மனசில் பட்டதை.... (34)
வெறும் மண், வேறெந்தப்பூச்சும் இல்லாத களிமண்ணால் செய்யப்படும் சின்னஞ்சிறு அகல்விளக்கு. திரி இட்டு, நல்லெண்ணெய் ஊற்றி, ஜோதியாக ஜொலிக்கும் தீபத்திருவிழா. கார்த்திகை தீபம், பரணி தீபம், அகல் தீபம், பஞ்சமுக தீபம், நெய் தீபம், திருவண்ணாமலை தீபம், மகர ஜோதி எந்தப் பெயரிட்டு சொன்னால் என்ன? தீபம் தீபம் தான். விளக்கு விளக்கு தான். ஒளி ஒளி தான். வெளிச்சம் வெளிச்சம் தான்.தென்னிந்தியாவின் முதன்மை விழா... முன்னோடி விழா... பழமை விழா... பாரம்பரிய விழா என்றெல்லாம் சொல்லி கொண்டாடப்படும் திருவிழா திருக்கார்த்திகை. அந்த திருவிளக்கை அன்றைக்குப் பார்த்தேன். அந்த நொடிகளின் பரவசமும் பிரமிப்பும் இன்னும் தீரவில்லை.போன வருடம் திருக்கார்த்திகை தினத்தன்று திருவண்ணாமலையில் கொட்டித் தீர்த்தது மழை. அடாது பெய்தால் தான் என்ன... விடாது தீபம் ஏற்றுவோம்... இப்படி தீபத்துக்கு தயாராகி கொண்டு இருந்தது அருணாசலேஸ்வரர் கோயில். மழையை மீறி, எப்படி அண்ணாமலையார் கார்த்திகை தீபத்தை ஏற்றுவது? காலை முதல் பெய்து கொண்டிருந்த மழையை யாரால் நிறுத்தி விட முடியும்?எல்லோரின் கவலையும் விஸ்வரூபமெடுத்தாலும், எல்லாவித திருப்பணிகளும் இயல்பாக நடந்து கொண்டிருந்தன. மாலை நேரம் நெருங்கி கொண்டே இருந்தது. காடாத் துணியில் நீளம் நீளமாகத் திரி; கிலோ கிலோவாகப் பசு நெய்; இப்படியான ஏற்பாடுகளை மழை வேடிக்கை பார்க்க; மழையை மக்கள் வேடிக்கை பார்க்க... விரதமிருந்த பக்தர்கள், கைகூப்பி வேண்டிக் கொண்டிருந்த பக்தர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் எல்லோரும் பார்க்கப் பார்க்க...சொடக்குப் போட்ட நொடியில் மழை நின்றது. தர்மத்துக்கு கட்டுப்பட்டு மழை நின்றது.ஜலதாரையாகப் பெய்த மழை நின்றது. யார் சொல்லுக்கோ கட்டுப்பட்டு மழை நின்றது. இந்த நேரத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற மந்திரத்துக்கு கட்டுப்பட்டு மழை நின்றது. அண்ணாமலையாருக்கு அரோகரா... அண்ணாமலையாருக்கு அரோகரா... இப்படி தெய்வீக முழக்கம் காற்றை நிறைத்தது. திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அடி முடி ஏதுமில்லாத விஸ்வரூபப் பேரின்பம்... சிவனின் கார்த்திகை ஒளி நர்த்தனம்... ஜூவாலை நர்த்தனம்... ஐம்பூதங்களுக்கும் சிவனின் கார்த்திகை ஒளி நர்த்தனம்... சூரியனுக்கெல்லாம் பெரும் சூரியன்... சந்திரனுக்கெல்லாம் பெரும் சந்திரன்... வாயுவுக்கே சுவாசம் தருபவன்... நெருப்புக்கே மூல நெருப்பு... பூமியையும், வானத்தையும் உள்ளங்கையாகக் கொண்ட சிவனின் நெருப்பு அவதாரம், உலகிற்கே வெளிச்சம் தந்தது கார்த்திகை தீபமாக. எல்லா வீடுகளிலும் கிளியஞ்சட்டி அகல் தீபங்கள்... வீட்டு வாசலில் குத்து விளக்குகள்... எல்லாத் திருக்கோயிலிலும் கார்த்திகை ஒளி அலங்காரம்... ஊர் முழுக்க, வீடு முழுக்கத் தீப வாசனை... சிவன் வாசனை...அப்பனுக்கும் பிள்ளைக்கும் ஒரே நாளில் கொண்டாட்டம் என்றால் திருக்கார்த்திகை தினம் தான். அப்பனுக்குத் திருக்கார்த்திகை தீபம். தகப்பன்சாமி முருகனுக்கோ சொக்கப்பனை. பச்சைப்பனை ஓலை தகதகவென கொழுந்துவிட்டு எரியும் சொக்கப்பனை. எங்கெங்கும் பொரி உருண்டை பிரசாதம்.நமக்கான ஒரு பொதுப்புத்தி... சந்தோஷம் எங்கே கிடைக்கும் என தேடுவது... நிம்மதி எங்கே கிடைக்கும் என தேடுவது... அமைதி எங்கே கிடைக்கும் என அலைபாய்வது... இதையெல்லாம் விற்கும் கடை ஏதாவது இருக்குமா என தேடுவது... யாராவது தராசில் எடை போட்டு நிம்மதி அரை கிலோ, சந்தோஷம் முக்கால் கிலோ, அமைதி ஒரு கிலோ என பொட்டலம் கட்டித்தர மாட்டார்களா என தேடுவது... இப்படியாக நமக்கு வெளியே தான் எல்லாவற்றையும் தேடுகிறோம். என்ன அறியாமை... என்ன அஞ்ஞானம்... என்ன ஞான சூன்யங்கள் நாம்...அடடா... அடடா... இத்தனை அரைவேக்காட்டுத்தனத்தோடு இருந்து கொண்டு, எல்லாம் வல்ல உயிர் சக்தி, உயர் சக்தி இறைமையை ஓராயிரம் முறை கேள்வி கேட்கிறோம். ஒரு லட்சம் முறை கேலி செய்கிறோம். ஒரு கோடி முறை திட்டித் தீர்க்கிறோம். வானத்தில் ஜொலிக்கும் பவுர்ணமி வெளிச்சத்தை மனசுக்குள் கொண்டு வருவோம்... வீடெல்லாம் ஜொலிக்கும் அகல் வெளிச்சத்தை வார்த்தைக்குள் கொண்டு வருவோம்... பனைமர உயரத்திற்கு நம்மைத் தாண்டி வளர்த்து வைத்திருக்கும், ஆணவத்திற்கு சொக்கப்பனை கொளுத்துவோம்... ஏதுமே தெரியாத அறியாமையோடு இருந்தும், எல்லாம் தெரிந்த அதிமேதாவித்தனத்தோடு இருக்கும் அகங்காரத்திற்கு சொக்கப்பனை கொளுத்துவோம். நம் ஆணவமும், அகங்காரமும் எரிந்து கரிக்கட்டையானால் நாம் பதப்படுத்தப்படுகிறோம், பக்குவப்படுத்தப்படுகிறோம் என அர்த்தம். இதற்கு என்ன செய்ய வேண்டும்?ஒன்றும் செய்ய வேண்டாம். மனிதனாகப் பிறந்ததற்கு வேண்டிய இயல்புத்தன்மையோடு இருக்க வேண்டும். நாம் எப்படி இருக்கிறோம்? நாயாக இருக்கிறோம், வள் வள் வள் என்று குரைக்கிறோம். பாம்பாக இருக்கிறோம், விஷத்தையே விதைக்கிறோம். புலியாக இருக்கிறோம், கடித்துக் குதறுகிறோம். கீரியாக இருக்கிறோம், சண்டை போடுகிறோம். வெறுப்பாக இருக்கிறோம். நெருப்பாக இருக்கிறோம். மனிதனாக மட்டும் இருப்பதில்லை. நமக்குத் தரப்பட்டிருக்கும் இந்த வாழ்க்கைக்கு தகுதியானவர்களாக இருக்கிறோமா என்கிற கேள்வியை, நமக்கு நாமே கேட்டுக் கொள்வதற்குத் தான் கார்த்திகை தீபம். மனசு தான் அகல்விளக்கு. எளிமை தான் வாழ்க்கைக்கு தேவையான மண்விளக்கு.பசு நெய் எது? இதமும், பதமும் தருகின்ற அன்பு, பாசம், நேசம். முரட்டுக் காடாத் துணி எது? நமது பிடிவாதம், முரட்டுத்தனம், ஆணவம், 'தான்' என்கிற கர்வம்... இத்தனையும் முறுக்கித் திரியாக்கினால், அது தான் நம் பக்குவத்தின் அடையாளம்.உள்ளம் திருக்கோயில்ஊன் உடம்பு ஆலயம்.இவ்வளவு தான் தெய்வீகம்... இவ்வளவு தான் ஆன்மிகம்... மனசுக் குப்பையை எரித்துச் சாம்பலாக்குவோம். மனசைச் சுத்தமாக்குவோம். அப்புறம், அடிமுடி இல்லாத பேரின்ப ஜூவாலையான சிவனை, நம் அடிமனதில் பிரதிஷ்டை செய்வோம். நாம் ஓரடி எடுத்து வைப்போம். சிவன் நுாறடி நம்மிடம் ஓடி வருவார். நாம் எல்லோரும் பூசலார் நாயனார் ஆகலாம். அப்புறமென்ன... எல்லா நாளும் கார்த்திகை தான். இன்னும் சொல்வேன்அலைபேசி: 94440 17044ஆண்டாள் பிரியதர்ஷினி