'அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தோம்; கிடைக்கவில்லை...' என்கின்றனர், புதுடில்லி பா.ஜ., - எம்.பி.,யான பான்சுரி சுவராஜின் ஆதரவாளர்கள்.இவர், முன்னாள் மத்திய அமைச்சர், மறைந்த சுஷ்மா சுவராஜின் மகள். உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய பான்சுரி, தன் தாயார் மறைவுக்கு பின் அரசியலுக்கு வந்தார். லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இவருக்கு புதுடில்லி தொகுதியில் போட்டியிட பா.ஜ., மேலிடம் வாய்ப்பு அளித்தது. இந்த தொகுதியில் ஏற்கனவே எம்.பி.,யாக இருந்தவர், முன்னாள் அமைச்சரான மீனாட்சி லேகி.அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் களம் இறங்கி வெற்றி பெற்றதாலும், சுஷ்மா சுவராஜின் மகள் என்பதாலும், கண்டிப்பாக பான்சுரிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என, எதிர்பார்த்தனர், டில்லியில் உள்ள அவரது ஆதரவாளர்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. 'கடந்த அமைச்சரவையில் சிறப்பாக பணியாற்றிய அனுராக் தாக்குருக்கே அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையில், புதுமுகமான பான்சுரி, அமைச்சர் பதவியை எதிர்பார்ப்பது சரியல்ல...' என, கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். பான்சுரியின் ஆதரவாளர்களோ, 'விரைவில் டில்லி யில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில் பா.ஜ., ஆட்சி அமைத்தால், பான்சுரிக்கு முதல்வர் பதவி கூட கிடைக்கும். எம்.பி., பதவியை ராஜினாமா செய்து விட்டு, சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பு உள்ளது...' என தங்களுக்கு தாங்களே சமாதானம் கூறுகின்றனர்.