தமிழக பா.ஜ., துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேட்டி: வடமாநில
ஊடகங்கள், 'லோக்சபா தேர்தலில், பா.ஜ., 300-க்கும் மேற்பட்ட இடங்களை பெற்று,
மத்தியில் ஆட்சி அமைக்கும்' என, கூறுகின்றன. தென் மாநில ஊடகங்களின்
கருத்துக்கள், வெறும் கருத்து திணிப்பாகவே உள்ளது. தமிழக மக்கள் எண்ணத்தில்
மட்டுமின்றி, பா.ஜ., அமைப்பு ரீதியாக வளர்ந்து வருகிறது. பா.ஜ.,விற்கு
தமிழகத்தில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. வடமாநிலங்களை போலவே,
தமிழகத்திலும் அசைக்க முடியாத கட்சியாக பா.ஜ., உருவாகும். தேர்தல் முடிவு நாடு முழுதும் பா.ஜ.,வுக்கு இனித்தாலும், தமிழகத்தில் கசக்கும் என்பதை இவரால் ஏத்துக்க முடியல போலும்!பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் 23 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழக நகரங்களில் இனி வரும் ஆண்டுகளில் வெப்ப அலை தாக்கம் இரு மடங்காக அதிகரிக்கும் என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. எனவே, தமிழக நகரங்களை வாழத் தகுந்தவையாக மாற்ற, வெப்ப செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும். இதற்காக, தமிழகநகரங்களுக்கான வரைவு வெப்ப செயல் திட்டத்தை, பசுமை தாயகம் அமைப்பு வெளியிட்டுள்ளது. இப்ப, அடிக்கிற வெயிலுக்கே முகம் சட்டியில் வதக்கிய தக்காளி மாதிரி ஆகிடுது... இன்னும் இரு மடங்குன்னா தாங்காது!தமிழ்நாடு வணிகர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி: பேக்கிங் செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தலாம் என, ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார். இதை ஏற்று மாநில அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்ப பெறுவதுடன், அரசாணையாக விரைவில் வெளியிட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருளான பிளாஸ்டிக்கை மீண்டும் அனுமதிக்க கோரலாமா?தி.மு.க., செய்தி தொடர்பு துணைச்செயலர் கோவை செல்வராஜ் அறிக்கை: அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதாவை, ஹிந்துத்துவா தலைவர் என விமர்சித்தவர்களை எதிர்த்து, துணிச்சலாக, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை விடுவதற்கு அல்லது பேட்டி தருவதற்கு பழனிசாமி முன் வரவில்லை. தன் சுயநலத்துக்காக, அ.தி.மு.க.,வை ஒரு கம்பெனி போல் நடத்திக் கொண்டிருக்கிறார். இவங்க தலைவர் மட்டும் அண்ணாமலைக்கு பதில் தர மாட்டாராம்... பழனிசாமி மட்டும் தரணுமாக்கும்!