உள்ளூர் செய்திகள்

படைப்பின் நோக்கம்

புகழ் பெற்ற சூபி ஞானி ஒருவருக்கு மக்கள் அனைவரும் சேவை செய்தனர். இதையறிந்த மன்னர் கோபமாக அமைச்சரிடம், ''ஆட்சி செய்யும் எனக்கு இல்லாத மதிப்பு அவருக்கு எப்படி வந்தது'' என கத்தினார். அதற்கு அவர், ''மன்னா! நாமே அவரிடம் சென்று இதற்கான காரணத்தை அறிவோம்'' என்றார். அதன்படி ஞானியிடம் சந்தேகம் கேட்டனர். அமைதியாக இருந்த ஞானி வானத்தை பார்க்க சொன்னார். அங்கு நிலா, நட்சத்திரங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன. காற்றில் மணம் தவழ்ந்து வரும் திசையை நோக்கி மெல்லிய மலரைக் காட்டினார் ஞானி.''மன்னா! இந்த பூ எப்போதாவது நிலவை பார்த்து அதைப்போல் ஒளி வீசவில்லையே என வருந்தியிருக்கிறதா. இல்லையென்றால் நிலா தானும் மலர் போல மணம் வீசவில்லையே என எண்ணியதுண்டா. யாரோடும் யாரையும் ஒப்பிடாதீர்கள். உலகில் அனைத்தும் ஒரு நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக உங்களைப்போல் என்னால் போரிட முடியுமா... நாட்டை ஆட்சி செய்ய முடியுமா'' எனக்கேட்டார். இருவரும் அமைதியாக நின்றனர்.