'அடுத்த தேர்தலில், கேரளாவில் நாங்கள் ஆட்சி அமைத்து விடுவோம்...' என மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர், இங்குள்ள காங்., கட்சியினர்.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. வழக்கமாக இங்கு ஆளுங்கட்சியாக இருப்போர், அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது இல்லை என்ற நடைமுறை இருந்தது. ஆனால், 2016 சட்ட சபை தேர்தலை தொடர்ந்து, 2021லும் பினராயி விஜயன் மீண்டும் வெற்றி பெற்று, அந்த பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால், வரும் 2026ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற துடிப்புடன் உள்ளனர், காங்., நிர்வாகிகள். இங்குள்ள வயநாடு லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல், அந்த பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அங்கு, தனக்கு பதிலாக, தன் தங்கை பிரியங்காவை களம் இறக்கப் போவதாகவும், அவர் அறிவித்துள்ளார்.'பிரியங்கா வயநாட்டில் போட்டியிடுவதால், கேரளாவில் உள்ள ஒட்டுமொத்த பெண்களின் ஓட்டுகளும் காங்கிரசுக்கு திரும்பும். இதனால், வரும் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்து விடுவோம்...' என்கின்றனர், காங்., நிர்வாகிகள். இடதுசாரி கட்சியினரோ, 'கடந்த 2019 லோக்சபா தேர்தலில் வயநாட்டில் ராகுல் வெற்றி பெற்ற போதும், இப்படித் தான் காங்., கட்சியினர் கூறினர். ஆனால், 2021 சட்டசபை தேர்தலில் காங்., தோல்வி அடைந்தது. அடுத்த முறையும் இதுதான் நடக்கப் போகிறது. பகல் கனவு பலிக்காது...' என, கிண்டல் அடிக்கின்றனர்.