ஆர்.இந்தளூரான், சென்னையில் இருந்து எழுதுகிறார்: 'முதல்வர் விஜய் பிரதமராக வேண்டும்' என்று கோஷம் எழுப்பி வருகின்றனர், தமிழக வெற்றிக் கழகத்தினர் .இதேமாதிரி தான், 2024 பார்லிமென்ட் தேர்தலில், தி.மு.க., 40 எம்.பி.,க்களை பெற்றதும், 'நிரந்தர முதல்வர், துணை பிரதமர்' என்று கூறி, முன்னாள் முதல்வர் ஸ்டாலினை உசுப்பேற்றினர், உடன்பிறப்புகள். கடைசியில் என்ன ஆயிற்று?நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தன் சொந்த தொகுதியிலேயே அவரால் வெற்றி பெற முடியவில்லை.கடந்த 1987ல் எம்.ஜி.ஆர்., மறைவிற்கு பின், ஜானகி - ஜெயலலிதா என, அ.தி.மு.க., இரண்டு அணியாக பிளவுபட்டு, அக்கட்சியின் இரட்டை இலை சின்னமே முடக்கப்பட்ட நிலையில், 1989ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மக்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தனர்; தி.மு.க.,வும் வெற்றி பெற்றது.ஆனாலும், முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலையை தொடர்ந்து, தி.மு.க., ஆட்சி கலைக்கப்படவே, அடுத்து வந்த, 1991 தேர்தலில், தி.மு.க.,வை மக்கள் புறக்கணித்து, ஜெயலலிதா தலைமையில் ஒருங்கிணைந்த, அ.தி.மு.க.,விற்கு பெரும் வெற்றியை தந்தனர்.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் எப்படி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றாரோ, அதேபோன்று தான், அன்று ஜெயலலிதா, தர்மபுரி மாவட்டம் பர்கூர், ஈரோடு மாவட்டம் காங்கேயம் தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றார்.ராஜிவ் மரணத்தின் காரணமாக, அ.தி.மு.க., இந்த வெற்றியை அறுவடை செய்தது என்று கூறினாலும், தமிழக மக்கள் ஜெயலலிதாவிற்கு ஒரு வாய்ப்பளித்தனர் என்றே கூறலாம்.ஆனால், மக்கள் தனக்கு வாய்ப்பு தான் கொடுத்துள்ளனர்; நிரந்தரமான இடத்தை கொடுக்கவில்லை என்பதை மறந்து, சசிகலாவின் அக்கா மகனை வளர்ப்பு மகனாக்கி, அவருக்கு இவர் நடத்திய ஆடம்பர திருமணமும், ஊழலும் மக்களை வெறுப்புக்குள்ளாக்க, 1996 தேர்தலில் அ.தி.மு.க., படுதோல்வி அடைந்தது.ஜெயலலிதா ஆட்சியின் முதல் இன்னிங்ஸ் இப்படித்தான் முடிந்தது!அதன்பின், 2011 வரை தி.மு.க., - அ.தி.மு.க., என இரு கட்சிகளுக்கும் மக்கள் வாய்ப்பு தான் கொடுத்தனரே தவிர, எவரையும் நிரந்தரமாக ஆளவிடவில்லை. 15 ஆண்டுகள் கருணாநிதி - ஜெயலலிதா என இருவரின் ஆட்சிகளை சீர்துாக்கிப் பார்த்து, கருணாநிதிக்கு, ஜெயலலிதா எவ்வளவோ பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்த பின்பே, 10 ஆண்டுகள் அ.தி.மு.க.,விற்கு ஆட் சி செய்யும் அதிகாரத்தை மக்கள் தந்தனர்.கடந்த 2021 தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற காரணமே, ஸ்டாலின் தந்த வாக்குறுதி களுக்காக, அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு தான்!அது வாய்ப்பு என்பதை மறந்து, அதிகார போதையில் ஆட்டம் போட்டதால் தான், 2026 தேர்தலில் புதிதாக களம் கண்ட நடிகர் விஜய்க்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மக்கள் கொடுத்துள்ளனர்.அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி, மக்களுக்கான முதல்வர் என்று விஜய் பெயர் எடுத்தால் தான், அடுத்த தேர்தலில் அவர், தன் ஆட்சியை தக்க வைக்க முடியும்.அதைவிடுத்து, தத்தி நடை பயிலும் போதே, மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று முதல் பரிசை பெற்று விட துடித்தால், அது சேதாரத்தில் தான் முடியும்!மே.வங்கத்தில், 15 ஆண்டுகள் முதல்வராக இருந்த மம்தா பானர்ஜியும், டில்லியில், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலும் இன்று இருக்கும் இடம் தெரியாமல் போனதற்கு காரணம், இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க துடித்ததால் தான்!எனவே, த.வெ.க., அமைச்சர்கள் முதல்வரை உசுப்பி விட்டு, கவிழ்த்து விடும் வேலையை செய்யாமல், அவர், தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்ய உறுதுணையாக இருங்கள்!மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
கே.ஆர்.பிரேம்குமார், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கோவிலுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. கோவில்களின் புனித தன்மையை காப்பாற்ற அரசு இம்முடிவை எடுத்திருந்தாலும், பக்தர்களுக்கு இது சில சிரமங்களை ஏற்படுத்துகிறது என்பதையும் மறுக்க முடியாது. ஏனெனில், என்னை போன்ற ஏராளமான வெளி மாநில பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வருகின்றனர். கூட்ட நெரிசலில் உடன் வருவோரை பிரிந்து விட்டாலோ, காணாமல் போய் விட்டாலோ, மொபைல் போன் தடையால் அவர்களை தொடர்பு கொள்ள முடியாது. இதனால், தேவையற்ற பதற்றம் ஏற்படும். அத்துடன், பிரசித்தி பெற்ற கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது; நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். இதில், மொபைல் போனை ஒப்படைக்க ஒரு வரிசை எனும் போது, பக்தர்கள் மிகவும் சோர்வடைந்து விடுவர். நோயாளிகள், முதியோர், சிறார்கள் மயக்கமடையலாம். மேலும், பக்தர்களிடம் மொபைல் போன் இருந்ததால், இதுவரை அடக்கி வாசித்த கோவில் அலுவலர்கள் இனி, பயமற்று தங்கள் அடாவடித் தனத்தை அரங்கேற்றுவர். எனவே, அரசு இவற்றையும் கவனத்தில் வைத்து, இத்தடையை மறுபரிசீலனை செய்து, தேவையெனில் சில கட் டுப்பாடுகளை விதிக்கலாம்! உண்மையான மாற்றம் வரும்!
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபையில், தங்கள் கட்சி தலைவர் களின் புகழ்பாடுவதும், 'நாங்கள் இவ்வளவு இலவசங்கள் கொடுத்தோம்; நீங்கள் அவற் றை குறைத்து விட்டீர்கள். திட்டங்களுக்கு வைக்கப்பட்டிருந்த எங்கள் தலைவர்களின் பெயரை மாற்றி விட்டீர்கள்; திட்ட வரைவில், ஈ.வெ.ராமசாமி, அம்பேத்கர் குறித்து பேசவில்லை; சனாதனத்தை ஒழிக்க வேண்டும்' என்பது போன்ற அர்த்தமற்ற பேச்சுகளையே உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். இத்தகைய பேச்சுகள் மக்களிடம் எரிச்சலையே ஏற்படுத்துகிறது. இவர்களுக்கிடையே, பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ., சவுமியா, மேகதாது அணை, கைவிடப்பட்டுள்ள பரந்துார் விமான நிலையத்திற்காக கையகப் படுத்தப்பட்டுள்ள நிலங்களை எப்படி உபயோகிக்கலாம்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம்; மது விலக்கு போன்ற உருப்படியான விஷயங் கள் குறித்து மட்டுமே பேசுகிறார்; பிரச்னைக்கான தீர்வுகளையும் கூட கோடிட்டுக் காட்டுகிறார். மேலும், 'பசுமை தாயகம்' என்ற அமைப்பின் வாயிலாக, சுற்றுப்புற சூழலைப் பாதுகாத்தல், மரம் நடுதல் போன்ற நற்பணிகளையும் செய்து வருகிறார். இவரைப் போன்றோரை கட்சி பேத மின்றி ஒவ்வொரு தொகுதி மக்களும் தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பி வைத்தால், ஓர் ஆக்கப்பூர்வமான அரசியல் ஏற்படுவதுடன், மக்கள் வாழ்விலும் உண்மையான மாற்றம் வரும்!