன். பாவியாகிய நான் உன்னை சரணாகதி அடைகிறேன். நான் பல அவகுணங்களை உடையவன். தயை புரிந்து என்னை புண்ணியவனாக்கு. தயாசாகரா,அனந்தா, பண்டரிநாதா கருணை செய். நான் உன்னுடைய நாமத்தை நிரந்தரமாக இனி ஜபிக்கிறேன்பத்மாசனியின் முகத்தில் ஏதோ ஒரு வாட்டத்தை உணர்ந்த பத்மநாபன். அதற்கான காரணத்தைக் கேட்டார். அன்று மதியத்தில் இருந்தே தனது வலது பாதம் வலிக்கிறது என்று பத்மாசனி கூற, மனைவியின் பாதத்தை பிடித்து விடுவதற்கு முன் வந்தார் பத்மநாபன். ' வேண்டாம். என் கால்களை நீங்கள் பிடிப்பது சரியல்ல' என்று தடுத்தாள் பத்மாசனி.'நான் கண்ணனை விட பெரியவனா?' என்று பத்மநாபன் கூற, ஒரு கணம் திகைத்த பத்மாசனின் முகம் அடுத்த கணம் மலர்ந்தது. கண்ணன் குறித்து தனக்கு தெரியாத ஏதோ ஒரு தகவலை அவர் கூற போகிறார் என்பது புரிந்தது.'கீதகோவிந்தம் என்ற மகாகவியத்தை எழுதியவர் ஜெயதேவர். கண்ணனைப் பற்றிய அந்தப் பாடல்களை உருகி உருகி எழுதிக் கொண்டிருந்தார் ஜெயதேவர். அதில் 'சாருசீலே ப்ரியே' என்று தொடங்கும் ஒரு பாடலில் கண்ணன் ராதையிடம் வேண்டுவதைப் போல ஒரு வரியை எழுதிவிட்டார். 'விரகதாபத்தில் தவிக்கும் என் தலை மீது உன் தாமரைப் பாதத்தை வை'.ஆனால் இப்படி எழுதியது அவர் மனதில் பெரும் குற்ற உணர்ச்சி எழுந்தது. பிரவாகமாகக் கவிதை எழுதும்போது பெரும் தவறை செய்து விட்டோமே! ராதையின் பாதங்கள் தன் தலையின் மீது பட வேண்டும் என்று கண்ணன் கூறுவது போல எழுதி விட்டோமே என்ற எண்ணி துடித்துப் போனார். அந்தப் பாடல் எழுதிய ஓலையை சுக்குநுாறாகக் கிழித்துப் போட்டார். பின் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்காக ஆற்றங்கரையை அடைந்தார்'. பத்மநாபன் மேலும் தொடர்ந்து கூறியிருப்பார். ஆனால் அப்போது மயில்வாகனனும் மைத்ரேயியும் உள்ளே நுழைந்தனர். 'அப்பா அப்பா, கானோபாத்ரா கதையை நீங்க இன்னும் நீங்க முழுசா சொல்லலையே. இப்போ சொல்லுங்க' என்று ஆர்வம் பொங்கக் கேட்டனர். மனைவியை பார்த்தார் பத்மநாபன். 'அவங்களுக்கு முதல்ல சொல்லிடுங்க. ஜெயதேவரின் மீதிக் கதையை எனக்கு நீங்கள் அப்புறமா சொல்லலாம்' என்றாள் புன்னகையுடன். கானோபத்ராவின் கதையை வாழ்வில் நடந்த மீதி நிகழ்ச்சிகளை பக்தியுடன் கூறத் தொடங்கினார் பத்மநாபன்.கானோபாத்ராவின் வாழ்வு இனிமையாக தொடர்ந்தது. ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் பிரசாதமாக அளிக்கும் எளிய உணவை மட்டுமே உண்டு விட்டல கீதங்களை பாடுவதில் தன் வாழ்நாளை கழித்து விடலாம் என்று முடிவு எடுத்தாள் அவள். ஆனால் அவளது பக்தி காலாகாலத்துக்கும் நினைவில் கொள்ளப்பட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டான் விட்டலன். அந்த நாட்டு மன்னனின் காதுகளில் கானோபாத்ராவின் பாடல்கள் குறித்த தகவல்கள் எட்டின. அவளது தேர்ந்த குரல் வளம், தீவிர விட்டல பக்தி இவற்றை விட அவன் மனதில் அதிகம் பதிந்தவை அவளது அழகிய யெளவனமும் மற்றும் அதீத அழகும். அவள் குறித்த மேலும் சில தகவல்களை சேகரிக்கச் செய்தான். அவள் இசை வேளாளர் குடும்பத்தில் என்பது தெரியவர அவன் மனம் ஆனந்தத்தில் ஆழ்ந்தது.இப்படி அனைத்து சிறப்புகளும் வாய்த்த இளம் மங்கை நமது அந்தப்புரத்தில் அல்லவா இருக்க வேண்டும் என்று விபரீதமாக சிந்தித்தான். தனது வீரர்களை பண்டரிபுரம் நோக்கி அனுப்பினான். கானோபாத்ராவைத் தகுந்த பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன் தன் அரண்மனைக்கு அழைத்து வர வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிட்டான். கானோபாத்ரா கண்களை மூடியபடி விட்டலன் குறித்த அபகங்களை அடுத்தடுத்து இசைத்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் மூடியபடியே இருந்தன. அவளைச் சுற்றிலும் சூழ்ந்த அரச வீரர்களை அவள் தொடக்கத்தில் கவனிக்கவில்லை. அவளது பாடல்களை ரசிப்பதற்காக வந்திருந்த பக்தர்கள், அரச வீரர்களைப் பார்த்து பயந்தபடி சற்று தள்ளி நிற்கலாயினர். அவர்களில் சிலருக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது புரிந்து போனது. அவர்களைக் கலக்கம் சூழ்ந்தது.இடையே சற்றே கண்களைத் திறந்தாள் கானோபாத்ரா. எதிரே உயர்ந்து நின்ற ஆலய கோபுரத்தை கண்குளிர தரிசித்தபின் பார்வையைத் தழைத்தபோது அவள் எதிரே அரச வீரர்கள் காட்சியளித்தனர். முதலில் அவளுக்கு எதுவும் புரியவில்லை. தன்னை நாடிதான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை அவள் உணரவில்லை. எனவே ' மன்னர் உங்களை அரண்மனைக்கு அழைத்து வரச் சொல்லி இருக்கிறார்' என்று அவர்கள் கூறியதும் அவள் திகைத்துப் போனாள். அரண்மனை எந்தப்புறம் என்பது கூட அறியாதவள் என்றாலும் தன்னை அழைத்துச் செல்ல அவர்கள் வந்திருப்பதன் நோக்கம் அரசனின் அந்தப்புரம் என்பது புத்திசாலியான அவளுக்குப் புரிந்து போனது. அவர்களுக்கு தனது எண்ணத்தை விளக்கினாலும் புரியாது என்பதும், அவர்கள் புரிந்து கொண்டாலும் மன்னனின் ஆணையை மீறமாட்டார்கள் என்பதும் அவளுக்கு தெளிவாகவே தெரிந்தது. கானோபாத்ராவுக்கு ஒரு தெளிவு பிறந்து. இந்த சிக்கலுக்கு விடையை விட்டலனே அளிக்கட்டும். 'வீரர்களே, நான் விட்டலனிடம் விடை பெற்றுக் கொண்ட பிறகுதான் உங்களுடன் வர முடியும். அதுவரை பொறுத்திருங்கள்' என்று கூறிவிட்டு உன்மத்தம் பிடித்தவள் போல வெகுவேகமாக தான் இதுவரை நுழைந்திராத விட்டலனின் ஆலயத்துக்குள் நுழைந்தாள். அங்கு புல்லாங்குழலை இடையில் வைத்துக் கொண்டு இரு கைகளையும் இடுப்பில் வைத்தபடி புன்னகை பூத்தபடி நீண்டிருந்த விட்டலனின் திருவுருவம் காட்சி அளித்தது. உரத்த குரலில் நீதி கேட்டாள் கானோபாத்ரா. ' விட்டலா,உன்னையே நம்பி வந்திருக்கிறேன். மன்னனோடு என்னை சேர்க்கத் துடித்த தாயின் ஆசையை மீறி உன்னை நாடி இங்கு வந்துள்ளேன். பேரின்பம்தான் என் வாழ்க்கைப் பாதையாக இருக்க வேண்டும். இந்த சூழலில் என்னை நீதான் காப்பாற்ற வேண்டும்' என்று கதறியபடியே கீழே விழுந்தாள். -தொடரும்ஜி.எஸ்.எஸ்.,aruncharanya@gmail.com