நம்பிக்கை
UPDATED : பிப் 13, 2025 | ADDED : பிப் 13, 2025
மெதீனாவிற்கு அருகே கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர் சில ஒட்டக வியாபாரிகள். அங்கு சென்ற நபிகள் நாயகம் சிவப்புநிற ஒட்டகம் ஒன்றைக் கண்டார். அதற்கு விலை பேசினார். அதன் உரிமையாளர் விலையைச் சொன்னதும், வாங்க சம்மதித்த நாயகம் மூக்கணாங்கயிற்றைப் பிடித்தபடி நடக்க ஆரம்பித்தார். இதைக் கண்ட வியாபாரியின் மகள், ''யார் இவர்? விலைக்கு கேட்டார். ஆனால் பணமே தராமல் ஒட்டகத்தை இழுத்துச் செல்கிறாரே'' எனக் கேட்டாள். அதற்கு வியாபாரி, ''நல்ல மனிதராக இருக்கிறார். நம்மை ஏமாற்ற மாட்டார்'' என்றார். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. அன்று மாலையிலேயே விலை பேசிய தொகைக்கு ஈடாக பேரீச்சம்பழ மூடைகளை அனுப்பி வைத்தார்.