உள்ளூர் செய்திகள்

பொய்யின்றி மெய்யோடு மனம் ஒன்றி நின்றால் ஐயனை நாம் காணலாம்

ஐயப்பனின் அவதார நாள் பங்குனி உத்திரம். ஐயப்பன் வரலாற்றை விளக்குகிறார் காஞ்சிப்பெரியவர்.உயிர்களுக்கு ஞானம் என்னும் அறிவைத் தருபவர் சிவன். உயிர்களைக் காப்பவர் மகாவிஷ்ணு. இப்படி சொல்வதால் சிவ, விஷ்ணுவை வெவ்வேறு தெய்வங்களாக கருதுவது கூடாது. ஒரே கடவுளே சிவனாகவும், விஷ்ணுவாகவும் வடிவம் கொண்டிருக்கின்றனர்.பனிமலையான கைலாயத்தில் இருக்கும் சிவன் உடம்பெல்லாம் திருநீறு, புலித்தோல் ஆடை, ஜடாமுடி என்று தவவாழ்வு நடத்துகிறார். இவர் இருக்கும் இடத்தில் அமைதி, ஞானம் நிறைந்திருக்கும். சிவனின் அழகு மனதை அடங்கச் செய்யும். அமைதியளிக்கும். சிவனுக்கு அபிேஷகத்தில் விருப்பம் அதிகம். வடமாநில கோயில்களில் சிவலிங்கத்திற்கு மேல் 'தாராபாத்திரம்' வைத்திருப்பர். அதில் இருந்து தண்ணீர் சிவலிங்கத்தின் மீது சொட்டியபடி இருக்கும். வைகுண்டத்தில் ஆதிசேஷன் மீது துயிலும் மகாவிஷ்ணு பட்டு பீதாம்பரத்துடன் இருக்கிறார். அவரது மார்பில் மகாலட்சுமி வாசம் செய்ய செல்வத்துடன் மகாராஜாவாக இருக்கிறார். விஷ்ணுவின் அழகு காண்போரின் மனதைக் கூத்தாடச் செய்கிறது. அலங்காரப் பிரியரான இவருக்கு ஆடை, ஆபரணங்கள் சூட்டி அழகு பார்க்கிறோம்.இதை, ''அலங்காரப் ப்ரியோ விஷ்ணு; அபிேஷகம் ப்ரியோ சிவ:'' என்று சொல்வார்கள்.தர்மத்தை நிலைநாட்டுவதற்காக ராமர், கிருஷ்ணராக அவதரித்த மகாவிஷ்ணு காண்போரைக் கவர்ந்தார். அவரே பெண் வடிவில் 'மோகினி' யாக வந்த போது சொல்லவா வேண்டும்? அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். ஞானியான சிவன் கூட மயங்கினார். இந்நிலையில் மோகினியுடன் சிவன் இணைந்திட மகாஜோதி வெளிப்பட்டது. அதுவே 'ஐயப்பன்' என்னும் அருள் வடிவம் கொண்டது.தாயான மோகினியிடம் இருந்து காக்கும் சக்தியையும், தந்தையான சிவனிடம் இருந்து ஞானத்தையும் பெற்று 'ஹரிஹர புத்திரன்' எனப் பெயர் பெற்றார் ஐயப்பன். இவருக்கு ஐயன், ஐயனார், சாஸ்தா, சாத்தன் எனப் பல பெயருண்டு.'ஐயன்' என்பது 'ஆர்ய' என்ற சொல்லின் திரிபு. 'மதிப்புக்குரிய' என்பது இதன் பொருள். கேரளாவில் 'ஆரியங்காவு' என்பது ஐயப்பனுக்குரிய காட்டிற்கு பெயர் வைத்துள்ளனர். தெய்வங்களில் இவரை மட்டும் 'மதிப்புக்குரியவர்' என்று சொல்வது குறிப்பிடத்தக்கது.'சாஸ்தா' என்பதை தமிழில் 'சாத்தன்' எனச் சொல்வர். கிராமப்புறங்களில் கொண்டாடப்படும் தெய்வம் சாஸ்தா தான். இவரது பெயரால் சாத்தனுார், சாத்தான் குளம் என்னும் பெயரில் பல கிராமங்கள் தமிழகத்தில் உள்ளன. காவல் தெய்வமான இவர் காற்று, கருப்பு என்னும் தீயசக்திகளில் இருந்து நம்மைக் காக்கிறார். சிவன், மகாவிஷ்ணுவிற்கு பொதுவாக விளங்கும் ஐயப்பனை மனம் ஒன்றி வழிபட்டால் மேலான ஞானம், செல்வம் கிடைக்கும்.