| ADDED : ஜூன் 20, 2024 09:18 PM
'இன்னும் சில நாட்கள் போனால், கெஜ்ரிவால் என்ற ஒருவர் இருந்தார் என்பதையே டில்லி மக்கள் மறந்து விடுவர் போலிருக்கிறது...' என கவலைப்படுகின்றனர், ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள்.இங்கு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லியில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த ஊழல் வழக்கில், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். கடந்த மார்ச்சில் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்ய வேண்டும் என காரணம் கூறி, சில நாட்கள் மட்டும் ஜாமினில் வந்தார். பிரசாரம் முடிந்ததும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். கெஜ்ரிவால் பிரசாரம் செய்தும், டில்லியில் ஏழு தொகுதிகளிலும் பா.ஜ.,வே வென்றது. சிறையில் வாடுவதை விட, தேர்தல் தோல்வி தான், கெஜ்ரிவாலை மிகவும் உலுக்கி விட்டது. அவரை சிறையில் சந்தித்து வந்த கட்சி நிர்வாகிகள் சிலர், 'எவ்வளவு நாளைக்குத் தான் சிறைக்குள் அடைபட்டபடி, அரசை நடத்த முடியும்; சட்ட சிக்கல் காரணமாக முதல்வர் பதவியையும், அவர் விரைவில் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் போலிருக்கிறது...' என, கவலை தெரிவித்துள்ளனர். 'முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது இருக்கட்டும்; இன்னும் சில மாதங்களுக்கு அவர் சிறையில் இருந்தால், ஆம் ஆத்மி கட்சியே காணாமல் போய் விடும்...' என கிண்டல் அடிக்கின்றனர், பா.ஜ.,வினர்.