உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தேர்தலை புறக்கணித்து விடுமா காங்.,

தேர்தலை புறக்கணித்து விடுமா காங்.,

எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற யோசனையை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. 'ஜனநாயகத்தை நிலை நிறுத்த, இந்த யோசனையை மத்திய அரசு கைவிட வேண்டும். இதற்கான உயர்மட்ட குழுவை கலைக்க வேண்டும்' என்று கருத்து கூறியுள்ளார் காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.இந்தியா விடுதலை அடைந்ததும் நடந்த முதல் இரண்டு, மூன்று தேர்தல்கள் நாடு முழுதும் ஒரே கட்டமாகத் தான் நடந்தன. இதை கார்கேவால் மறுக்கவோ, மறைக்கவோ முடியுமா?ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்தை, மத்திய பா.ஜ., அரசு எடுத்தோம், கவிழ்த்தோம் என்று அமல்படுத்த முயற்சிக்கவில்லை. அது குறித்து ஆலோசிக்க, ஒரு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.அந்த குழு, அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பட்டவர்களிடமும் கருத்துகள் கேட்டு, அவற்றை கவனமுடன் பரிசீலித்து, அதனால் நாட்டுக்கு நன்மை விளையும் என்றால், அமல்படுத்துவர். இல்லையெனில், தவிர்த்து விடுவர்... அவ்வளவுதானே?அதற்குள், 'உயர் மட்ட குழுவையே கலைக்க வேண்டும்' என்று எகிறி குதித்தால் எப்படி? 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறைக்கும், ஜனநாயகத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற கருத்து மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போலல்லவா உள்ளது.ஒரு வேளை, ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனை குழு, திட்டத்தை செயல்படுத்த அனுமதி கொடுத்து, மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் அதற்கு முயற்சித்தால், இப்போது கடுமையாக எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி என்ன செய்யும்?தேர்தலில் போட்டியிடுமா அல்லது போட்டியிடாமல் தவிர்த்து விடுமா?'ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்து, எங்கள் கொள்கைகளுக்கு முரணானது. அதனால் நாங்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. புறக்கணிக்கிறோம்' என்று கூறும் தைரியம் கார்கேவுக்கு உள்ளதா?

முதல்வர் காண்பது பகல் கனவு!

என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'நான் தான் எல்லாம் என்ற போக்கில் செயல்படுகிற ஆட்சி அதிகாரம் ஜனநாயகத்திற்கு கேடு. அத்தகைய சீர்கேட்டை அகற்றி, மாநிலங்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய மத்திய அரசு, தேர்தலுக்கு பின் அமைய வேண்டும்' என்கிறார் முதல்வர் ஸ்டாலின்.'இந்தியாவின் பன்முகத் தன்மையை பாதுகாக்க கூடிய, மத வெறி, மொழி வெறி இல்லாத மத்திய அரசு அமைப்பதற்கான காலம் கனிந்து விட்டது' என்றும், தன் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.'இண்டியா' கூட்டணி லோக்சபா தேர்தலில், ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு மகத்தான வெற்றி பெறுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கும் போது, முதல்வர் ஸ்டாலின் கனவு காணும் மத்திய அரசு அமையுமா என்பது சந்தேகமே!'நான் தான் எல்லாம்' என்ற போக்கில் சர்வாதிகாரியாக செயல்பட்டு, மாநில அரசுகளை கொத்தடிமைகள் போல நடத்திய பெருமைக்குரியவர், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் திருமதி இந்திரா என்பது உலகுக்கே தெரியும். இந்தியாவில், முதன் முதலாக எமர்ஜென்சியை அமல் செய்து, முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து, ஓராண்டுக்கு மேலாக சிறையில் அடைத்து, சர்வாதிகாரியாக நடந்து கொண்டவர் இந்திரா.அதுபோன்ற நிலை தற்போது நிலவுகிறதா? கடந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியில், எந்த மாநில அரசையும் மோடி அரசு கலைக்கவில்லையே!பிரதமர் மோடியைப் பற்றி, இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சரத் பவார், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பெருமைபட பேசியதில் இருந்தே, அவர் எந்த அளவுக்கு சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்பது தெரியவரும்.முதல்வர் ஸ்டாலின் ஆசைப்படுவது போல, இண்டியா கூட்டணிக்கு லோக்சபா தேர்தலில் கணிசமான இடங்கள் கிடைக்காது. மூன்றாவது முறையாக, மோடி பிரதமராவது நிச்சயம் நடக்கும். மோடிக்கு ராமபிரானின் அருளாசி பரிபூரணமாக இருப்பதால், முதல்வர் ஸ்டாலின் காணும் கனவு, வெறும் பகல் கனவாகவே முடியும்.

எப்போது வருவார் ரட்சகன்?

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர் அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சில நாட்களாக, 'உதயநிதி, விரைவில் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்வார்' என்ற செய்தி உலா வருவதை அனைவரும் அறிவோம். இது வதந்தி என்று சம்பந்தப்பட்டவர்கள் மறுத்து பேசினாலும், நடக்க போகும் உண்மை அதுதான். கருணாநிதியிடம் இருந்த ராஜதந்திரம், சிறிதளவும் இவர்களிடம் இல்லை என்றால் ஆச்சரியம் தான். ஸ்டாலினை தவிர, அந்த குடும்பத்தில் தமிழக மக்களுக்கு பரிச்சயம் ஆனவர்கள் அழகிரி, கனிமொழி இருவர் மட்டுமே; அவர்களை சாமர்த்தியமாக ஓரங்கட்டி விட்டார் ஸ்டாலின்,தன் குடும்பத்திலிருந்து யாரையாவது கட்சிக்குள் கொண்டு வந்து விட்டால், கடைசி வரை நம் கட்டுப்பாட்டிலேயே கட்சி இருக்கும் என்று, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே கணக்கு போட்டு, அதை வெற்றிகரமாக நிறைவேற்றி கொண்டிருக்கிறார், ஸ்டாலின்.படங்களில் நடித்து உதயநிதி முகத்தை தமிழக மக்கள் மனதில் பதிய செய்து, பின் அரசியலுக்கு காலடி எடுத்து வைத்ததும், உடனடியாக அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுத்து விட்டால், உதயநிதியின் அரசியல் வாழ்வு பிரகாசமாக இருக்கும் என்று, அழகாக கணக்கு போட்டு, அதையும் மிக கச்சிதமாக நிறைவேற்றி விட்டார். ஒரு தந்தையாக ஸ்டாலின் நினைத்தது போலவே, அனைத்தும் நடந்திருக்கிறது. தற்போதே, உதயநிதி முதல்வருக்குரிய சகல அதிகாரங்களுடன் தான் பவனி வருகிறார். முதல்வரை விட, பல அமைச்சர்கள் உதயநிதிக்கே முக்கியத்துவம் தருகின்றனர்.இந்த சூழலில், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால் என்ன; முதல்வர் பதவி கொடுத்தால் என்ன... யார் என்ன சொல்லப் போகின்றனர்? முதல்வர், தைரியமாக தன் பதவியையே தனயனுக்கு தாரை வார்க்கலாம்; எதிர்த்து ஒருவரும் கேள்வி கேட்க மாட்டார்கள். பதவிக்காலம் முடியும் முன்னரே ஸ்டாலின், உதயநிதிக்கு முதல்வர் பதவி கொடுத்து அழகு பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எனவே, உடன்பிறப்புகளே... தற்போது இருந்து உதயநிதிக்கு நற்பணி மன்றம், பாசறை இவற்றையெல்லாம் ஆரம்பித்து வைத்துக் கொண்டால், உதயநிதியின் கடைக்கண் பார்வை கண்டிப்பாக உங்கள் மேல் விழும்; உங்களின் எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும். இந்த திராவிட கட்சிகள் அல்லாமல், வேறு ஒரு நல்ல மனிதர் வந்துவிட மாட்டாரா என்று தமிழக மக்கள் அனைவரும் ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர், நம்மை காப்பாற்றும் ரட்சகன் எப்போது வருவார் என்பது, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ