உள்ளூர் செய்திகள்

இந்த புன்னகை என்ன விலை

ஒரு ஞாயிறன்று அதிகாலையிலேயே கண் விழித்தான் மணிகண்டன். பல்தேய்த்து விட்டு டீ குடித்தவனிடம், ''டேய்! மணி! இன்று லீவாச்சே! வீட்டிலுள்ள பழைய புத்தகம், சாமான்களை அப்புறப்படுத்து. இன்று முழுவதும் உன் அம்மாவுக்கு ஒத்தாசையாக இருந்து வீட்டை சுத்தம் செய்'' என்றார் அப்பா. அப்பா பேச்சை தட்டாத மணியும் தலையசைத்தான். மணியின் அப்பா ஏதோ விஷயமாக அவரது நண்பரின் வீட்டுக்கு காலையிலேயே புறப்பட்டவர், மாலை வருவதாக தெரிவித்தார்.மதியத்திற்குள் அம்மாவும், மகனும் சேர்ந்து வேலையை முடித்தனர். வீடு திரும்பிய அப்பா புத்தகம் ஒன்றை கையில் எடுத்து,''மணி! என்ன வேலை செஞ்சிட்டே... இதைப் போய் பழைய குப்பையோடு சேர்த்துட்டியே... இது உன் தாத்தா எனக்கு பரிசாக கொடுத்தது,” என சொல்லி திருக்குறள் புத்தகத்தை கொடுத்தார். ''நீங்க சொன்னதைத் தான் செய்தேன். ஒருமுறை கூட, நீங்க இதைப் படிச்சதே இல்லை. புத்தகம் என்றால் அது படிப்பதற்குத் தான். வெறுமனே அலமாரியில் கிடந்தால், அது குப்பை தானே!” என்றான் மணி. மகனின் பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்த அப்பா, அன்று முதல் தினமும் ஒரு திருக்குறளைப் பொருளோடு படிப்பது என முடிவெடுத்தார். அதைப் பார்த்த மணியும் அதை பின்பற்றினான். ஒருநாள் அவன் திருக்குறளில், ''கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக'' என்னும் குறளை படித்து விட்டு நிமிர்ந்தான். அதைக் கேட்டு புகைப்படமாக இருந்த தாத்தா சிரிப்பது தெரிந்தது.எத்தனை விலை கொடுத்தாலும், இந்த புன்னகை கிடைக்குமா என்ற வியப்பில் ஆழ்ந்தான் மணிகண்டன்.