சொர்க்கம் செல்ல வழி
வயதான பெற்றோர்களை மாறி மாறி வீடு மாற்றுவது, முதியோர் இல்லங்களில் அநாதைகளைப்போல் சேர்த்து விடுவது காலம் தோறும் நடக்கும் மனிதநேயமற்ற செயல். பெற்றோர்களை பாதுகாப்பதிலும் எவ்வளவு உரிமை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு சவுதி அரேபியாவில் நடந்த வழக்கு ஒரு நல்ல பாடமாகும்.வயதான காலத்தில் உரிமையை விட்டுக்கொடுக்காத மகன்களுடைய வழக்கு அது. அந்த உண்மைச்சம்பவத்தை என்னவென்று பார்ப்போம். சவுதி அரேபியா தலைநகரான ரியாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கு. அண்ணன் பொறுப்பில் இருக்கும் நுாறு வயதுடைய தந்தையை இனிமேல் நான் தான் கவனிப்பேன் என தம்பி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அவரிடம் காரணம் கேட்க ''பலமுறை தந்தையை கவனித்துக்கொள்ள அண்ணனிடம் விருப்பம் தெரிவித்தும் அதற்கு இசைய வில்லை அதனால் தான் அவர் மீது வழக்கு தொடர்ந்தேன்'' என்றார். நீதிபதி இது தொடர்பாக தந்தையிடம் கருத்து கேட்டார். அவரோ, ''எனக்கு என்னுடைய மகன்கள் இருவருமே சமம். அவர்களிடம் வேற்றுமை காண முடியாது'' என அழுது கொண்டே கூறினார்.இவ்வழக்கில் குழப்பத்தில் இருந்த நீதிபதி ஒரு முடிவிற்கு வந்தார். இவ்வளவு ஆண்டுகளாக மூத்த மகன் கவனிப்பில் இருந்தார் தந்தை. இப்போது அவருக்கோ 80 வயது. முதுமை அடைந்துள்ளார். தந்தையை கவனிக்கும் பொறுப்பு மகன்கள் இருவருக்குமானது என்பதால் இனிவரும் காலங்களில் அப்பொறுப்பை இளையவரிடம் ஒப்படைக்கிறேன் என்றார். தீர்ப்பைக் கேட்டு அழுது புலம்பினார் மூத்த மகன். நீதிபதியைப் பார்த்து, '' நீங்கள் சொர்க்க வாசலில் இருந்து என்னை அகற்றியுள்ளீர்கள். என்னுடைய சொர்க்கத்திற்கான வழியை நீங்கள் அடைத்து விட்டீர்கள்'' என்றார்.தீர்ப்பளித்த நீதிபதியோ, செய்திதாள்களில் வருத்தம் தெரிவித்து பேட்டி அளித்தார். அதில், தாய் தந்தையருக்கு தொண்டு செய்யுங்கள். சொர்க்கம் செல்லுங்கள். இறைவன் அருள்புரியட்டும் என்றார்.