எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவித்தாயிற்று. வேட்பாளர்கள் பட்டியலும் வெளிவந்தாயிற்று.தேர்தல் நடைபெறும் கால கட்டங்களில், பொதுவாக எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு சுமத்தி, ஆட்சிக்கு வரத் துடிப்பது வழக்கம்.கடந்த பத்தாண்டு கால பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு மீது, எந்த ஊழல் புகாரையும் சுமத்தி, வாக்கு சேகரிக்க முடியவில்லை.தற்போது தான், தேர்தல் பத்திரங்கள் விஷயம் கிடைத்திருக்கிறது.தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட நன்கொடையை, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வாங்கி, கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.லட்சக்கணக்கான கோடிகளில் புரளும் தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் கட்சி கூட, லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திடம், 509 கோடி ரூபாய் வாங்கி இருக்கிறது.நீதியும், நியாயமும் மட்டுமே பேசும் கம்யூனிஸ்ட்களும் இந்த நன்கொடை விஷயத்தில் விதிவிலக்கில்லை. பெரும்பாலான மாநிலங்களை ஆட்சி செய்யும் பா.ஜ., கூடுதலாக வாங்கி இருக்கிறது.எனவே, தேர்தல் பத்திரங்கள் நன்கொடை விஷயத்தை முன் வைத்து, பிரதமரையோ, மத்திய அரசையோ, பா.ஜ.,வையோ விரல் சுட்டி குற்றம் சாட்ட, வேறு எந்த கட்சியாலும் முடியாது என்பது புரிந்து விட்டது. எப்படி கையாளுகின்றனர் என்று பார்ப்போம்! எங்களுக்கு விடை தெரியணுமே!
ரா.குமார்,
அம்மாபாளையம்,திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்'
கடிதம்: தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை வெளிவந்தாயிற்று. ஏற்கனவே,
சட்டசபை தேர்தலின்போது கொடுத்த அறிக்கைகளில், ஒன்றிரண்டு இதோ: நான் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் மனு கொடுக்க இணைய தளம் நிறுவப்பட்டு, 100 நாட்களில் எல்லாருடைய குறைகளும் தீர்க்கப்படும்- இப்படி சொன்னவர் செய்தாரா? மூன்று ஆண்டுகளாச்சு. பொறியியல் பட்டதாரி அனைவருக்கும் வேலை கிடைத்ததா? வேலை வாய்ப்பற்ற, குறைந்தபட்ச ஊதியம் பெறுவோர் புள்ளி விபரம் எங்கே? உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினீர்கள். எத்தனை தொழிற்சாலைகள் இங்கே வந்துள்ளன? எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளீர்கள்?
சமீபத்தில், ஓசூரில் புதிதாக துவங்கிய கம்பெனி, எல்லா வெளி மாநில
பெண்களையும் ஆயிரக்கணக்கில் பணி அமர்த்தி உள்ளது. அதை பற்றி நீங்கள் ஏன்
வாய் திறக்கவில்லை?யாராவது துண்டுச் சீட்டில், எதையாவது எழுதிக்
கொடுத்தால் அப்படியே படிப்பது அல்ல உங்கள் வேலை. கள நிலவரத்தை நன்றாக
அறிந்து செயல்படுங்கள்.அடுத்த இரண்டு ஆண்டு களில், நாங்கள் பதில் சொல்ல வேண்டி இருக்கிறதே... எங்களுக்கு விடை தெரியணுமே! 'சிங்கார' ஆட்சியா, 'சீர்கெட்ட' ஆட்சியா?
ஓ.என்.ராமநாதன்,
மதுரை-யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சொத்துக் குவிப்பு
வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும்,
50,000 ரூபாய் அபராதமும் விதித்து, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றம், தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.உடனே,
சட்டசபை சபாநாயகர் அப்பாவு, தன் எம்.எல்.ஏ., பதவியை, பொன்முடி தக்க
வைத்துக் கொள்ளலாம் என, அவசர அவசரமாக அறிவித்தார். அமைச்சர் பதவி தர
வேண்டும் என்று, முதல்வர்ஸ்டாலினும் முனைப்பு காட்டினார். ஆனால், கவர்னர்
ரவி, கிடுக்கி போட்டு, ஆற வைத்து விட்டார்.'சுப்ரீம் கோர்ட், தீர்ப்பை நிறுத்தி தான் வைத்துள்ளது; ரத்து செய்யவில்லை' என்கிறார் கவர்னர்.குற்றம் புரிந்து தண்டனை பெற்ற மாஜி அமைச்சருக்கு, மீண்டும் அமைச்சர் பதவி வழங்குவதில் அப்படி என்ன அவசரம்? அவருக்கு
வாக்களித்த மக்களும், அவரது அலுவலக பணியாளர்களும் அவரை மதிப்பரா? கவுரவமான
நபர், 'நான் 'கிளீன் சிட்' என கோர்ட் தீர்ப்பு சொன்ன பிறகு, அமைச்சர் பதவி
கொடுத்தால் போதும்' என்று சொல்லி இருக்க வேண்டும் அல்லவா!எதுவுமே
நடக்கவில்லை. ஆட்சியும், அதிகாரமும் மட்டுமே இருந்தால் போதும் என்ற
குறிக்கோளுடன் மட்டுமே இந்த அரசு செயல்படுவது போல் தெரிகிறது. மக்களுக்கு
இந்த எண்ணம் தெரியக் கூடாது என்பதால், 'மக்களாட்சி நடத்துகிறோம்; மக்களைத்
திருப்திபடுத்துவது ஒன்றே எங்கள் குறிக்கோள்' என்பதாக, 'சீன்' போடுகிறது.'சிங்கார' ஆட்சி, 'சீர்கெட்ட' ஆட்சி என்ற விமர்சனத்தைப் பெறுவதற்கு முன், தன் போக்கை மாற்றிக் கொண்டால் நல்லது! அதிகரிக்கும் 'ரீல்ஸ்' மோகம்!
வி.எஸ்.ராமு,
செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: -------------------------------------------------துாத்துக்குடி
மாவட்டம், சாத்தான்குளம் அருகே, குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து அதில்
குதித்த, 'யு டியூபர்' உட்பட மூன்று பேர் மீது, ஐந்து பிரிவுகளில்
போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.உயிருக்கு ஆபத்து ஏற்படும் என
தெளிவாக தெரிந்தும், 'ரீல்ஸ்' மோகத்தில், ஒருவருக்கொருவர் போட்டி போட்டு,
சாகசங்களில் ஈடுபட்டு, அதை வீடியோவாக எடுத்து, வெளியிடும் போக்கு சமீப
காலமாக, மாணவர்களிடையே அதிகரித்திருக்கிறது.வாகனங்களில் அதிவேகமாக
செல்வது; சக்கரங்களைத் துாக்கியபடியே, வாகனங்களை இயக்கி, 'ஹீரோ'வாக தம்மைக்
காட்டிக் கொள்வது; நீர்நிலைகள், மலை பிரதேசம், பள்ளத்தாக்கு, காடுகள்,
கடல், மொட்டைமாடி, அருவி என பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆபத்தான முறையில்
சாகசங்கள் செய்வது என, இத்தகையவர்களின் வீடியோக்களைப் பார்த்தால் தலை
சுற்றுகிறது.இன்றைய இளைஞர்கள், வாசிப்பு பழக்கத்தை துாக்கி எறிந்து, 'ஸ்மார்ட் போன்' கதியாகக் கிடக்கின்றனர்.எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை சிறிது கூட இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. பெற்றோர்
கேள்வி கேட்டால், 'நீயெல்லாம் இன்னும் ஏன் உயிரோடு இருக்கே...' என்ற
எண்ணத்துடன், அற்பப் புழுவைப் பார்ப்பது போல் பார்க்கின்றனர்.பள்ளியில்
படிக்கையிலேயே இவர்களின் எண்ணத்தை சீர்படுத்தி, நல்வாழ்க்கை வாழ இது தான்
சிறந்த வழி எனச் சொல்லிக் கொடுத்தால், தீய சகவாசங்கள ஏதும் இன்றி, ஓரளவு
இவர்கள் சீரிய முறையில் வளர்வரோ என்னவோ!இந்த பூனைகளுக்கு, எப்படி, யார் மணி கட்டுவது... தெரியவில்லை!