உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!

அரண்டவன் கண்ணுக்குஇருண்டதெல்லாம் பேய்!

'எங்கள் தலைவருக்கு பயம் வந்து விட்டது; அதனால் தான் அவசரப்படுகிறார்...' என, தெலுங்கானா மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவைப் பற்றி, அவரது கட்சியினரே கிண்டலடிக்கின்றனர்.இம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல், அடுத்தாண்டு நவம்பரில் தான் நடக்க வேண்டும். சந்திரசேகர ராவோ, அதற்கு முன் சட்டசபையை கலைத்து விட்டு, மீண்டும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். தெலுங்கானாவில், இதுவரை ஆளுங்கட்சிக்கு சரியான போட்டி இல்லாமல் இருந்தது. இதனால், அலட்சியத்துடன் செயல்பட்டு வந்தார் சந்திரசேகர ராவ். சமீப காலமாக, இங்கு பா.ஜ., அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் நடந்த ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், கணிசமான வார்டுகளில் பா.ஜ., வெற்றி பெற்றது; இது, சந்திரசேகர ராவுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. தனக்கு நெருக்கமான சில மூத்த அரசியல் தலைவர்களை அழைத்து, சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.அப்போது, 'சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. பா.ஜ., இன்னும் பெரிய கட்சியாக வளர்ந்து விடும் வாய்ப்பு உள்ளது. அதற்குள் தேர்தலை நடத்தி, மீண்டும் ஆட்சி அமைத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிம்மதியாக இருக்கலாம்...' என, அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். இதையடுத்து, சட்டசபை தேர்தலுக்கு தன் கட்சியினரை தயார் படுத்தி வருகிறார் சந்திரசேகர ராவ். அவர்களோ, 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்...' என, கேலி பேசுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை