என். வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும், அந்தப்புரத்தில் பெண்களை கொத்தடிமைகளாக வைத்திருந்தனர். அப்படிப்பட்ட செங்கோல் நமக்குத் தேவையில்லை' என்கிறார், அறிவுஜீவியான மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., வெங்கடேசன்.'செங்கோலை, பார்லிமென்டில் வைத்திருப்பதன் வாயிலாக, இந்த நாட்டுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்' என்று நியாயம் வேறு கேட்கிறார், எல்லாம் தெரிந்த இந்த ஏகாம்பரம். அரபு நாடுகளில் தான் பெண்களை அடிமைகளாக நினைத்து, அவர்களை ஏலம் விடும் கொடுமை நடந்ததாக வரலாறு கூறுகிறது.தமிழக மன்னர்கள் யாரும் பெண்களை அந்தப்புரத்தில் வைத்து அடிமைப்படுத்தியது இல்லை. முகலாய மன்னர்அக்பர் தான், தன் மகன் சலீமைக் காதலித்த அனார்கலியை உயிரோடு சமாதி வைத்தார். செங்கோல் வைத்து, ஆட்சி நடத்திய மன்னர்கள் யாரும் பெண்களை கொடுமைப்படுத்தியது இல்லை.அதியமான் என்னும் வள்ளல், தான் சாப்பிட வேண்டிய நெல்லிக்கனியை அவ்வையார் என்ற பெண் புலவருக்கு பரிசாக கொடுத்து பெருமைப்படுத்தினான். மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன், தன் மகளான மீனாட்சிக்கு மதுரையை ஆளும் பொறுப்பைக் கொடுத்து, அவள் கையில் செங்கோலும் கொடுத்து பெருமைப் படுத்தினான்.இதைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாவில், மீனாட்சி அம்மன் கையில் செங்கோல் கொடுக்கும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். தோழர் வெங்கடேசனுக்குத் துணிவிருந்தால், மீனாட்சி அம்மனுக்கு செங்கோல் வழங்கும் விழாவைத் தடுத்து நிறுத்தி காட்டலாமே?இந்த ஆண்டு, திராவிட செம்மலான அமைச்சர் தியாகராஜனின் அம்மா ருக்மணிக்கு மீனாட்சி அம்மன் கையிலிருந்த செங்கோலை வாங்கும் புண்ணியம் கிடைத்தது. இதற்கு தோழர் வெங்கடேசன் என்ன பதில் சொல்ல முடியும்? மன்னர்கள் ஆட்சியில் பெண்கள் அடிமையாக நடத்தப்பட்டிருந்தால், தன் கணவன் கோவலன் அநியாயமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்து, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நேரில் சென்று நியாயம் கேட்கும் துணிச்சல் கற்புக்கரசி கண்ணகிக்கு வந்திருக்காதே! இதிலிருந்து தோழர் வெங்கடேசனுக்கு சரித்திரமும் தெரியாது; இதிகாசமும் தெரியாது என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. இவரை எம்.பி.,யாக தேர்ந்தெடுத்த மதுரை மக்கள் தான் பாவப்பட்ட ஜென்மங்கள். ஸ்டாலின் சொன்னதை காதில் வாங்கலியோ?
என்.
கந்தசாமி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: லோக்சபாவில்
பதவி ஏற்ற, தி.மு.க., - எம்.பி., தயாநிதி மாறன், உறுதிமொழி வாசகங்களைப்
படித்ததோடு நிறுத்தாமல், திராவிடத் தலைவர்களான ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை,
கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என, அத்தனை தலைவர்களின் பெயரையும் சொல்லி,
'வாழ்க' கோஷம் போட்டார்.ஆனால், தன் தந்தை முரசொலி மாறனின் பெயரைச் சொல்ல மறந்துவிட்டார்.தமிழக
அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் உறுதிமொழி ஏற்கும் போது,
மறக்காமல், 'என் தந்தைக்கு நன்றி' என்று சொன்னார்; அவரைப் பாராட்டலாம்.தலைவர்களின்
பெயர்களைச் சொன்ன தி.மு.க., - எம்.பி.,க்கள், அமைச்சர்கள் எ.வ.வேலு,
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் போன்ற அமைச்சர்களின் பெயர்களையும்
விட்டுவைக்கவில்லை.மூத்த எம்.பி.,யான டி.ஆர்.பாலு, திராவிடத்
தலைவர்களின் பெயர்களைச் சொல்லாமல் தவிர்த்து, 'வணக்கம்' என்று மட்டும்
சொல்லி, 'ஜகா' வாங்கினார்.கனிமொழி, ஆ.ராஜா போன்றவர்கள், ஈ.வெ.ரா.,
அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி பெயர்களைச் சொல்லாமல் விட்டது,
ஆச்சரியம் அளிக்கிறது.'தமிழக சட்டசபையை, பொதுக்கூட்டம் போல மாற்றி விட்டனரே...' என்று அமைச்சர் துரைமுருகன் ரொம்பவே வருத்தம் தெரிவித்தார்.ஆனால்,
நம் தி.மு.க., - எம்.பி.,க்கள் சிலர், உறுதிமொழி பத்திரத்தில் இல்லாத
வாசகங்களைப் பேசி, லோக்சபாவையும், தமிழக சட்டசபை போல் மாற்றி,
அசிங்கப்படுத்தினர்.'தி.மு.க., - எம்.பி.,க்கள், என் பெயரையும்,
தி.மு.க.,வின் பெயரையும் கெடுத்து விடாமல், லோக்சபாவில் நடந்து கொள்ள
வேண்டும்' என்று, முதல்வர் ஸ்டாலின் கூறிய அறிவுரையை, தி.மு.க., -
எம்.பி.,க்கள் காதில் வாங்கவில்லையோ? கல்வராயன் மலையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துங்கள்!
அரு.நெடுமாறன்,
அண்ணா மக்கள் கட்சி, தென் சென்னை மாவட்ட தலைவர், சென்னையில் இருந்து
எழுதுகிறார்: ஒரு பகுதியில் குற்றச்செயல்கள் அதிகம் நடக்கின்றன என்றால்,
அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படை வசதிகள் இல்லை என்பதே
முக்கிய காரணமாக இருக்க முடியும்.கள்ளச்சாராயம், போதை மருந்து
விற்பனை போன்ற சமூக சீர்கேடான பழக்கங்களுக்கு, குறிப்பிட்ட மக்கள்
அடிமையாகின்றனர் என்றால், அவர்கள் நேர்மையாக சம்பாதித்து வாழ, அவர்கள்
வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்பது தான் மிகப் பெரிய உண்மை.வேலையற்றோர்
மனதில், விபரீத எண்ணங்கள் எழும்போது, உடல்நலத்திற்கும், சமூகத்திற்கும்
கேடு விளைவிக்கக் கூடிய செயல்களில் அவர்கள் ஈடுபடத் துவங்கி விடுவர். கள்ளக்குறிச்சியில்
அமைந்துள்ள கல்வராயன் மலைப் பகுதியை, ஆத்துார், கள்ளக்குறிச்சி,
திருவண்ணாமலை ஆகிய பகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில், மேம்பட்ட சாலைகள்
அமைத்து, பேருந்து வழித்தடங்கள் ஏற்படுத்தி, மக்களுக்கு அடிப்படை வசதிகளை
ஏற்படுத்தி, வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும்; கல்விக்கூடங்கள் மற்றும்
மருத்துவமனைகள் ஏற்படுத்த வேண்டும்.கல்வராயன் மலையில்வாழும்
மலைவாழ் மக்கள், கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலை கைவிட்டு, விவசாயம்
செய்யும் வகையில், மலைப் பகுதியில், நில சீர்திருத்தம், நிலத்தடி நீர் பெற
வழி வகைகள், உழவுத்தொழில் செய்ய உதவியாக விதைகள், நாற்றுப் பயிர்கள்,
பூச்சி மருந்து உதவிகள், விவசாய இயந்திரங்கள், அறுவடைக்கு பின் கொள்முதல்
நிலையங்கள் என அரசு அமைத்துத் தந்து, தீவிர கவனம் செலுத்தினால், மீண்டும்
ஆத்துார், தலைவாசல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை பகுதிகளில் கள்ளச்சாராய
இறப்பை தவிர்க்கலாம்.அவசரகால நடவடிக்கையாக அரசு இதைச் செய்ய வேண்டும்.