அவசரமானவர்கள்... அமைதியை தேடி...
எங்கும் எதிலும் அவசரமான மனிதர்களைத்தான் பார்க்கிறோம். செய்யும் செயல்களில் அவசரம் காட்டினால் எதையும் சாதிக்க முடியாது என்பது அவர்களுக்கு தெரியாத உண்மை போலும். பரபரப்பான மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்ததோ அதையும் தாண்டி அஞ்ஞானமும் வளர்ந்து விட்டது. ஒரு இடத்திற்கு முதலில் மனிதன் நடந்து சென்றான். பின்னர், சைக்கிள், இருசக்கரவாகனம், கார், பஸ், ரயில், விமானம் என முன்னேறி பரபரப்பாக இயங்கத் தொடங்கி நீண்டகாலமாகி விட்டது. இவர்களில் பலர் அமைதியை வெளியில் தேடுகிறார்கள். அவர்களுக்கான கதை தான் இது. ஞானி அங்கும் இங்கும் நடந்தவாறு எதையோ தேடிக்கொண்டிருந்தார். சிலர் அவரிடம் ''என்ன தேடுகிறீர்கள்'' எனக்கேட்டனர். அதற்கு ''ஊசியை தேடுகிறேன்'' என்றார். மீண்டும் ''எங்கு தொலைத்தீர்கள்'' எனக்கேட்டனர் ஞானியோ எனது குடிசையில் என பதில் சொன்னார். அங்கு தொலைத்து விட்டு இங்கு வந்து தேடினால் அது எப்படி கிடைக்கும் என்றனர் அங்குள்ளோர். புன்னகை புரிந்தவாறு அவர்களிடம் பேச ஆரம்பித்தார் ''எல்லோரும் அமைதியையும், இன்பத்தையும் வெளியில் எங்கெங்கோ தேடுகிறீர்கள். அது நமது மனதில் தான் உள்ளது அதனை நீங்கள் வெளியில் தேடும் போது... ஊசியை தொலைத்த இடத்தை விட்டு மற்றொரு இடத்தில் நான் தேடுவதில் எந்த தவறும் இல்லையே'' என்றார். கூடியிருந்தவர்கள் அவரின் போதனையை புரிந்து கொண்டனர்.