புழுதிவாரி துாற்றலாமா?
'டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றதற்கு ஏதேதோ காரணங்களை கூறுகின்றனர். ஆனால், முக்கியமான காரணம் இவர் தான்...' என, டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா பற்றி ஆத்திரத்துடன் கூறுகின்றனர், ஆம் ஆத்மி கட்சியினர்.டில்லியில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சி யாக இருந்த ஆம் ஆத்மிக்கும், எதிர்க்கட்சியான பா.ஜ.,வுக்கும் கடுமையான போட்டி நிலவியது. இதில், பா.ஜ., அபார வெற்றி பெற்று, தலைநகரை கைப்பற்றி விட்டது. இதற்கு, முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆடம்பர வாழ்க்கை, மதுபான கொள்கை ஊழல் ஆகியவை தான் காரணம் என, அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.ஆனால், ஆட்சியை பறிகொடுத்த ஆம் ஆத்மி கட்சியினரோ, தங்களின் தோல்விக்கு காரணமாக, துணை நிலை கவர்னர் சக்சேனாவை கை காட்டுகின்றனர்.'கவர்னர் சக்சேனா, எங்களை ஆட்சி நடத்த விடவே இல்லை; எல்லா விஷயத்திலும் தலையிட்டார். எதற்கெடுத்தாலும் வழக்கு போட்டு, மத்திய விசாரணை அமைப்புகளை ஏவி எங்களை முடக்கினார். எனவே, எங்களின் தோல்விக்கு வழி வகுத்தவர், சக்சேனா தான். பா.ஜ.,வினர், அவருக்கு பாராட்டு விழாவே நடத்தலாம்...' என கொதிக்கின்றனர், ஆம் ஆத்மி நிர்வாகிகள். பா.ஜ.,வினரோ, 'ஆம் ஆத்மி கட்சியினர் தங்களின் மோசமான செயல்பாடுகளுக்கு மக்கள் கொடுத்த தண்டனையை ஏற்க முடியாமல், கவர்னர் மீது புழுதிவாரி துாற்றுகின்றனர்...' என, பதிலடி கொடுக்கின்றனர்.