வனத்தில் துாங்கும் யானைகள் வீடியோ பதிவு வைரல் ஆனது
பொள்ளாச்சி : ஆனைமலை புலிகள் காப்பகத்தில், தாய் யானை உள்ளிட்ட குடும்பத்தோடு குட்டி யானை துாங்கும் வீடியோவை, வனத்துறை கூடுதல் தலைமை செயலர், சமூக வலைதளத்தில் பதிவிட்டது வைரலாகியுள்ளது.கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில், யானை, மான், காட்டு மாடு உள்ளிட்ட பல வகையான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வால்பாறை அடர்ந்த வனப்பகுதியில், தாய் யானை உள்ளிட்ட குடும்பத்துடன் குட்டி யானை துாங்குவது போன்று, வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ, 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வீடியோவை பதிவிட்டுள்ளார்.அதில், அழகான யானை குடும்பம், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் துாங்குகிறது. குட்டி யானைக்கு, 'இசட்' பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.குடும்ப உறுப்பினர்களின் இருப்பை உறுதி செய்து கொள்கிறது இளம் யானை. இது, நம் குடும்பங்களை போன்றுள்ளது, என்ற கருத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் வெளியான வீடியோ வைரலாகியுள்ளதுடன், குட்டி யானை துாங்குவதை கண்டு பலரும் தங்களது மகிழ்ச்சியை பதிவு செய்து வருகின்றனர்.