ஆர். மகேசன், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து, திராவிட கட்சிகள் விருப்ப மனுக்களை பெற துவங்கி இருக்கின்றன. துாத்துக்குடியில் போட்டியிடுவதற்காக கனிமொழி பெயரில், 32 நிர்வாகிகள் கட்டணம் செலுத்தி, விருப்ப மனுக்களை வாங்கி இருக்கின்றனர்.அவர், 2,000 ரூபாய் கொடுத்து தனக்கு வேண்டிய மனுவை வாங்கிக் கொள்ள மாட்டாரா... ஒரு நபருக்கு, 32 மனுக்கள் எதற்கு? என்ன கொடுமை இது.மார்ச் 7க்குள் பூர்த்தி செய்த மனுவை கொடுக்கும்போது, தி.மு.க.,வினர் 50,000 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். அ.தி.மு.கவில் இந்தக் கட்டணம் 20,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டணி யும், போட்டியிடும் தொகுதிகளும் முடிவாகாத நிலையில், அனைத்து தொகுதிகளிலும் கட்சியினர் ஆர்வத்துடன் மனுக்களை வாங்கிச் செல்வர்.இதன் வாயிலாக கட்சிகள் கோடிக்கணக்கான ரூபாயை கல்லா கட்டி விடும். யாருக்கு எந்த தொகுதி என்பது, இந்நேரம் மேல் மட்டத்தில் முடிவாகி இருக்கும். ஆனாலும், ஏமாளி அப்பாவிகளான கட்சியினரிடம் இருந்து பணத்தை கறப்பதற்கான யுக்தி தான், விருப்பமனு என்ற பெயரில் அரங்கேற்றப்படும் நாடகம்.நேர்காணலில் வேட்பாளரிடம், 'உன் கல்வித் தகுதி என்ன, சமூக சேவையில் இதுவரை ஆற்றிய பங்கு என்ன, தொகுதியில் பிரதானமாக உள்ள பிரச்னை என்ன, தொகுதியின் வளர்ச்சிக்கு உன் தொலைநோக்கு திட்டம் என்ன?' என்ற கேள்விகளை எந்த கட்சித் தலைவரும் கேட்டதாக வரலாறே இல்லை.அதற்கு பதிலாக, 'நீ எந்த ஜாதி, எத்தனை கோடி உன்னால் செலவு செய்ய முடியும், கட்சிக்காகஎத்தனை முறை ஜெயிலுக்கு போயிருக்கிறாய்' என்ற கேள்வி தான் மேலோங்கி நிற்கும். இத்தகைய நேர்காணலில் பங்கு பெற, 50,000 ரூபாய் எதற்காக வசூலிக்க வேண்டும்?ம.தி.மு.க., - வி.சி., கம்யூனிஸ்ட் உள்ளிட்டகட்சிகளில் போட்டியிடவே ஆள் இருக்க மாட்டர் என்பதால், விருப்பமனு வினியோகம் என்ற காமெடி நாடகம் அங்கு நடைபெறாது. கோடி கோடியாக சொத்துக்களை வைத்திருக்கும் தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற பெரிய கட்சிகள் தான், வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றன. விண்ணப்ப படிவம் வினியோகம் என்ற பெயரில் சொந்தக் கட்சியினரிடமே கொள்ளையடிப்பது வெட்கக்கேடு!ஜாபர் சாதிக் பின்னணியில் யார்?
க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., முக்கிய நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், போதை பொருட்கள் கடத்துவதில், பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து, மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.தி.மு.க., கூட்டணி அமைப்பது போல், கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கும், போதை பொருள் கும்பலுடன் கூட்டணி அமைத்து, போதை பொருட்களை வெளிநாடுகளுக்கு தொடர்ந்து கடத்தி வந்துள்ளார்.அது மட்டுமின்றி, தமிழகத்திலும் தாராளமாக புழக்கத்தில் விட்டுள்ளனர். அதனால் தான், தமிழகத்தில் கல்லுாரி மாணவர்களில் இருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் இளம் பெண்கள் பலரும் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர்.போதை பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் கூட்டணியில், இன்னும் பல பிரபலங்களும் இணைத்திருக்கலாமோ என்ற அச்சமும் உள்ளது. காரணம், தி.மு.க., முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர், காவல் துறை உயர் அதிகாரிகள் பலருடன் ஜாபர் சாதிக் இருக்கும் படங்கள், சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருப்பது, இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.இவ்வளவு பெரிய போதை பொருட்களை கடத்துவதற்கு மேற்கூறியவர்கள் உடந்தையாக செயல்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுகிறது.தமிழக முதல்வர் ஸ்டாலின், அடிக்கடி போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, 'தமிழகத்தை போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்' என, உத்தரவு போட்டு கொண்டிருக்கிறார். ஆனால், அவரது கட்சியின் முன்னணி நிர்வாகியே, போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது, தமிழக மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜாபர் சாதிக்கை, தற்போது கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். ஆனால், அது மட்டும் போதாது... தலைமறைவாக உள்ள அவரை விரைந்து கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை வாங்கி தந்தால் தான், தி.மு.க., அரசு மீது மக்களுக்கு முழு நம்பிக்கை பிறக்கும். வாக்குறுதிகள் எப்படி இருக்கணும்?
கா.தண்டபாணி, உப்பிலிபாளையம், கோவை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: லோக்சபா தேர்தல் நெருங்கி வருகிறது. நிஜமாகவே மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள கட்சிகள், அளிக்க வேண்டிய வாக்குறுதிகள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? ஆரம்பக் கல்வி, உயர்கல்வி, பல்கலைக் கழகங்கள், மருத்துவ கல்லுாரிகள் ஆகியவை வழங்கும் கல்வி அனைத்தையும் இலவசமாக வழங்க வேண்டும் மருத்துவத்தில் சளி, காய்ச்சல் துவங்கி அனைத்து வகையான கொடிய நோய்களுக்கும் இலவசமாக, தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி அனைவருக்கும் வேலை வழங்கி சுயமாக குடும்பம் நடத்த உதவ வேண்டும் இலவசங்கள் வாயிலாக சோம்பேறிகளாக மக்களை உருவாக்க கூடாது. இலவசங்கள் வாயிலாக யாரும் முன்னேறியதாக எந்த தரவுகளும் இல்லை. உழைப்பின்றி எந்த பொருளும் உருவாகாது. அனைத்திற்கும் மூலதனம் உழைப்பே என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.மேற்கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக சொல்ல வேண்டுமேயன்றி, நடைமுறைப்படுத்த இயலாத வாக்குறுதி களை மக்கள் மன்றத்தில் வைத்து, ஓட்டுகளை பெறக்கூடாது.ஒருவேளை, ஆட்சிக்கு வந்த பின் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால், அந்த கட்சிக்கு பெரும் தொகையை தேர்தல் கமிஷன் அபராதமாக விதிக்க வேண்டும். அதை கட்ட தவறினால், கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மக்கள் நலன் கருதி, இதை தேர்தல் கமிஷன் செய்தால் நன்றாக இருக்கும்.