உள்ளூர் செய்திகள்

உழைப்பின்றி வந்தால்...

உமர் (ரலி) கலீபாவாக ஆட்சி செய்த காலம் அது. சிரியாவின் ஹிம்ஸ் பகுதியில் இருந்து பிரதிநிதிக்குழு ஒன்று மெதீனாவிற்கு வந்தது. அவர்களிடம் ஏழ்மையில் வாடும் ஹிம்ஸ்வாசிகளின் பட்டியலைக் கேட்டு வாங்கினார் உமர். அதில் உள்ள ஒரு பெயரைப் பார்த்து, ''யார் இந்த சயீத்'' எனக் கேட்டார். ''அவர் தான் அமீர் (அந்தப் பகுதியின் கவர்னர்)'' ''என்ன உங்கள் அமீர் கூட ஏழ்மையில் வாடுகிறாரா'' ''ஆமாம். அவரது வீட்டில் பல நாட்கள் அடுப்பு எரிவதில்லை'' உணர்ச்சிவசப்பட்டு அழுத உமர் அவர்களிடம் ஆயிரம் தீனார் (நாணயம்) கொண்ட பையை கொடுத்தார். ''என்னுடைய சலாமை அவருக்குத் தெரிவியுங்கள். இதை வைத்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சொல்லுங்கள்'' என்றார் உமர். இந்தக் குழு ஹிம்ஸ் பகுதிக்கு வந்ததும் சயீத்திடம் கொடுத்தனர். அதைப் பிரித்து பார்த்தவர், 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்' என உரக்க கத்தினார். மரணம் அல்லது பேரிடர் ஏற்படும் போது வெளிப்படுத்தும் மனவுறுதிப் பிரகடனம் இது. இதைக் கேட்டு ஓடி வந்த சயீத்தின் மனைவி, ''என்ன நடந்தது. உமர்(ரலி) கலீபா இறந்து விட்டாரா... இல்லை. முஸ்லிம்களுக்கு போரில் தோல்வி ஏற்பட்டு விட்டதா'' எனக் கேட்டார். ''இல்லை. மறுமை வாழ்க்கையைக் கெடுத்து மனதில் குழப்பத்தை ஏற்படுத்த வந்திருக்கிறது இந்தப் பை. உழைப்பின்றி வந்த எந்த பொருளையும் ஏற்க மாட்டேன்'' என்றார். ''அப்படியென்றால் அதை விட்டொழியுங்கள்'' என்றாள் மனைவி. ஏழைகளுக்கு தானம் அளிக்க உத்தரவிட்டார் சயீத்.