அவரவரின் தகுதி
காட்டிற்கு வேட்டையாடச் சென்ற மன்னருடன் மந்திரி, சில காவலாளிகளும் சென்றனர். நடுவழியில் அனைவரும் தனித்தனியாக பிரிந்து சென்றனர். மரத்தடியில் கண்களை மூடி தியானத்தில் இருந்த ஞானியிடம்,காவலாளிகள் ''குருடனே இந்த பக்கம் யாராவது வந்தார்களா'' எனக்கேட்டனர். அவரும் இல்லை எனச்சொன்னார்.பின்னர் குதிரையில் வந்த ஒருவர் ஞானியே! ''இந்தப்பக்கம் எம்மைத்தேடி யாராவது சென்றார்களா'' எனக்கேட்டார். அதற்கு அவரும் ''சில காவலாளிகள் உம்மைத்தேடி சென்றார்கள்'' என்றார். சிறிது நேரத்தில் அந்தப்பக்கம் வந்த மன்னர், குதிரையில் இருந்து இறங்கி ஞானியே! அடியேனை ஆசிர்வதியுங்கள். இங்கு யாராவது என்னைத்தேடி வந்தார்களா எனக்கேட்டார். அவரும் ''ஆம் தங்களைத்தேடி காவலாளிகளும், மந்திரியாரும் இந்தப்பக்கமாக சென்றார்கள்'' என்றார். சிறிது தொலைவில் சந்தித்துக்கொண்ட மூவரும் ஞானி எப்படி நம்மை இன்னார் என இனம் கண்டு கொண்டார் என வியந்தனர். அதற்கான விடையை கேட்க மீண்டும் ஞானியிடம் வந்தனர். ''குருடனே என்ற வார்த்தையிலிருந்து காவலாளியும், ஞானியே! என்ற வார்த்தையிலிருந்து மந்திரியும், குதிரையில் இருந்து இறங்கி வணக்கம் தெரிவித்ததிலிருந்து மன்னர் என்றும் நாம் கண்டு கொண்டோம்'' என்றார்.ஒருவர் பயன்படுத்தும் வார்த்தையில் இருந்து அவருடைய தகுதி என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.