உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / சரியாகச் சொன்னார் மோடி!

சரியாகச் சொன்னார் மோடி!

இரா. பாலாஜி, திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஹரியானாவில், கர்னால், அம்பாலா, குருஷேத்ரா தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, அம்பாலாவில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 'நம் ராணுவத்துக்கும், ராணுவ வீரர்களுக்கும் துரோகம் செய்த வரலாறு காங்கிரசுக்கு உண்டு. அக்கட்சியின் முதல் ஊழல், ராணுவத்தில் இருந்து தான் துவங்கியது. 'ஆட்சியில் இருக்கும்போதெல்லாம், ராணுவத்தில் ஊழல் செய்யும் சாதனையை, காங்கிரஸ் தொடர்ந்தது. போபர்ஸ் ஊழல், நீர்மூழ்கிக் கப்பல் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் என, அதற்கான பட்டியல் மிகவும் நீளம். 'வெளிநாட்டில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து பணம் சம்பாதிப்பதற்காகவே, அவர்கள் இந்திய ராணுவத்தை பலவீனமாக வைத்திருந்தனர். இதனால் சரியான உடைகள், காலணிகள், புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் கூட இல்லாமல் வீரர்கள் தவித்தனர். அவர்களிடம் நல்ல துப்பாக்கிகள் கூட இல்லை. மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தபின் அது மாறியது' என கூறியுள்ளார்.பிரதமர் மோடி கூறியுள்ளது, நுாற்றுக்கு நுாறு உண்மை.இந்தியா- - பாகிஸ்தான் பிரிந்த நாளில் இருந்து, எல்லையில் அத்துமீறி நுழைந்து, நம் ராணுவ அதிகாரிகளை கடத்தி செல்லும் வழக்கமுடைய பாகிஸ்தான் ராணுவம், பா.ஜ., ஆட்சியில், துாசு தும்பு படாமல் திருப்பி அனுப்பிய விமானப்படை ராணுவ அதிகாரி அபிநந்தனை தவிர, இதுவரை பிடித்து சென்ற ராணுவ அதிகாரிகள் எவரையும், உயிருடன் திருப்பி அனுப்பியதில்லை.அதுமட்டுமல்ல; பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளதை போல, இந்திய ராணுவத்திற்கு அத்தியாவசியமான உபகரணங்களை கூட, வாங்கி தராமல் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது.ஒரு நாட்டில் பலமாக இருக்க வேண்டிய அமைப்பு, ராணுவம். அந்த ராணுவத்தையே பலவீனமாக வைத்திருந்தது தான், காங்கிரசின் சாதனை.இந்திய ராணுவத்துக்கு தேவையான துப்பாக்கி வாங்குவதற்கு கூட நிதி இல்லை என்று, பார்லி.,யிலேயே பகிரங்கமாக தெரிவித்தவர் அன்றைய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி. இதை காங்கிரஸ் மறுக்குமா?

அரசியல் கட்சிகள் அற்ற ஜனநாயகம் தேவை!

சுப்ர.அனந்தராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னையில், பழைய மகாபலிபுரம் சாலையில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுக்க மின்வேலி அமைத்தபோது, வெறித்தனம் கொண்ட சிலர், வி.ஏ.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திஉள்ளனர்.இதில் நிச்சயம் அரசியல் பின்புலம் இல்லாமல் இருக்காது. இது போன்ற அராஜகங்களை, நாடு முழுதும் பல பெயர்களுடன் கூடிய அரசியல் தாதாக்கள், மிக பலம் பொருந்திய வகையில் செய்து வருகின்றனர்.ஹரியானா, உ.பி., , பீஹார், கர்நாடகா என, எல்லை கடந்தவை இவை. அந்தந்த மாநில நாளிதழ்களில் இவை வெட்டவெளிச்சமாக வெளியானாலும், யாருக்கும் அச்சமில்லை.ஹரியானாவில், கேம்கா என்ற நேர்மையான ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒரே ஆண்டில் வெவ்வேறு பணியிடங்களுக்கு பணி மாறுதல் என்ற பெயரில் துாக்கி அடிக்கப்பட்டது, காங்கிரஸ் ஆட்சி கால சரித்திர சாதனை. காரணம்? ராஜிவ், சோனியா, மருமகன் ராபர்ட் வத்ரா போன்ற அரசியல் பராக்கிரமம் மிக்கவர்கள், ஏராளமான அரசு நிலங்களை வளைத்துப் போட்டு, பினாமிகள் பெயர்களில் பத்திரப்பதிவு செய்து கொண்டதைக் கண்டுபிடித்து, அதையெல்லாம் பிடுங்கும் நடவடிக்கைகளை, கேம்கா மேற்கொண்டார்.காங்கிரஸ் குடும்ப அராஜகம் போல, இங்கே தி.மு.க., குடும்ப ஆசி பெற்ற நில ஆக்கிரமிப்பு, மராத்தி மாநிலத்தில் இரண்டு பிரிவு சிவசேனை குண்டர்களின் நில அபகரிப்பு, பீஹாரில் லல்லு பிரசாத் யாதவ மஹாராஜாவின் குடும்ப கட்சியின் நில அபகரிப்புகள் என்று, எங்கேயெல்லாம் கட்சி அரசியல் வைரஸ் உள்ளதோ, அங்கேயெல்லாம் இதே அராஜகங்கள் சர்வ வல்லமையுடன் அரங்கேறுகின்றன.சோழர்கள் ஆட்சியில், கீழ்மட்ட அளவில் கூட, ஜனநாயகம் இருந்துள்ளது. உத்தர மேரூர் கல்வெட்டுகளை ஆராய்ந்து இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளனர். கீழடி புதைபொருள் ஆராய்ச்சி என்று பெருமை அடித்துக் கொள்ளும் தி.மு.க., முற்காலத்தில், இது போன்ற ஆக்கிரமிப்புகள் இருந்தனவா என்று ஆராயாமல் தவிர்த்து விடும்.எனவே அரசியல் கட்சிகள் பங்கு கொள்ள முடியாத ஜனநாயகம் ஏற்படும் வரை, நாடு முழுதும், இதே போன்ற அரசு நில ஆக்கிரமிப்புகளும், இதர அராஜகங்களும் தொடரவே செய்யும். 

பிபவ் குமார் தண்டிக்கப்பட வேண்டும்!

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் வெளியான, 'தினமலர்' நாளிதழில், 'ஸ்வாதி மாலிவால் விவகாரம், சுதந்திரமான விசாரணை தேவை' என்ற தலையங்கத்தை படித்தேன்.தமிழகத்தில் ஐ.பி.எஸ்., சாக பணிபுரிந்த ஒரு பெண் அதிகாரிக்கே, அவரது உயர் அதிகாரி ஒருவரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதை நாம் அறிந்தோம். அரசியல் பலம் படைத்தவர்களிடம் உதவி கேட்டும் செல்லும் எழை, எளிய பெண்கள் சீரழிக்கப்படுவதை பல செய்திகளில் பார்த்துள்ளோம். சமீபத்தில் கூட கர்நாடகாவில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு, தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக திரிகிறார். அதுபோலவே, டில்லி முதல்வரான கெஜ்ரிவாலை சந்திக்க வந்த அவரது கட்சியின் ராஜ்யசபா பெண் எம்.பி.,யான ஸ்வாதி மாலிவாலும் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டுள்ளார். ஸ்வாதி மாலிவால் புகாரின்படி, தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயினும், இது ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்கிறார், கெஜ்ரிவால்.அரசியல் கட்சிகள் அனைத்தும், பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தங்களது கட்சியினர் மீது வரும் போது அவர்களை காப்பாற்றவே முயற்சி செய்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம்.அரசியல் செல்வாக்கு மிகுந்த குற்றவாளிகள் பெரும்பாலும் தங்கள் மீது கொடுக்கப்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான புகார்களில், ஆரம்ப கட்டத்திலேயே அவற்றை வாபஸ் பெற வைத்து விடுகின்றனர். ஒரு சில பெண்கள் தான் கடைசி வரையில் போராடி குற்ற வாளிகளுக்கு தண்டனை பெற்று தருகின்றனர்.அந்த வகையில், ஸ்வாதி மாலிவாலும், தன்மீது தாக்குதல் நடத்திய பிபவ் குமார் தண்டிக்கப்படும் வகையில், நீதிமன்றத்தில் துணிச்சலாக சாட்சியம் அளிக்க வேண்டும். இதன் வாயிலாக, எந்தவொரு அரசியல் செல்வாக்கு மிகுந்தவரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்ய அஞ்ச வேண்டும். தலையங்கத்தின் கருத்துப்படி பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்விஷயத்தில், அச்சமோ, தயவு தாட்சண்யமோ இன்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
மே 25, 2024 17:52

"ஒரு நாட்டில் பலமாக இருக்க வேண்டிய அமைப்பு, ராணுவம். அந்த ராணுவத்தையே பலவீனமாக வைத்திருந்தது தான், காங்கிரசின் சாதனை". அதைத்தானே பப்பு இப்போது உளறிக்கொண்டிருக்கின்றது "I.N.D.I.A. ஆட்சிக்கு வந்தால் ராணுவப்படை மூன்றையும் மூடிவிடுமாம் ஏனென்றால் அதனால் நிறைய செலவாகின்றதாம்"


Indian
மே 24, 2024 09:46

நன்றி


சமீபத்திய செய்தி