உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / ஆப்பு அசைத்த குரங்குகள்!

ஆப்பு அசைத்த குரங்குகள்!

எச்.ஆப்ரகாம், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்த நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலையிலும், ஓங்கி ஒரு குட்டு வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.கேரளாவில், 1982ம் ஆண்டு நடந்த, பரூர் இடைத்தேர்தலின் போது, சோதனை முயற்சியாக, 50 ஓட்டுச் சாவடிகளில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. பின் படிப்படியாக, அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் ஓட்டளிக்கும் முறை பரவலாக்கப்பட்டு, 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில், நாடு முழுதும், 10.75 லட்சம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.இ.வி.எம்., எனப்படும் இந்த ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மூலம் ஓட்டுப்பதிவு நடைபெறும் போது, அதற்கு முன்னால், ஓட்டுச்சீட்டின் மூலம் நடைபெற்ற தேர்தல்களில் நிகழ்ந்து கொண்டிருந்த, பல்வேறு கோளாறுகள், முழுமையாக துடைத்து எறியப்பட்டன.முக்கியமாக, செல்லாத ஓட்டுப் போடுவது, கள்ள ஓட்டு போடுவது, வாக்குச்சாவடியை கைப்பற்றி, தங்களுக்கு வேண்டிய சின்னங்களில் முத்திரை பதித்து, ஓட்டுப்பெட்டியில் போடுவது போன்ற இன்னபிற கோளாறுகள் தடுத்து நிறுத்தப்பட்டன.இறந்து போனவர்கள் கூட உயிரோடு திரும்பி வந்து, ஓட்டளித்து விட்டு போகும் அதிசயம், ஓட்டுச்சீட்டு மூலம் ஓட்டுப்பதிவு நிகழும் போது நடந்து கொண்டிருந்தது.காலஞ்சென்ற கருணாநிதியிடம், ஒரு வினோத பழக்கம் உண்டு. எந்தவொரு தேர்தலிலும், கழகம் வெற்றி பெற்றால், ஜனநாயகம் வென்றது என்பார்; கழகம் தோற்றால், பணநாயகம் வென்றது என்பார். தேர்தலில் தோல்வியடையும் அரசியல் கட்சிகளும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் வாயிலாக தேர்தல் நடைபெறும் போது, வென்றால் ஆனந்த கூத்தாடும். தோற்றால், 'இயந்திரத்தின் மூலம் 'கோல்மால்' நடந்து விட்டது. எந்த சின்னத்தை அழுத்தினாலும், ஆளுங்கட்சிக்கு ஆதரவான சின்னத்திலேயே பதிவாகிறது' என்று புளுகும். இன்னும் தேர்தல் ஆணையம், அரசு, நீதி மன்றங்கள் ஆகியவை மீது எந்த அளவுக்கு சேற்றை வாரி வாரி இறைக்க வேண்டுமோ, அத்தனையையும் செய்தனர்.அந்த அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் நெத்தியடியாக, மின்னணு ஓட்டு இயந்திரம், ஒப்புகை சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை நீதிமன்றம் சரிபார்த்தது. 'தொழில்நுட்ப ரீதியாக மற்றும் அறிவியல் ரீதியாக என அனைத்து விசாரணையையும் நடத்தினோம். அறிவியல் பூர்வமான விமர்சனமே தேவை. கண்மூடித்தனமாக அனைத்தையும் சந்தேகிக்க முடியாது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், ஒப்புகைச்சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறோம்' எனவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.இனி நாட்டில் உள்ள எந்த அரசியல் கட்சியும், இ.வி.எம்., இயந்திரத்தின் மீது குறையோ, கோளாறோ சொல்லக் கூடாது. ஓட்டுச்சீட்டு முறை இப்போது மட்டுமல்ல; இனி கிடையவே கிடையாது.இந்த நடைமுறைக்கு ஒத்து வந்தால், தேர்தல்களில் போட்டியிடட்டும்; ஒத்துவராவிட்டால், போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ளட்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பால், அரசியல்வாதிகள் ஆப்பு அசைத்த குரங்கு போல் ஆகிவிட்டனர் என நினைக்கத் தோன்றுகிறது!

உடனடியாக வழங்குவது நல்லது!

கே.சேது, ராமநாதபுரத்தில் இருந்து எழுதுகிறார்: ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்கப்பட்டு வந்தது; இது, 2020 முதல் ரத்து செய்யப்பட்டு விட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில், ரயில்வேக்கு இதன் வாயிலாக கிடைத்த கூடுதல் தொகை, 5,875 கோடி ரூபாய் என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வருகிறது. இவ்வளவு வருவாய் வந்துள்ளதே என அரசோ, ரயில்வேயோ பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது.மூத்த குடிமக்களில் ஒரு சிலர், வசதியாக இருக்கின்றனர். பெரும்பான்மையானோர் நடுத்தர, கீழ் மட்ட மக்களே. இவர்கள் சுய வருமானம் இல்லாமல், அடுத்தவர்களை சார்ந்தே இருக்கின்றனர். இவர்களுக்கு ரயில் பயணத்தின் போது, இந்த கட்டண சலுகை, மிகவும் வசதியாக இருந்தது. இது ரத்தான பின், அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.மூத்த குடிமக்களை மிகவும் கவனமாக பேணி பாதுகாக்க வேண்டிய அரசு, இது போன்ற விஷயங்களில், கடுமையாக நடந்து சலுகைகளை ரத்து செய்வது ஏற்புடையதல்ல.மேலை நாடுகளில், முதியோருக்கு எவ்வளவோ பாதுகாப்பும், வசதியும், சலுகைகளும் வழங்குவதை காண்கிறோம்.இங்கு, முதியோரை வருத்தி இவ்வளவு ரூபாய் சம்பாதித்து விட்டோம் என கூறிக் கொள்வது நியாயமற்றது. ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை, அரசு உடனடியாக வழங்கினால் நல்லது.

தேவையா ராகுலுக்கு இது?

என்.ஏ.நாக சுந்தரம், குஞ்சன் விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் எனவும், எதிர்க்கட்சிகளால் விளையாட்டு பிள்ளை எனவும் அழைக்கப்படும் ராகுல், காங்., இழந்த செல்வாக்கை மீண்டும் நிமிர்த்தப் போகிறேன் என்று சொல்லி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, யாத்திரை கிளம்பினார்.பிரதமர் மோடியை எதிர்த்துப் பேசுவதாகக் கூறி, ஏதேதோ பேசுகிறார். அதை விடுங்கள்...கேரளாவின் வயநாடு தொகுதியில் இவர், லோக்சபா தேர்தலுக்காக போட்டியிடுகிறார்.பெரிய கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், மார்க்., கம்யூ.,வோடும் கூட்டணியில் உள்ளது. ஆனால், கேரளாவில் மட்டும் எதிரணி. அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், மார்க்., கம்யூ., கட்சியைச் சேர்ந்தவர்.அம்மாநிலத்தில் பிரசாரம் செய்த ராகுல், 'ஊழல் புகார்கள் உள்ள கேரள முதல்வரை, மத்திய அரசின்அமலாக்கத் துறை, கைது பண்ணாமல் விட்டு வைத்திருப்பது ஏன்?' என, கேள்வி எழுப்பினார். கேரளா அரசியல்வாதியான எம்.எல்.ஏ., - பி.வி.அன்வர் கோபப்பட்டு, 'காங்கிரஸ் எம்.பி., ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவாரா என எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது. ராகுலுக்கு, டி.என்.ஏ., பரிசோதனை செய்ய வேண்டும்' என, நக்கலாக பேசிஉள்ளார். 'ராகுல் பெயருக்கு பின், காந்தி பெயர் எப்படி வந்தது?' என, பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 'ராகுல், யாரை எதிர்த்து பிரசாரம் பண்ணினாலும், அவர்கள் வெற்றி பெற்று, காங்கிரஸ் தோற்கும்' என, பலரும் கொண்டாடுகின்றனர்.காங்கிரஸ் செய்த சாதனைகளைச் சொல்வதை விட்டுவிட்டு, தனி மனிதத் தாக்குதல் நடத்தினால், எதிராளி வாய்க்கு அவல் கிடைத்தது போலாகிறது. நாறடித்து விடுவர். இந்த உண்மை, ராகுலுக்கும் தெரியவில்லை; அதன் தலைமைக்கும் தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sugumar s
மே 01, 2024 15:46

It is very important to give subsidies to Senior / Super Senior Citizens Mostly middle class people depend on their children for their livelihood Hence, Travel and Medical facilities should be extended with lower premium


A.Gomathinayagam
மே 01, 2024 14:02

மூத்தகுடி மக்கள் மேல் சிறிதும் கருணை இல்லாமல் அவர்கள் எடுக்கும் மருத்துவ காப்பீட்டிற்கும் பதினெட்டு விழுக்காடு ஜீ எஸ் டீ வாங்கும் அரசு


Anantharaman Srinivasan
மே 01, 2024 12:41

நாட்டில் மூத்தகுடிமக்களில் % மேல் வருமானமின்றி தனியார் துறையிலிருந்து ரிடையர் ஆனவர்களே


R SRINIVASAN
மே 01, 2024 08:38

வருமான வரி வரம்பை மூத்த குடிமக்களுக்கு வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு Rs லக்ஷம் வரையில் உயர்த்த வேண்டும் இப்போதுள்ள விலை வாசியில் ஆதரவத்ர முதியவர்கள் மிகவும் கழ்டப்படுகிறார்கள் வருமான வரிச்சட்டத்தில் கான்செர் போன்ற கொடிய நோய்களுக்கு DD பிரிவில் வெறும் Rs விலக்கு அளிக்கப்படுகிறது


புதிய வீடியோ