உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்

குறை கூறினால் நல்லாட்சி கிடைத்துவிடுமா?

மா.சண்முகசுந்தரம், பாளையங்கோட்டை, நெல்லை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: லோக்சபாவிலும் சரி,சட்டசபைகளிலும் சரி, ஆக்கப்பூர்வமான எந்த விவாதத்திற்கும் இடம் கொடுக்காமல்,நேரத்தை மட்டுமே வீணடித்துக் கொண்டிருக்கின்றனர், நாம் அங்கு அனுப்பிய பிரதிநிதிகள்; நம் பணம் தான் வீண் விரயமாகிறது.விதிமுறைகள் பல இருந்தும், எந்த விதிகளையும் கடைப்பிடிக்காமல் தனக்கென ஒரு வழியை உருவாக்கி, 'என் வழி தனி வழி' என, கட்சியின் ஒவ்வொரு தலைவரும் செயல்பட்டு, நம் பணத்தை நாசமாக்குகின்றனர்.பொதுமக்களுக்கு நன்மைகளை செய்து ஆட்சிக்கு வருவதை விடுத்து, எதிர்க்கட்சி மற்றும் பிற கட்சியினரை குறை கூறி மட்டுமே, ஆட்சிக்கு வர துடிக்கின்றனர்அல்லது ஆட்சியில் தொடர முயல்கின்றனர்.குறிப்பாக காங்கிரசுக்கு, ஊழலை ஒழிக்க வேண்டும் என்பது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அதேபோல் தமிழகத்தில், தி.மு.க.,வும், அதன் தோழமைக்கட்சிகளும், அ.தி.மு.க., ஓய்ந்து விட்டது எனக் கூறி, அக்கட்சியில்உள்ள முக்கிய உறுப்பினர்கள் அதிருப்திஅடைந்து விட்டதாக, 'சீன்'போடுகின்றனர்.ஏன்... சாராய சாவுகளையும், ஊழல்களையும், சட்ட - ஒழுங்கையும் கண்டுகொள்ளாமல், மக்கள் மனதை திசை திருப்ப வேண்டும் என்ற நல்லெண்ணம்!ஆளுங்கட்சிக்கு, நல்லாட்சி நடத்த வேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தும் கிடையாது. விழா நடத்துவதும், போஸ்டர் ஒட்டுவதும், கட்சி கொடி கட்டுவதும், விருதுகள் வழங்குவதும் இன்னும்பிற விளம்பர எண்ணங்களோடு மட்டும்ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. குடும்ப ஆட்சியை மன்னர் ஆட்சியாக தொடர்வதில் மிகவும் குதுாகலம் அடைகின்றனர்.அரசியல் கட்சிகள் அனைத்தும், பிற கட்சிகள் மீதான குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதைக் குறைத்து, அவரவர் கட்சியின் நலனை கவனத்தில் கொள்வது நல்லது. இவர்கள் செய்யும் அரசியல் நமக்கு சலிப்பைஏற்படுத்துகிறது.மக்களுக்கான நல்லவற்றைச் சிந்திக்கும்கட்சிக்கு மட்டுமே இனி நாம் ஓட்டு போட வேண்டும்!

பெண்களுக்குமுழு சுதந்திரம் இல்லையே?

பி.ஜே.நவீன், கோனேரிப்பட்டி, சேலம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில், பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் என பெண்களுக்கெதிரான குற்றங்கள் தொடர்வதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. கோல்கட்டா பயிற்சி பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடுமையை, நாடே பேசுகிறது. மிகப் பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.இந்த நேரத்தில் கூட, கிருஷ்ணகிரி மாவட்டம்,கந்திக்குப்பம் பகுதியில்,கிங்ஸ்லி மெட்ரிக் பள்ளியில், காவேரிப்பட்டினத்தைசேர்ந்த என்.சி.சி., பயிற்சியாளர் சிவராமன் என்பவர்,12 வயதான எட்டாம் வகுப்பு மாணவியை, பாலி யல் பலாத்காரம் செய்து,வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்த நிகழ்வைப் படிக்க நேர்ந்தது.நம் நாட்டில், கல்வி, மருத்துவம், விளையாட்டு, வங்கிகள், அலுவலகங்கள், பல்வேறு நிறுவனங்கள் என அனைத்து துறையிலுமே, பெண்களின் பாதுகாப்பு, கேள்விக்குரியதாக மாறி வருகிறது.எத்தனையோ பெண்களின் பாலியல் துயரங்கள், வெளியில் சொல்ல முடியாத நிகழ்வுகள், தொடர்ந்தபடி உள்ளன.ஒரு பெண் பயிற்சி மருத்து வரை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த மனித மிருகங்களை போல, இன்னும் கண்ணுக்கு தெரியாத மிருகங்களின் பாலியல் குற்றங்கள், நம் நாட்டில் வெளிவராத அவலமாக உள்ளது. நம் பிறப்பும் ஒரு பெண்ணின் வாயிலாகத் தான் என்பதை சற்றும் உணராத ஓநாய்களின் கொடூரமான செயல்களுக்கு, நாட்டில் எத்தனையோ பெண்கள் இரையாகி வருகின்றனர்.இதைத் தடுக்க, நம் நாட்டில்கடுமையான சட்டமும், தண்டனையும் நிறைவேற்றப்படுகிறதா என்றால் இல்லை; கைது நடவடிக்கைகளும், சிறை அடைப்புகள் மட்டுமே மிஞ்சுகிறது. எத்தனை போராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள் நடத்தினாலும், இத்தகைய பாலியல்குற்றங்களுக்கான சரியான தீர்வு கிடைக்காதவரை, பெண்களுக்கு முழு சுதந்திரம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மின்கட்டண ஷாக் தாங்காது சாமி!

குரு பங்கஜி, சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல, மீண்டும் மின் கட்டண உயர்வை அமல்படுத்தி, தமிழக மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது திராவிட மாடல் அரசு. மின்வாரியத்தில் தலை விரித்தாடும் ஊழல், அதிக விலை கொடுத்து, தனியாரிடமிருந்து வாங்கப்படும் மின்சாரம் மற்றும் அதில் மடை மாறும் லஞ்ச கமிஷன், அனாவசிய இலவசங்கள், கனிமவள சுரண்டல், மக்கள் வரிப்பண கொள்ளை மற்றும் வரி ஏய்ப்பு போன்ற ஊழல்களால் தான், அரசுக்கு பெரும் நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் வரிச்சுமை, மின் கட்டண உயர்வு , விலைவாசி ஏற்றம் என, இறுதியில் ஏழை நடுத்தரமக்கள் தலையில் விடிகிறது.மின் கட்டண உயர்வு மற்றும் விலைவாசிஏற்றத்தால் மக்கள் படும் வேதனை, ஊழலின் வாயிலாக கோடிகளை குவித்து அதிகார போதையில் ஆட்டம் போடும் குபேர மாடல்களுக்கு தெரியவா போகிறது?உள்ளங்கை நெல்லிக்கனி போல், ஒன்று மட்டும் உறுதி! தங்கள் மீது திணிக்கப்படும் வரிச்சுமைகள் மற்றும்அரசின் நிர்வாக சீர்கேடுகளால், பொறுமை இழந்து கொதிக்கும் மக்கள் வீதிக்கு வரும் நாள், வெகு தொலைவில் இல்லை. அப்போது, வெகுண்டெழும் மக்களின்கோபம், நாக பாம்பாய் சீறும்! மக்கள் தரும் அதிர்ச்சி வைத்தியம், அரசுக்கு பாடம் கூறும்.ஆள்வோர் சிம்மாசனம், மின்சார நாற்காலியாய் மாறும்!

தேசிய கொடியை தெருவில் வீசலாமா?

கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சில தினங்களுக்கு முன், நம் நாட்டின் சுதந்திர தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடினோம். பலரும்தங்கள் அலுவலகங்களிலும், தங்கள் இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்றி கொண்டாடினர். சில இடங்களில் தேசிய கொடியை தோரணங்களாக கட்டி, தங்கள் தேச பக்தியை உலகிற்கு எடுத்துக் காட்டினர். சமீபத்தில், நாகர்கோவிலில் உள்ள ஒரு கோவிலில் சுதந்திர தின விழாவின்போது, தேசிய கொடியை தோரணங்களாக கட்டியிருந்தனர். இரண்டு நாள் கழித்து அங்கு சென்றபோது, தோரணங்களாக கட்டப்பட்டிருந்த அந்த கொடிகள், தெருவில் சிதறியபடி கிடந்ததுடன் பலரும் அதை மிதித்தவாறே சென்று கொண்டிருந்தனர். இதைக் கண்டதும் என் மனம் வலித்தது. தேசத்தை விட, அந்த தேசத்தின் கொடி மதிப்பிற்குரியது. அதை இப்படி குப்பையாக கீழே போட்டு, அதை எல்லாரும் மிதிக்கும்படி செய்யலாமா? தேசிய நிகழ்ச்சியை கொண்டாடுவோர் அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அந்த கொடிகளை பத்திரமாக எடுத்து, அப்புறப்படுத்தியிருக்க வேண்டும்; இவ்வாறு அதை புழுதியில் வீசியிருக்கக் கூடாது. சம்பந்தப்பட்டோர் யோசிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

VENKATASUBRAMANIAN
ஆக 22, 2024 08:07

யாருக்கும் மக்களை பற்றி கவலை இல்லை. எப்படி பணம் சம்பாதிக்கலாம என்பதே குறி.இதில் இரண்டு கழகங்களும் ஒன்றே.


Barakat Ali
ஆக 22, 2024 08:05

கோனேரிப்பட்டி நவீன் அவர்களே ...... எத்தனையோ சட்டத்திருத்தங்கள் வந்தும் கூட கொலை, கற்பழிப்பு போன்ற கொடூர குற்றங்களை செய்பவர்களுக்கு குற்றம் நிரூபிக்கப்பட்ட உடனேயே தூக்கு என்கிற நிலை வரவேண்டும் ..... அதைத் தடுக்க மனித உரிமை இயக்கங்கள் உள்ளன ...... மக்களே இத்தகைய குற்றங்களை எதிர்த்துப்போராட ஆவேசப்படுவதில்லை ..... அதாவது தனக்கு என்று பிரச்னை வராதவரை போராட மனம் வருவதில்லை .... வேட்டையாடப்படும் விலங்குகள் ஒன்று சேர்ந்து வேட்டையாடும் விலங்கினை எதிர்க்கும் மனநிலை இருப்பதில்லை .....


Barakat Ali
ஆக 22, 2024 08:00

பாளையம் கோட்டை சண்முக சுந்தரம் அவர்களே ....... இனி வாக்காளர்களாகிய நாம் சுதாரித்தாலும் பயனில்லை .......... தமிழகத்தின் கடனளவு குறித்து அறிந்திருப்பீர்கள் ...... இலவசங்களுக்காகவே கடன்வாங்கப்படுகிறது ......... அந்தக்கடனை திமுக சுமக்கும் என்று நினைத்து கூச்சமின்றி இலவசங்களை வாங்கி அனுபவிக்கும் மக்களுக்குப் புரியாவில்ல்லை அது எதிர்காலத்தில் நமது தலையில்தான் சுமத்தப்படும் என்று .......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை