இன்னும் சிக்காத ஊழல் பெருச்சாளிகள்! அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: அரசு அலுவலகங்களில் ஊழல் கரைபுரண்டு ஓடுவது, பத்திரப்பதிவுத் துறையில் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு சொத்தின் மதிப்பைப் பொறுத்து, லஞ்ச தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஊழலில் வரும் பணத்தை, பத்திரப் பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களும் அவர்கள் வகிக்கும் பதவிக்கு தகுந்தாற்போல் பிரித்துக் கொள்கின்றனர்.இதில், சார் - பதிவாளருக்கு மிகப்பெரிய தொகை சென்று விடும். பொதுவாக, இந்த சார் - பதிவாளர்களுக்கு லஞ்சப் பணம் வாங்கி தருபவர்கள், அந்த அலுவலகங்களில், வெளியே இருக்கும் பதிவு செய்த ஆவண எழுத்தர்கள் தான். ஒவ்வொரு சார் - பதிவாளரும் ஒரு பத்திரப் பதிவு அலுவலகத்தில் பணியில் சேரும்போதே, முன்னர் அங்கு பணியில் இருந்த சார் - பதிவாளர் வாயிலாக, எந்த பத்திரஎழுத்தருடன் வரவு - செலவு வைத்துக் கொண்டால் பிரச்னை இருக்காதுஎன்பதை அறிந்து, அந்த ஆவண எழுத்தரிடம் நெருக்கம் காட்டி ஊழல் செய்வது வழக்கம். பொதுவாக, ஒரு சார் - பதிவாளர் அரசு பணியில் சேரும்போது அவருக்கும், அவரது குடும்ப உறவுகளுக்கும் எவ்வளவுசொத்துக்கள் இருந்தது என்பதையும், பணியில் சேர்ந்த பின், சொத்துக்கள் எவ்வாறுஉயர்ந்தது என்று ஆய்வு செய்தாலே போதும்... அவர்கள் எவ்வளவு பெரிய ஊழல் பெருச்சாளிகள் என்பதை நாம் அறியலாம்.அந்த வகையில், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை சார் - பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் சிவலோகநாதன் 10,000 ரூபாய் லஞ்சம்வாங்கியதாகவும், அவருக்கு உதவிய ஆவண எழுத்தர் ஆறுமுகத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சமீபத்தில் கைதுசெய்துள்ளனர்.இதுபோன்று, தமிழகத்தில் ஒவ்வொரு பத்திரப் பதிவு அலுவலகத்திலும் பல நுாறு ஊழல் பெருச்சாளிகள் சிக்காமல் பணிபுரிந்து கொண்டு தான் உள்ளனர். எது எப்படியோ... லஞ்ச ஒழிப்பு போலீசார்,'நாங்களும் கண்ணியமாக கடமை செய்கிறோம்' என்று, அவ்வப்போது ஒரு சிலரையாவது பொறி வைத்துப் பிடிப்பது பாராட்டத்தக்கது.வலியுடன் வலியுறுத்திய வயநாடு!
உதயம் ராம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:இயற்கையோடு இணைந்தும், இசைந்தும் வாழ்ந்துகொண்டிருந்த கேரளாவின் வயநாடில், நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்ட மக்களின் உடல்கள் மண்ணுக்குள்புதைந்து கிடந்ததை பார்த்த போதும், வீடுகளை இழந்தும், உறவுகளை இழந்தும் நின்ற நம் சகோதர உறவுகளைப் பார்த்த போதும், தேசம் செயலிழந்து போனது.தங்கள் உயிரைத் துச்சமென மதித்து, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வரும் ஒவ்வொரு மீட்புப்பணி கள வீரர்களையும்கைகூப்பி வணங்குவோம்.கேரளா, உத்தரகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்படுவதும், அதனால் உயிர் பலி ஏற்படுவதும் வழக்கம் தானே என்று காரணம் கூறி, கடந்து போக முடியவில்லை.ஏனெனில், சமீப காலங்களில் கேதார்நாத்தில்ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, இமயமலைஅடிவாரங்களில் ஏற்படும் பனிமலை வெடிப்பு, உத்தரகண்டில் மேக வெடிப்புகளால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு போன்றவை இயற்கைக்குமாறான பருவ மாற்றங்களால் ஏற்படும் பெரும் ஆபத்துகளே!ஐ.நா., சபையின் பருவநிலை மாற்றம் குறித்த குழு, 'கேரள மாநிலத்தில் பெரும் மழை, நிலச்சரிவு ஏற்படும்' என்று, சில ஆண்டுகளாக எச்சரித்தும்கூட கேரள அரசும், அரசுத் துறையினரும் அலட்சியமாய் இருந்திருப்பதை பலரும் சுட்டிக்காட்டுவது அதிர்ச்சியைத் தருகிறது. வரும் முன் காப்பதே அரசின் தலையாயக் கடமை.வருமானம் ஈட்டும் பேராசையில், மலைப் பிரதேசங்களை சுற்றுலாத்தலங்களாகவும், குடியிருப்புக்கு கட்டடங்கள் கட்ட அனுமதித்ததுமே, நிலச்சரிவுக்கு காரணமாக இருந்திருக்கிறது.இனியாவது மலை பாங்கான பகுதிகளில் வீடுகள் கட்டுவது தவிர்க்கப்பட வேண்டும்; அதை மீறுவோர் கண்டிப்புடன் தண்டிக்கப்பட வேண்டும்.'இயற்கையை ரசிக்கத்தான் இறைவன்தந்திருக்கிறான். அதை தங்கள் வசதிக்கேற்றபடி செயற்கையாக மாற்றி னால், அதற்கான தண் டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும்' என்கிற விழிப்புணர்வை, வயநாடு வலியுடன் வலியுறுத்தியிருக்கிறது. இயற்கையை நாம் பாதுகாத்தால் தான், இயற்கை நம்மை பாதுகாக்கும் என்கிற உண்மையை, இனியாவது மனிதன் உணர்ந்து வாழ வேண்டும்!கர்நாடக அரசை எப்படி நம்புவது?
பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம்,கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடலில் கலக்கும்கூடுதல் நீரை சேமித்து வைக்கவே, மேகதாதுவில் அணை கட்டுவதற்குமுடிவு செய்துள்ளோம்.இந்த அணையால்கர்நாடகாவை விட,தமிழகத்திற்கு தான் அதிக பயன் உள்ளது. இது குறித்து தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயார்' என, கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசிஉள்ளார்.அதேபோல், இந்த அணையால் கர்நாடகாமற்றும் தமிழகம் ஆகிய இரண்டு மாநிலமும் சரிசமமாக பலனடையும்.எனவே, மேகதாது அணையின் கட்டுமானப் பணிகளுக்கு தமிழகம் பச்சைக் கொடி காட்டும் என்று நம்புவதாக கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.இவர்கள் இருவரும் பேசுவது, கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது;ஆனால், இவர்கள் சொல்வதை எப்படி நம்புவது?காமராஜர் தமிழக முதல்வராக இருந்த போது, தமிழகத்திற்கு தண்ணீர்தேவை என்றால்,கர்நாடகாவின் அப்போதையமுதல்வர் நிஜலிங்கப்பாவிற்கு ஒரு போன் செய்தாலே, தண்ணீரை திறந்து விட்டு விடுவராம். அப்படி ஒரு காலம் இருந்தது. இப்போதைய நிலைமை அப்படியா இருக்கிறது?பருவ மழை குறைவாக பெய்யும் ஆண்டுகளில், இப்போது இருக்கும்அணைகளில் உள்ள தண்ணீரை முறையாக நீங்களே பங்கிட்டுதமிழகத்திற்கும் வழங்கி வந்திருந்தால், இப்போது நீங்கள் சொல்வதை நம்பியிருப்போம் அல்லதுதமிழகம் கோரிக்கை விடுத்த உடனேயாவது, தண்ணீர் வழங்கியிருந்தால் கூட உங்கள் வார்த்தையை நம்பியிருப்போம்.ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லையே... உச்ச நீதிமன்றம்,காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் போன்ற அமைப்புகள், தமிழகத்திற்கு தண்ணீர்வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டால், அதையும் மதிப்பதில்லை. அணை கட்டுவது நல்லதுதான் என்றாலும் கூட, கர்நாடகாவிடமிருந்து இதுவரை கிடைத்த அனுபவத்தை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது, எத்தனை முறை பேச்சு நடந்தாலும்,இப்போதைக்கு, மேகதாது அணை கட்ட தமிழகம் அனுமதி வழங்க வாய்ப்பே இல்லை.