எப்படி நுழையலாம்
தங்கம், வெள்ளியால் அழகான சொர்க்கத்தை கட்டத் தொடங்கினான் ஷத்தாத். இதற்காக அவன் செலவழித்த காலம் முந்நுாறு ஆண்டுகள். அதைப் பார்க்க ஆசையுடன் படை வீரர்களுடன் புறப்பட்டான். செல்லும் வழியில் இரவில் கூடாரத்தை கட்டி இளைப்பாறினான். அப்போது வானவர் ஒருவர் பயங்கர இடியோசை போன்ற சப்தத்தை எழுப்பினார். அவ்வளவுதான். அவனது படை வீரர்கள் எல்லாம் சுருண்டு விழுந்து இறந்தனர். நிலை குலைந்த ஷத்தாத் உயிர் தப்பித்த 200 பணியாட்களுடன் சொர்க்கத்தை நோக்கி விரைந்தான். பணியாட்களை சொர்க்கத்திற்கு முன்புள்ள மைதானத்திற்கு போகச் சொன்னான். தான் மட்டும் ஒரே ஒரு பணியாளுடன் குதிரை மீது சவாரி செய்தபடி வாசலை நெருங்கினான். தான் பாடுபட்டு கட்டிய சொர்க்கத்தில் கால் வைக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சில் காலை தரை மீது வைத்தான். மற்றொரு கால் குதிரையின் சேணை மீது இருந்தது. அச்சமயம் பார்த்து அவன் முன் உயிரைப் பறிக்கும் 'மலக்குல் மவுத்' தோன்றினார். அவரைக் கண்ட ஷத்தாத் அலறியபடி,''சற்று பொறுங்கள். சுவர்க்கத்தை சுற்றிப் பார்த்து வந்து விடுகிறேன்'' எனக் கெஞ்சினான். ''நரகத்துக்குப் போக வேண்டியவன் நீ. சொர்க்கத்துக்குள் எப்படி நுழையலாம்'' எனக் கேட்ட மலக்குல் மவுத் அவனது உயிரைப் பறித்தார். கடைசியில் ஆணவத்துடன் அலைந்த ஷத்தாத்தின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது என்பது இதுவே.