உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / ஒருசேர புலம்பும் எதிரிகள்!

ஒருசேர புலம்பும் எதிரிகள்!

'அட, இப்படியெல்லாம் கூட நடக்குதா...' என ஆச்சரியப்படுகின்றனர், கேரளாவில் உள்ள அரசியல்வாதிகளும், பொதுமக்களும். இங்கு, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கவர்னர் ஆரீப் முகமது கானும், முதல்வர் பினராயி விஜயனும் பரம விரோதிகள் போல், அவ்வப்போது மோதிக் கொள்கின்றனர். இவர்களுக்கு இடையேயானபிரச்னை, உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சதீஷன், முதல்வர் பினராயி விஜயனுடன், அரசியல்ரீதியாக மோதி வருகிறார். சமீபகாலமாக இவர்கள் மூவருமே, ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தது இல்லை. ஆனால், இவர்களை ஒரு விஷயம் ஒன்றாக இணைத்துள்ளது. திருவனந்தபுரத்தில் அரசு உயர் பதவிகளில் உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகமான பனை மரங்கள் உள்ளன. இங்கு மர நாய்கள் அதிக அளவில் உலவுவது வழக்கம். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பினராயி விஜயன், 'என் வீட்டில் ஒரு கிளாஸ் தண்ணீர் கூட நிம்மதியாக குடிக்க முடியவில்லை. மர நாய்கள் வீட்டிற்குள் புகுந்து தொல்லை கொடுக்கின்றன...' என்றார். கவர்னர் ஆரீப் முகமது கானோ, மர நாய்கள்தொல்லை தாங்காமல், தன் அதிகாரப்பூர்வ பங்களாவை விட்டு வெளியேறி, சில நாட்கள் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். சதீஷனும், மர நாய் தொல்லை குறித்து, தன் கட்சியினரிடம் புலம்பி வருகிறார். இதைக் கேள்விப்பட்ட கேரள மக்கள், 'நீதிமன்றத்தாலேயே ஒன்று சேர்க்க முடியாதவர்களை, மர நாய் ஒன்று சேர்த்து விட்டது...' என, கிண்டல் அடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை