முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அரசியல் கட்சிகள், மக்களுக்கு பண பட்டுவாடா அல்லது இலவசங்கள் தருவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தால், 100 நிமிடங்களில் ஆக் ஷன் எடுக்கப்படும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.இது வெறும் சம்பிரதாய அறிக்கை என்பது அனைவருக்கும் தெரியும். மற்ற மாநிலங்கள் எப்படியோ... தமிழகத்தைப் பொறுத்தவரை, பணத்துக்கு தங்கள் ஓட்டுகளை விற்பது என்பது திராவிட மாடலின் ஒரு அங்கம்.கட்சிக்காரர்கள் திருட்டுத்தனமாக பொது மக்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் கொடுப்பதை தடுக்க ஆண்டவனால் கூட முடியாது. இதை, கடந்த தேர்தலின் போதே தமிழக தேர்தல் அதிகாரி, பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்டார்.எப்படி கொடுக்கின்றனர், எப்போது கொடுக்கின்றனர் என்பதெல்லாம் பரம ரகசியம். அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தேர்தல் கமிஷன், தன் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்ட நிலையில், இந்தத் தேர்தலின் போதும் இப்படி ஒரு அறிக்கை கொடுத்திருப்பது யாரை திருப்திபடுத்த? இந்த அறிக்கை வெளிவந்தபோதே, 'கைதி' செந்தில் பாலாஜியின் தொகுதியான கரூரில் வீடு வீடாக பரிசு பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இது தேர்தல் கமிஷனுக்கு தெரியாதா? இப்படி லஞ்சம் தந்தவர்களின் மீது விசாரணை உண்டா?பட்டப்பகலில் நடக்கும் பரிவர்த்தனையை தடுப்பதற்கு கூட கமிஷனுக்கு திராணி இல்லை என்றால், ஜனநாயக திருவிழா யாருக்காக? தடி எடுத்தவன் தான் தண்டல்காரன் என்றால், தேர்தல் திருவிழாவில் கமிஷனின் பங்கு தான் என்ன?திட்டம் போட்டு வினியோகம் செய்பவர்கள் செய்து கொண்டேதான் உள்ளனர். அதை சட்டம் போட்டு தடுக்க வேண்டிய தேர்தல் கமிஷன், வெறும் வாய் பந்தல் மட்டும் போடுகிறது.ஊழல் அரசியல்வாதிகள் மேல் ஆக் ஷன் எடுப்பதாக பாசாங்கு செய்து, மக்களுக்கு தண்ணி காட்டுகிறது தேர்தல் கமிஷன்.ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் முடியாட்சியால் வெறுப்புற்று ஏற்கனவே, 'நோட்டா'வுக்கு மாறி விட்டனர் பல நடுநிலையாளர்கள். இந்த நிலைமை நீடித்தால் நாளை நோட்டா எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளது. ஆம், ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாத நாட்டில் ஓட்டுக்கு மரியாதை இல்லை என்று நினைத்து, ஓட்டு போடாமலே பலரும் வீட்டில் இருந்தாலும் அதிசயமில்லை. கோடீஸ்வரர்கள் காலம் இது!
அ.குணா,
கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு சாதாரண வார்டு
கவுன்சிலராக வெற்றி பெற வேண்டும் என்றாலே, லட்சங்களை செலவு செய்ய வேண்டி
உள்ளது. எம்.எல்.ஏ., பதவி என்றால் பல லட்சம் துவங்கி கோடி வரை;
இடைத்தேர்தல் வந்தால், சில நுாறு கோடி.லோக்சபா தேர்தலுக்கோ, கோடி கோடியாய் செலவு செய்ய வேண்டும். அப்படியெனில், சாமானியன் வெற்றி பெறவே முடியாது என்பது தானே உண்மை!தமிழக வாக்காளர்களுக்கு, துட்டு எனும் எலும்புத் துண்டு போதும் என, திராவிடக் கட்சிகள் நினைத்துச் செயலாற்றுவது வேதனை.தற்போதைய நிலையில், காமராஜர், கக்கன், நல்லக்கண்ணு போன்றோர் போட்டியிட்டால், ஓட்டு கிடைப்பது துர்லபமே.ஓட்டுக்கு
பணம் என்று ஒன்று இல்லாதபோதே, காமராஜரை தமிழக வாக்காளர்கள் தோற்கடித்த
நிலையில், தற்போது அத்தகையோர் போட்டியிட்டால், டிபாசிட் கூட கிடைக்காது.தற்போதைய
நிலையில், 475 எம்.பி.,க்கள் கோடீஸ்வரர்கள். வரும் தேர்தலில், போட்டியிடப்
போகும் அனைவரும் கோடீஸ்வரர்களாக இருப்பர் என இப்போதே முடிவு செய்து
விடலாம்.தமிழகத்தில், திராவிடக் கட்சிகளைத் தவிர, பா.ஜ.,
கட்சியிலும், மெகா கோடீஸ்வரர்களை தேர்தலில் நிறுத்துவதோடு, ஸ்வீட் பாக்ஸ்
பல செலவு செய்தால் தான், ஓரளவுக்காவது கவுரவமான ஓட்டுக்களை பெற முடியும்.இன்று
தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கட்சிகள் மட்டும் அல்லாமல், சிறு கட்சிகள்
கூட, உண்மையான மக்கள் சேவகரை தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற முயற்சி
செய்வது இல்லை.எனவே, கோடீஸ்வரர்களுக்கு தான் காலம் இனி! வரலாறை மறைக்க முடியாது!
பி.சிவ
அன்பு ஷர்மா மதுரை யில் இருந்து எழுதுகிறார்: 'எம்.ஜி.ஆரைப் போல்,
அமைச்சர் உதயநிதியை, தமிழக மக்கள் பார்க்கின்றனர்' என, தி.மு.க., அமைப்பு
செயலர் பாரதி கூறுகிறார். அவர் கூறுவது தவறு. யாரை யாருடன் ஒப்பிட்டு
பேசுவது என்று அவருக்குத் தெரியவில்லை.அனைத்து மொழி, மதம்
கட்சிக்கு அப்பாற்பட்டு போற்றப்பட வேண்டியவர், தமிழகத்தின் தனக்கு என்று
ஒரு இடம் வகித்து முதல்வராக பல ஆண்டுகளாக பதவி வகித்தவர், எம்.ஜி.ஆர்., அனைத்து மதத்தினரை யும் அன்பாக அரவணைத்து சென்றவர். அத்தகைய பெரியவரை உதயநிதியுடன் ஒப்பிட்டு பேசுவது தவறு.உதயநிதி,
'நான் கிறிஸ்துவன் என்பதில் பெருமை யாக இருக்கிறது. நான் கிறிஸ்துவ பெண்ணை
திருமணம் செய்துள்ளேன். சனாதனம் ஒழிக்க போராடி வருகிறேன்' என்று
கூறுவதும், பின், 'நான் ஒரு நாத்திகவாதி' என்று கூறுவதும், சந்தர்ப்ப
சூழ்நிலைக்கு தக்கப்படி பேசி வருவதை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது.'உதயநிதி காரில் வரும் போது எம்.ஜி.ஆரை பார்த்த மாதிரி மக்கள் வரிசையில்
இருந்து பார்க்கின்றனர்' என, பாரதி கூறுவது, சிரிப்பை வரவழைக்கிறது. இது
காசுக்கு சேர்த்த கூட்டம்.எம்.ஜி.ஆருக்கு வந்தது தானா சேர்ந்த கூட்டம் பிரதர். வரலாறை மறைக்க முடியாது! பிள்ளைகளை பெற்றவர்கள் கதறுகின்றனரே!
வே.பழனியப்பன்,
கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த சில வாரங்களாக,
அனைத்து ஊடகங்களிலும், போதைப் பொருள் கடத்தல் விவகாரம் முக்கிய செய்தியாக
இடம் பெறுகிறது. பின்னணியில், தி.மு.க.,வின் முன்னாள் நிர்வாகி ஒருவர்
சம்பந்தப்பட்டிருப்பதும் வெட்டவெளிச்சமாகி உள்ளது.இது குறித்து, மற்ற அனைத்து கட்சியினரும், 'கமென்ட்' சொன்ன நிலையில், முதல்வர் வாய் திறக்கவில்லை. பெண்களின் தற்போதைய தலையாய கவலை இது குறித்து தான்...'நம்
மகன், பத்திரமாக பள்ளி, கல்லுாரி சென்று வீட்டுக்குத் திரும்புவானா? போதை
சாக்லேட்டுங்கிறாங்க, நாக்கொட்டிங்கிறாங்க, முகர்ந்து பார்க்கும்
மருந்துங்கிறாங்க... ஒண்ணுமே புரியலே... தலை சுத்துது...' என்கின்றனர்.போதைப்பொருள்
கடத்தலில் முதல் மாநிலமாக தமிழகம் மாறி வருவது, தமிழக இளைஞர்களின்
எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கி விடும் என்பது அவர்களின் பதற்றத்தை
உச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது.பெற்றோர் நிலையில் இருந்து, நம் பிள்ளைகளைக் காப்பற்ற வேண்டிய பொறுப்பு, நம்முடையது தான். கவனமாக இருப்போம்!