திருப்பூர் : அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த, இரண்டு லட்சம் மாணவ, மாணவியருக்கு, 'கட்ஆப்' மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் நேற்றுமுன்தினம் வெளியானது.திருப்பூர் மாவட்டம், பல்லேகவுண்டம்பாளையம், சரவணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த சுஜித் ('கட் ஆப்' - 198.5) ஐந்தாவது இடத்தையும், சுகந்த் ('கட் ஆப்' -198) எட்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இருவரும், ஊத்துக்குளி அடுத்த செங்காளிபாளையம் ஊராட்சி, அருவன்காட்டுப் பாளையத்தை சேர்ந்த தங்கராசு - பூங்கொடி தம்பதியரின் மகன்கள். தங்கராசு, விவசாயி. பிளஸ் 2 தேர்வில் சுஜித், 600க்கு, 567 மதிப்பெண்ணும், சுகந்த், 564 மதிப்பெண்ணும் பெற்றிருந்தனர்.மாணவர்கள் சுஜித், சுகந்த் கூறுகையில்,' புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் இருவரிடமும் உள்ளது. கம்ப்யூட்டர் இன்ஜி., படிப்பில் இணைய உள்ளோம். எங்களுக்கு ஆசிரியர்கள் ஸ்ரீதேவி, மாடசாமி, மயில்சாமி ஆகியோர் வழிகாட்டியாக இருந்தனர். அவர்களின் உந்துதலால், கணக்கில் 100, உயிரியியல், வேதியியலில், 99 மதிப்பெண் பெற்றோம். உயர்கல்வியில் சாதிக்க முயற்சிப்போம்'' என்றனர்.சரவணபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் கூறுகையில், 'எங்கள் பள்ளி அனைத்து மாணவருக்கும் முதலில் ஒழுக்கத்தை போதிக்கிறோம். சமுதாயத்துக்கு நல்ல மாணவரை உருவாக்கினால், கல்வி தன்னால் வரும். இன்ஜி., கல்லுாரி தரவரிசைப்பட்டியலில், எங்கள் பள்ளி மாணவர்கள் இடம் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,' என்றார்.