நான் பார்த்துக்கொள்வேன்
நபிகள் நாயகம் இறை துாதர் என்பதை முதன் முதலாக ஒப்புக்கொண்டவர் அவரது மனைவி கதீஜா. ஆரம்பத்தில் தனக்கு அறிவிக்கப்பட்ட செய்திகளை நெருங்கிப் பழகியவர்களிடம் மட்டுமே சொன்னார் நாயகம். அவர்களில் ஒருவர் அவரது பெரிய தந்தை அபூதாலிப்பின் மகனான பத்து வயதுள்ள அலி. ஒருநாள் இவர்கள் இருவருடனும் நாயகம் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, அபூதாலிப் அங்கு வந்தார். இவர்களுடைய புது விதத் தொழுகையைக் கண்டு, ''என் அருமைச் சகோதரரின் மகனே. நீர் எந்த மதத்தைப் பின்பற்றுகிறீர்'' எனக்கேட்டார்.''இதுவே இறைவனின் மார்க்கம். அவனுடைய துாதர்கள், தீர்க்கதரிசிகள் நம்முடைய மூதாதையான ஹலரத் இப்ராஹீம் ஆகியோர் முதலான எல்லோருக்கும் உரித்தான மார்க்கம். தாங்களும் இதில் இணையுங்கள்'' என சொன்னார். அதற்கு அபூதாலிப், ''என்னுடைய மூதாதையர் தழுவி வந்த மதத்தைக் கைவிட எனக்குப் பிரியம் இல்லை. என்றாலும் நான் உயிருடன் இருக்கும் வரை உனக்கு எவ்வித இடையூறும் நேரிடாமல் பார்த்துக் கொள்வேன்'' எனக்கூறினார். அதோடு அலியிடம், ''நீர் நாயகத்தோடு எப்போதும் இரும். உம்மை அவர் நேர் வழியில் செலுத்துவார்'' என்று கூறி சென்றார்.