இவர் 16 அடி பாயுறாரே!'விரைவிலேயே திரைப்படங்களில் பார்ப்பது போல் சண்டைக் காட்சியை பார்க்கலாம் போலிருக்கிறது...' என கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும் இடையே நடக்கும் மோதல் பற்றி குறிப்பிடுகின்றனர், அந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள். ஆரிப் முகமது கான் கேரள கவர்னராக பதவியேற்றதில் இருந்து, பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசுடன் மோதல் போக்கை பின்பற்றி வருகிறார்.துணைவேந்தர் நியமனம் துவங்கி, பல்வேறு விஷயங்களிலும் இரு தரப்புக்கும் தொடர்ந்து மோதல்கள் அரங்கேறி வருகின்றன.கவர்னரை வெறுப்பேற்றுவதற்காக, அவர் செல்லுமிடங்களில் எல்லாம் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துகின்றனர், இடதுசாரி மாணவர் அமைப்பினர். பதிலடிக்கு சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தார், கவர்னர். சமீபத்தில் துவங்கிய பட்ஜெட் கூட்டத் தொடர், அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. பட்ஜெட் உரையில் முதல்வரையும், இடதுசாரி அரசை பாராட்டியும் பல வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. மத்திய அரசை விமர்சிக்கும் வாசகங்களும் இருந்தன.இதைப் பார்த்த கவர்னர், பட்ஜெட் உரையின் கடைசி பாராவை மட்டும் படித்து விட்டு, ஐந்தே நிமிடங்களில் சபையை விட்டு வெளியேறினார். இதை சற்றும் எதிர்பார்க்காத பினராயி விஜயன், 'நாம் எட்டடி அடி பாய்ந்தால், இவர் 16 அடி பாய்கிறாரே. இந்த விஷயத்தை வேறு மாதிரியாகத் தான் கையாள வேண்டும்...' என, புலம்புகிறார்.பதவி நீடிக்குமா?'கட்சியை விட்டு போனவர்களை எல்லாம் தேடிப்பிடித்து மீண்டும் சேர்க்கும் வேலையில் இறங்கி விட்டார் போலிருக்கிறது...' என, கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பற்றி கிண்டலடிக்கின்றனர், காங்கிரசார்.இங்கு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, சமீபத்தில், மாநில பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டார். தனக்கு தலைவர் பதவி கிடைத்ததற்காக வித்தியாசமாக எதையாவது செய்து, கட்சி மேலிடத்தை அசத்த திட்டமிட்டார், விஜயேந்திரா. அவரது கண்ணில் முதலில் சிக்கியது, ஜெகதீஷ் ஷெட்டர். இவர், பா.ஜ., சார்பில் முதல்வராக பதவி வகித்த அனுபவம் உள்ளவர். கடந்த சட்டசபை தேர்தலில் கட்சி மேலிடம் இவருக்கு சீட் வழங்கவில்லை. இதனால், தேர்தல் சமயத்தில் காங்கிரசுக்கு தாவினார்.மாநிலம் முழுதும் காங்கிரஸ் வெற்றி பெற்றும், அந்த கட்சி சார்பில் போட்டியிட்ட ஷெட்டர், தோல்வி அடைந்தார். இதையடுத்து, அவரை அலேக்காக துாக்கி வந்து, மீண்டும் பா.ஜ.,வில் இணைத்து, கட்சி மேலிடத்தை குளிர்விக்க முயற்சித்துள்ளார், விஜயேந்திரா.இதைப் பார்த்த காங்., தலைவர்கள், 'பா.ஜ.,வில் வயதானவர்களை ஓரம் கட்டுகின்றனர். விஜயேந்திரா மட்டும், வயதானவர்களை தேடிப்பிடித்து கட்சியில் சேர்க்கிறார். அவரது தலைவர் பதவி நீடிப்பது சந்தேகம் தான்...' என, கிண்டலடிக்கின்றனர்.