மனசில் பட்டதை... (3)
நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பரவி வைத்தேன்நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ...இப்படி வேண்டுகிறாள் ஆண்டாள்.'நூறு தடா (அண்டா) வெண்ணெய்யும், நூறு தடா அக்கார அடிசிலும் (சர்க்கரை பொங்கல்) காணிக்கை தருவேன்' என்பது ஆண்டாள் பிரார்த்தனை. அவள் காலத்திற்கு அது சாத்தியமாய் இருக்கலாம். இந்த காலத்திற்கு இவ்வளவு வெண்ணெய்யும், அக்கார அடிசிலும் தருவது பெரும் பிரயத்தனம். எனக்கு தெரிந்த இரண்டு பேர்... எதிரெதிர் துருவங்கள்... வடதுருவம், தென் துருவம் என்பதாக, பழுத்த ஆத்திகர் ஒருவர்... பழுத்த நாத்திகர் ஒருவர்.. இருவரிடமும் சமமாக தோழமை பாராட்டுவேன். மலையை மலையாக ஏற்பதே என் இயல்பு. எனவே, ஆத்திகர் புளகாங்கிதமாக இறையனுபவம் பேசும் போதும் மிகுந்த ஈர்ப்புடன் கேட்பேன். கடவுள் மறுப்பாளர், மிகுந்த வன்மையுடன் இறை மறுப்பு அனுபவம் பேசும் போதும் மிகுந்த ஈர்ப்புடன் கேட்பேன்.எனக்கான நம்பிக்கை எதுவானால் என்ன? மற்றவர்களின் வார்த்தைகளை விருப்பத்தோடு கேட்பது என் வழக்கம். அவர்களது நம்பிக்கையையும், அவநம்பிக்கையையும் அதீத சுவாரஸ்யத்தோடு கேட்பேன்.மகான் ராமானுஜர் செய்த ஆன்மிக சமூகப் புரட்சி, அவரது ஆயிரமாவது ஆண்டுப் பெருவிழா இதையெல்லாம் பற்றி சிலாகித்துப் பேசினார் ஆத்திக அன்பர். 4.4.1017ல் ஸ்ரீபெரும்புதூர் கிராமத்தில் தோன்றியவர். தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க செய்தவர். திருக்குலத்தார் என்று அவர்களை அழைத்தவர். புனிதமானது, புதிரானது என்று சொல்லப்படும் அஷ்டாக்ஷர மந்திரத்தை பகிரங்கமாக மக்களுக்குச் சொன்னவர். பக்தர்களின் பசியாற்றுவதே பெரும் இறைத் தொண்டு என்று உணர்ந்து அன்னதானம் செய்தவர். இப்படியாக, மகான் ராமானுஜரை வியந்தேத்திப் பேசினார் அந்த பழுத்த ஆத்திகர். அடுத்து வந்தார் நாத்திக அன்பர். அவருக்கு ஈ.வெ.ரா.,வின் எழுத்தும், தத்துவமுமே திருப்புராணம் அவர் மூச்சு விடாமல் பேசினார். சமூகப் புரட்சியாளர் ஈ.வெ.ரா., சுயமரியாதை கோட்பாட்டின் தந்தை. நீதிக் கட்சியின் ஆணிவேர். ஜாதி, மதம், சடங்கு என்ற பெயரில் சமூகத்தில் நடக்கும் அநீதிகளை எதிர்த்தவர். கேரளத்தில் வைக்கம் புரட்சியில் சத்யாகிரக போராட்டம் செய்தவர். தெய்வங்களை விட மனிதர்களை முன்னிலைப்படுத்தியவர் என்பதெல்லாம் நாத்திக தோழரின் வாதம். ராமானுஜர், ஈ.வெ.ரா., இருவரின் வாழ்வியலும் ஒருமைப்பட்டதாகவே தோன்றியது எனக்கு. இருவருமே மனிதர்களை முன்னிலைப்படுத்தினார்கள். மனிதர்களே நடமாடும் தெய்வம் என்பது இருவரின் கோட்பாடு. எந்த ஒரு உயிரினமும் பசிப்பிணியைக் கடப்பதே மிகப்பெரும் சாதனை. எனவே, பசிப்பிணி நீக்குதலுக்காக உணவு புரட்சி செய்தவர்களே இருவரும். ராமானுஜர் அன்னதானம் செய்தார். ஈ.வெ.ரா., மனிதர்களுக்குத் தராமல் கடவுளுக்கு உணவு தராதே என்றார். மனிதனின் ஒரு சாண் வயிற்றுக்கு சோறிடுவதே ஆகப் பெரும்பணி என்று தான் மகாகவி பாரதியாரும் சொன்னார். 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்பது பாரதியார் வாக்கு. 'பசியால் ஒருவன் கையேந்தினால், இந்த உலகை இயற்றியவன் இறந்து போகக் கடவது' என்பது வள்ளுவனின் கோபம்.ஆன்மிகத் தொண்டு, சமூகத் தொண்டு, மனிதத் தொண்டு, மகேசன் தொண்டு எல்லாமே ஒரே தொண்டு தான். இவையெல்லாமே மனிதனை முன்னிலைப்படுத்துவதே. அவனது சுயமரியாதையை முன்னிலைப்படுத்துவதே. மனிதனுக்குப் போக மிச்சம் தான் கடவுளுக்கு என்பதே.... ராமானுஜர் அஷ்டாக்ஷர மந்திரத்தையும், ஈ.வெ.ரா., சுயமரியாதை மந்திரத்தையும் எல்லோருக்குமாக உரக்கச் சொன்னார்கள். மரபுகளை மீறுதலே புரட்சி. இரண்டு பெரியவர்களும் புரட்சியாளர்கள் தான். பயணித்த பாதை தான் வேறு வேறு. என்னைப் பொறுத்தவரை மனிதனே முதல் தெய்வம். -இன்னும் சொல்வேன்ஆண்டாள் பிரியதர்ஷினி