மூன்று மனிதர்கள்
நபிகள் நாயகத்தின் வழிபாட்டு முறைகளை பற்றி அறிந்து கொள்ள மூன்று நபர்கள் அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு அவருடைய (இபாதத்) வழிபாட்டை நாயகத்தின் மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர். பின்னர் 'நாயகம் பாவம் செய்யமாட்டார். நாமோ பாவம் செய்பவர்கள். எனவே நாம் அவரை விட அதிக நேரம் வழிபாட்டில் ஈடுபட வேண்டும்' என முடிவு செய்தனர். முதலாமவர்: நான் இனி இரவில் துாங்காமல் நஃபிலான (கடமைக்கும் அதிகப்படியான) வணக்கங்களில் கழிக்கப்போகிறேன் என்றார். இரண்டாமவர்: நான் இனி இடைவிடாது நஃபிலான நோன்புகளை நோற்கப்போகிறேன். பகலில் ஒருபோதும் சாப்பிட மாட்டேன் என்றார். மூன்றாமவர்: நான் பெண்களை விட்டு ஒதுங்கி இருக்கப் போகிறேன். நான் திருமணமே செய்யப்போவதில்லை என்றார். இதை அறிந்த நாயகம் அவர்களிடம் சென்று கீழ்க்கண்டதை கூறினார். நான் அதிகமாக இறைவனை அஞ்சக்கூடியவனாக இருக்கிறேன். ஆனாலும் நான் (நஃபிலான) நோன்புகளை சிலசமயம் நோற்காமல் இருப்பேன். இதேபோன்று இரவில் நஃபிலான தொழுகைகளையும் தொழுகிறேன். துாங்கவும் செய்வேன். திருமணமும் செய்துள்ளேன். எனவே எனது வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்தான் உங்களுக்கு நன்மையுண்டு. எவர் எனது ஸுன்னத்தை (வழிமுறையை) அலட்சியப்படுத்துகிறாரோ, அவருக்கும் எனக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை.