'இனி, கட்சி தொண்டர்களை தக்க வைப்பது மிகவும் சிரமமான காரியம் தான்...' என பெருமூச்சு விடுகிறார், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே.காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து, கூட்டணி ஆட்சி அமைத்து, முதல்வராக அதிகாரத்தை அனுபவித்து வந்தார், உத்தவ் தாக்கரே.இவரது கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்களை வளைத்து, பா.ஜ., கூட்டணியில் ஐக்கியமாகி விட்டார்; இதற்காக, அவருக்கு முதல்வர் பதவியை பரிசளித்தது, பா.ஜ., மேலிடம்.ஆட்சி அதிகாரம் இருப்பதால், சிவசேனாவில் உள்ள எஞ்சியநிர்வாகிகளையும், தன் பக்கம் இழுத்து வருகிறார், ஷிண்டே. 'உண்மையான சிவசேனா யார்' என முடிவு செய்யும் அதிகாரம், மஹாராஷ்டிரா சட்டசபை சபாநாயகரிடம் இருந்தது. சமீபத்தில் இதில் உத்தரவு பிறப்பித்த சபாநாயகர், 'ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான், உண்மையான சிவசேனா' என, அறிவித்தார். இதனால், தன்னுடன் இருக்கும் மீதமுள்ள நிர்வாகிகளும், ஷிண்டே பக்கம் ஓடி விடுவரோ என கவலையில் ஆழ்ந்துள்ளார், உத்தவ் தாக்கரே.'சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து, நீதிமன்றத்துக்கு செல்வோம். விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் நம் பலத்தை நிரூபிப்போம். பொறுமையாக இருங்கள்...' என, கட்சி நிர்வாகிகளுக்கு தைரியம் அளித்து வருகிறார், உத்தவ் தாக்கரே. ஷிண்டே தரப்பினரோ, 'உத்தவ் தாக்கரேயின் கனவு பலிக்காது...' என, கிண்டலடிக்கின்றனர்.