உள்ளூர் செய்திகள்

புறம் பேசாதே

ஒருமுறை நபிகள் நாயகத்தை விண்ணுலகுக்கு அழைத்துச் சென்றான் இறைவன். அப்போது அங்கு உள்ளவர்களின் கையில் பித்தளை நகம் இருந்தது. அந்த நகத்தைக் கொண்டு தங்களின் முகம், கை, கால்களை குத்திக் கீறிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த நாயகம், ''இவர்கள் யார்? ஏன் இப்படி செய்கிறார்கள்'' என வானவர்களிடம் கேட்டார். ''நீங்கள் பார்க்கும் நபர்கள் பிறருடைய மாமிசத்தை உண்டு வந்தவர்கள் ஆவர். இவர்கள் மக்களின் மானத்தோடு விளையாடிக் கொண்டிருந்தனர்'' என்றார். இங்கு மாமிசம் சாப்பிட்டவர்கள் என்பது புறம் பேசுவதைக் குறிக்கும். ஆம். இல்லாத ஒன்றை உள்ளதாகவும், இருக்கிறதை இல்லை என்று திரித்து கூறும் நபர்களை என்னவென்று சொல்வது? இப்படி புறம்பேசி ஒருவரது மானம், கண்ணியத்தை குறைத்து பாவத்தை சேர்க்கிறார்கள். இதற்குத்தான் பித்தளை நகத்தால் தங்களைத் தாங்களே கீறிக் கொள்ளும் தண்டனை கிடைக்கிறது. எனவே ஒருவரது தனிப்பட்ட விஷயத்தில் மூக்கை நுழைப்பது, உண்மை எதுவென தெரியாமல் பேசுவது போன்ற குற்றத்தை செய்யாமல் இருக்க வேண்டும். கெட்டவைகளைப் பார்க்காமல் கண்களைக் கட்டுப்படுத்துங்கள். கெட்ட செய்கைகளை விட்டும் கைகளைக் கட்டுப்படுத்துங்கள்.பொய்களை விட்டு உண்மை பேசுவதில் முனைப்பாக இருங்கள்.