'இன்னும் ஐந்தாண்டுகளுக்கு இதேபோல் செயல்பட்டால் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தக்க வைத்துக் கொள்ளலாம்...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் பற்றி கூறுகின்றனர், அந்த கட்சியின் மூத்த தலைவர்கள்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 99 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது; இது, முந்தைய இரண்டு தேர்தல்களில் பெற்ற தொகுதிகளை விட அதிகம். இதனால், காங்கிரஸ் நிர்வாகிகள் மட்டுமல்லாமல், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். 'ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும், கவுரவமான இடங்களில் வெற்றியாவது கிடைத்ததே...' என, காங்கிரஸ் தலைவர்கள் ஆறுதல் வார்த்தைகளை பரிமாறிக் கொள்கின்றனர். எப்போதும் சற்று மந்த நிலையில் அரசியல் செய்யும் ராகுலுக்கும், இந்த வெற்றி ஊக்கத்தை அளித்துள்ளது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட பின், பார்லிமென்டில் ராகுலின் நடவடிக்கையிலும் பெரிய மாற்றம் தென்படுகிறது.சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறி, ஆளுங்கட்சியினருக்கு நெருக்கடி ஏற்படுத்தி வருகிறார். ஆளுங்கட்சியின் திட்டங்கள், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்களை முன் வைக்கிறார். சபையில் காங்., உறுப்பினர்கள் அதிகம் இருப்பதால், ராகுல் பேசும்போது, அவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தி வருகின்றனர். இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ள காங்., தலைவர்கள், 'ராகுலின் செயல்பாடுகளில் நல்ல மாற்றம் தென்படுகிறது. இப்படியே தொடர்ந்தால் நல்லது. மீண்டும் இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன் என சுற்றுலாவுக்கு கிளம்பினால், வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாகி விடும்...' என்கின்றனர்.