உள்ளூர் செய்திகள்

நுாரே முஹம்மதீ

ஹஜ்ரத் ஷீத் என்பவருக்கு மனித வர்க்கத்தின் மீதும், ஜின் வர்க்கத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரமும், நபி பட்டத்தையும் கொடுத்தான் இறைவன். பின் இவர் ஹஜ்ரத் ஆதமின் (அலை) வழிமுறைகளை (ஷரீஅத்) பின்பற்றி மக்களுக்கு உபதேசம் செய்தார். ஒருநாள் அவனின் கட்டளைகளைக் கொண்ட 50 பலகைகள் இறங்கின. அதில் புவியியல், கணிதம், சங்கீதம், மருத்துவத்துறை பற்றிய விஷயங்களும் இடம் பெற்றிருந்தன. பின் வானவரான ஹஜ்ரத் ஜிப்ரீல் தெரிவித்த அழகான பெண்ணை திருமணம் செய்தார் ஹஜ்ரத் ஷீத். அவள் கர்ப்பமுற்றதும், ''சுபசோபசனம். உங்கள் வயிற்றில் 'நுாரெ முஹம்மதீ' வந்து விட்டது'' என மாயக்குரல் அறிவிப்பு ஒலித்தது. 'நுாரே முஹம்மதீ' என்பது நபியின் (ஸல் - அம்) ஒளியாகும். இந்த ஒளியைக் கொண்டே அண்ட சராசரங்கள் படைக்கப்பட்டன. முதலில் இந்த ஒளி ஹஜ்ரத் ஆதமின் முதுகுத் தண்டில் தங்கியிருந்து, பின் ஹஜ்ரத் ஷீத்தின் முதுகுத் தண்டுக்கு இடம் மாறியது. பின் தற்போது இந்தக் குழந்தையின் முதுகுத் தண்டிற்கு மாறிவிட்டது. ஒன்பது மாதம் கழித்து குழந்தை பிறந்ததும் 'அனோஷ்' என பெயரிட்டனர். 'உண்மையாளர்' என்பது இதன் பொருள். இவர்தான் முதன் முதலில் பேரீச்சம் மரத்தை நட்டு வளர்த்தவர். இவருக்கு 90ம் வயதில் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு 'கீனான்' என பெயர் சூட்டப்பட்டது. அதைப்போல் கீனானுக்கு 70ம் வயதில் குழந்தை பிறந்ததும் 'மஹ்லாயீல்' என பெயரிடப்பட்டது. இவர் 85 ஆண்டுகள் வாழ்ந்தார். இவரது காலத்தில் மக்கள் தொகை பெருக தொடங்கியது. இவர்கள் வசிப்பதற்காக ஈராக் நாட்டில் 'ஷபூஸ்' என்னும் நகர் உருவாக்கப்பட்டது. மஹ்லாயீலின் மகனான பயாஜாவிற்கு பிறந்தவரே 'ஹஜ்ரத் இத்ரீஸ் (அலை) ஆவார். பின்னாளில் இவர் நபிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.