தமிழக ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு: தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கொள்கையின் அடிப்படையிலேயே, துாத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழிக்கு ஓட்டுகள் கிடைத்ததே தவிர, கருணாநிதியின் மகள் என்பதற்காக இல்லை. இதை எல்லாரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.டவுட் தனபாலு: கனிமொழிக்கு ஓட்டுகள் வேணும்னா, கொள்கை ரீதியாக கிடைச்சிருக்கலாம்...ஆனா, அங்க போட்டியிட, 'சீட்' கிடைத்தது, கருணாநிதியின் மகள் என்பதால் மட்டுமே என்பதில், 'டவுட்'டே இல்லை!அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் கே.பி.முனுசாமி: ஜெயலலிதா பின்னால் நின்று அதிகாரத்தை சுவைத்தவர் சசிகலா. இன்று இக்கட்சியை காப்பாற்றுவேன்; வாருங்கள் என்கிறார். அந்த அறிக்கை வெளியாகி, 24 மணி நேரமாகி விட்டது. எத்தனை பேர் சென்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த, ஒரு சிலர் முயற்சிக்கின்றனர்.டவுட் தனபாலு: ஜெ.,யுடன் இருந்து அதிகாரத்தை சசிகலா சுவைத்தபோது நீங்க எங்க இருந்தீங்க... ஜெ.,க்கு நிகராக, இன்னும் சொல்ல போனா, ஜெ.,வை விட ஒரு படி மேலாக சசிகலாவுக்கு காவடி துாக்கிய முன்வரிசை தலைவர்களில் நீங்களும் ஒருத்தர் என்பதை அ.தி.மு.க., தொண்டர்கள் மறந்திருக்கவே மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி: அ.தி.மு.க., அதிக தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கம். கடந்த லோக்சபா தேர்தலில்,19.39 சதவீதம் ஓட்டுகள் பெற்றது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 20.46 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளோம். தேர்தலில் வெற்றி, தோல்வியை சகஜமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். 2026ல் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் அ.தி.மு.க., வெற்றி பெற்று, பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம். அ.தி.மு.க., விற்கு சிறு சரிவு ஏற்பட்டாலும், அதன் பின், மிகப்பெரிய வெற்றியை பெறும்; அது தான் சரித்திரம். டவுட் தனபாலு: தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம் தான்... எம்.ஜி.ஆர்., - ஜெ., காலத்திலும் கட்சிக்கு தோல்விகள் கிடைத்துள்ளன... ஆனா, தொடர்ந்து 10 தேர்தல்களில் பழனிசாமி தலைமையில் கட்சி தோற்று கொண்டே இருப்பது ஏன்னு யோசித்து பார்க்கலையா என்ற, 'டவுட்' வருதே!