உள்ளூர் செய்திகள்

ஆணவம் கூடாது

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத். இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். இதில் ஷத்தாத் மன்னரான ஏழாம் ஆண்டில் இறந்தார். அதன் பின் ஆட்சிப் பொறுப்பை முழுமையாக ஷத்தாத் ஏற்றார். இரும்பைத் தங்கமாக்கும் 'கீமியா' என்னும் கலையை அறிந்தவர் இவர். இதனால் இவரிடம் தங்கம் மலையாக சேர்ந்தது. இதற்காக ஆணவத்துடன் செயல்பட்டார். இவரை நல்வழிப்படுத்துமாறு ஹஜ்ரத் ஹூத் நபியிடம் கட்டளையிட்டான் இறைவன். அதன்படி ஷத்தாத்தை சந்தித்த போது, ''உனக்கு நிறைய கிருபை செய்துள்ளான் இறைவன். உலகில் ஆயிரம் ஆண்டுகள் வாழ அனுமதி அளித்துள்ளான். அழகியப் பெண்களை மனைவியாக தந்துள்ளான். ஆயிரம் அரசர்களையும், அவர்களின் படைகளையும் உனக்கு அடிமைப்படுத்திக் கொடுத்துள்ளான். இந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது அவசியம். அப்படி செய்தால் உன் செல்வத்தை இரட்டிப்பாக தருவான். தீர்ப்பு நாளன்று இது பற்றி கேட்க மாட்டான். சுவர்க்கத்தில் உனக்கு இடம் தருவான். எனவே அவனிடம் பாவமன்னிப்பு கேள்; நன்றி செலுத்து'' என்றார் ஹஜ்ரத் ஹூத். ஷத்தாத் சிரித்தபடி, ''எல்லாம் என்னிடம் உள்ளது. நான் ஏன் நன்றி செலுத்த வேண்டும். சொர்க்கத்தைப் பற்றி நான் அறிவேன். அந்த சொர்க்கத்தை இந்த பூமியில் உருவாக்கப் போகிறேன். நீங்கள் சொன்ன சொர்க்கம் தேவையில்லை'' என ஆணவமாக தெரிவித்தான். ஹஜ்ரத் ஹூத் அதன்பின் ஒன்றும் பேசவில்லை. ஆணவத்தால் அழியப்போகிறான் என எண்ணியபடியே அங்கிருந்து புறப்பட்டார்.