எஸ்.கண்ணம்மா, விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திரைப்படங்களில் விஜய் என்று உங்களை முன்னிலைப்படுத்திய நீங்கள், அரசியலில் நுழையும் போது, ஜோசப் விஜய் என்று அழுத்திக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டீர்கள். திரைப்படங்களில் சொல்லாத உங்கள் முழு பெயரை, அரசியலில் நுழையும் போது அழுத்தம் திருத்தமாக சொன்னபோதே, நீங்கள் எந்த வித அரசியலை முன்னிலைப்படுத்த போகிறீர்கள் என்பதைக் கூறி விட்டீர்கள். இப்போது இந்திய குடியுரிமை திருத்த சட்டம் பிளவுவாத அரசியலை முன்னிறுத்துவதாக கூறியுள்ளீர்கள்.இந்திய குடியுரிமை திருத்த சட்டம் யாரை, எவ்வாறு பிளவுபடுத்துகிறது என்பதை நீங்கள் விளக்கினால் நல்லது.எங்களுக்குத் தெரிந்த வரை, இந்திய குடியுரிமை திருத்த சட்டம், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கன் போன்ற நாடுகளிலிருந்து, டிசம்பர் 2014க்கு முன் அகதிகளாக வந்த, சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் ஒரு சட்டம். இவர்களில் ஹிந்துக்கள், பார்சிக்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், சமணர்கள், சீக்கியர்கள் அடக்கம்.இதில், இங்கு குடிமக்களாக வசிக்கும் நம் நாட்டு மக்களுக்கு, என்ன பிரச்னை வந்து விடப் போகிறது? இதனால் மக்கள் எவ்வாறு பிளவுபடுவர்? அடிப்படையைப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் இப்போது தான் அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள். இந்த திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, தாராள மனதுடன் கொள்கை முடிவுகளை எடுத்தால் பெரிய அளவில் சாதிக்கலாம். உங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள, அதே திராவிடக் குட்டையில் நீங்களும் ஊறினால், கமலுக்கு நேர்ந்த கதி தான் உங்களுக்கும் ஏற்படும். சுதாரியுங்கள் வாரிசு வருடிகளே!
அ.வ.அருள்முருகன்,
சென்னையிலிருந்து எழுதுகிறார்: எந்த ஒரு தொண்டனும், ஒரு அரசியல் கட்சியில்
தன்னலமற்று உழைத்தாலும், கவுன்சிலர், எம்.எல்.ஏ., - எம்.பி., என்று
உயரும்போது தான், அதைக் கண்டு அடுத்தவர்களும் களப்பணியாற்றுவர். இதற்கு
பா.ஜ.,வில் தமிழிசை சவுந்தர்ராஜன், எல்.முருகன் போன்றோர் உதாரணம்.தி.மு.க.,வில்,
அமைச்சர் துரைமுருகன் - மகன் கதிர் ஆனந்த், அமைச்சர் பொன்முடி - மகன்
தெய்வ சிகாமணி, எம்.பி.,யான டி.ஆர்.பாலு - மகன் டி.ஆர்.பி.ராஜா...முதல்வர் ஸ்டாலின் - மகன் உதயநிதி, ஸ்டாலின் சகோதரி கனிமொழி...வர
இருக்கும் லோக்சபா தேர்தலில், திருச்சி தொகுதிக்கு அமைச்சர்
கே.என்.நேருவின் மகன், திருவண்ணாமலை தொகுதிக்கு அமைச்சர் எ.வ.வேலு மகன்,
கோயம்புத்துாருக்கு பொங்கலுார் பழனிச்சாமி மகன் பைந்தமிழ் பாரி...தென்
சென்னைக்கு மீண்டும் தங்க பாண்டியின் மகள் தமிழச்சி தங்க பாண்டியன், வட
சென்னைக்கு ஆற்காடு வீராசாமி மகன் என, பட்டியல் நீள்கிறது.அ.தி.மு.க.,வில்,
ஜெயகுமார் - மகன் ஜெயவர்தன், பழனிசாமி - மகன் மிதுன்; மறுபக்கம்
ஓ.பி.எஸ்., - மகன் ரவீந்த்ரநாத் என, பட்டியல் நீள்கிறது.பா.ம.க.,விலும்
அப்பா - மகன் பாசம் தொடர்கிறது. இப்படி இருந்தால், எந்தக் கட்சி தான்
வளரும்? வீழ்ச்சிக்குச் செல்வதற்கு முன், சுதாரிப்பது நல்லது! விழித்தெழ வேண்டிய நிலையில் நாமும்!
வி.எச்.கே.
ஹரிஹரன், திண்டுக்கலிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: குளுமை
பிளஸ் பசுமை என்றாலே, தென் மாநிலங்களில் நினைவுக்கு வருவது பெங்களூரு தான்.
இன்று, தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாட, தலைதெறிக்க ஓடுகின்றனர் இளைஞர்கள்.கடந்த, 1980களில் கண்ணாடி அறையில் மின்விசிறி இல்லாமல் இருந்த பெங்களூருவாசிகள் இன்று, ஆந்திராவின் வெப்பத்தை அனுபவிக்கின்றனர்.கடந்த,
1973ல் பெங்களூரு மொத்த பரப்பளவில், 8 சதவீதம் தான் கட்டடங்கள் இருந்தன;
2023ல், 93 சதவீத பரப்பில், பல அடுக்கு கட்டடங்கள் எழுந்து நிற்கின்றன. திட்டமிடாத நகர்மயம், நிலத்தடி நீர்மட்டத்தை பாதித்து விட்டது. கட்டடங்களின்
நிலப்பரப்பு, 1,055 சதவீதம் அதிகரித்து விட்டது; நிலத்தடி நீர்மட்டம், 79
சதவீதம் குறைந்து விட்டது; தாவரங்கள், உள் மாநில பயிரிடும் பணி, 88 சதவீதம்
தொலைந்து விட்டது.கிட்டத்தட்ட, 98 சதவீத ஏரிகள்
ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன; 90 சதவீத ஏரிகளில், சுத்திகரிக்கப்படாத
கழிவுநீர் கலந்து விட்டது. விளைவு, தண்ணீர் பஞ்சம்.ஒருவருக்கு ஏழு
மரங்கள்வெளியேற்றும் ஆக்சிஜன் தேவைப்படும் இடத்தில், ஏழு பேருக்கு ஒரே ஒரு
மரம் என்ற வீதம் தான், தற்போது ஆக்சிஜன் சப்ளை.திட்டமிடாத
நகர்மயம், காற்று மாசு, இயற்கை வளங்கள் சூறை, போக்குவரத்து நெரிசல்,
வேலையில்லா திண்டாட்டம், புதைபடிவ எரிமங்கள் பயன்பாடு, கட்டுப்பாடற்ற
விரிவாக்கம் ஆகிய விளைவுகள் நேரிட்டுள்ளன. ஆட்சியாளர்களுக்கும், சுயநல அரசியல்வாதிகளுக்கும், நீரில்லாத வறண்ட பெங்களூரு, சரியான பாடமாக அமைந்து விட்டது.சென்னைக்கும் இது மிகப்பெரிய பாடம். விழித்தெழ வேண்டிய தருணத்தில் நாம் உள்ளோம்! இல்லாத போனுக்கு கட்டணம்!
ஏ.ஸ்ரீவாஸ்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நான், பதினைந்து
ஆண்டுகளுக்கு முன்பே, பி.எஸ்.என்.எல்., 'லேண்ட் லைனை' அந்நிறுவனத்திடமே
ஒப்படைத்து விட்டேன். சமீபத்தில் அந்நிறுவனத்திடமிருந்து எனக்கு, 'பில்'
வந்தது. கட்ட வேண்டிய ரூபாய் எவ்வளவு தெரியுமா...!முன்பு படித்த ஒரு ஜோக், நினைவுக்கு வருகிறது...கம்ப்யூட்டர் அறிமுகமான சமயத்தில், அமெரிக்க மின்சார கழகத்திலிருந்து, கட்டண நோட்டீஸ்கள் அனுப்ப ஆரம்பித்து இருந்தனர். வெகு
ஆண்டுகளாகப் பூட்டியே இருந்த வீட்டின் உரிமையாளர் ஒருவருக்கு, '0 டாலர்
மின் கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும்' என, 'பில்' வந்தது.மின்
அலுவலகத்தில் முறையிட்டும் பலனில்லை. அவர் சற்று புத்திசாலித்தனமாக
யோசித்து, மின் கழகத்தின் பெயரில், 'டாலர் 0' என எழுதி ஒரு காசோலையை
அனுப்பி வைத்தார். கம்ப்யூட்டரும் அதை ஏற்றுக் கொண்டு, நோட்டீஸ் அனுப்புவதை
நிறுத்தியது.நானும் அதைத் தான் செய்யணுமோ!