தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன்திருப்பதி அறிக்கை: இனியவன்
என்ற நபர், தான் ஒரு அரசு ஊழியர் என சொல்லிக்கொண்டு, மத்திய நிதி அமைச்சரை
தரக்குறைவாக பேசியதோடு, பிரதமரை மிக அவதுாறாக பேசியுள்ளது, தி.மு.க.,வின்
வெறுப்பு அரசியலை, தரம் தாழ்ந்த கேவல அரசியலை உணர்த்துகிறது. அந்த நபரோடு
சேர்ந்து, தமிழக அரசு பாடநுால் கழக தலைவர் லியோனியும் பேசியுள்ளது
அருவருப்பின் உச்சகட்டம். இவ்விருவரையும் கைது செய்ய, முதல்வர் உத்தரவிட
வேண்டும். சரியா போச்சு போங்க... இனியவன் செஞ்ச வேலைக்கு, திராவிட
மாடல் ஆட்சியாளர்கள் அவரை உச்சி முகர்ந்து, 'டபுள் புரமோஷன்' கொடுத்தாலும்
ஆச்சரியமில்ல!அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அறிவுறுத்தலை பின்பற்றி, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான வசதிகளை, தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். தேயிலை பறிப்பதைத் தவிர, வேறு எந்த தொழிலும் தெரியாத, நுாற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.ஆட்சியாளர்கள் யாருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மாஞ்சோலையை காலி செய்றாங்களோ... இதுல, தொழிலாளர்களை பற்றி எல்லாம் சிந்திப்பாங்களா?முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: பழனிசாமி ஒரு கேள்விக்குறி. 6 சதவீத ஓட்டுகளை ஆளுங்கட்சியான தி.மு.க., இழந்திருக்கிறது என்றால், அந்த ஓட்டுகள் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு வராமல், பா.ஜ., நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்கு போனது ஏன்? அப்படி என்றால் தி.மு.க.,வுக்கு மாற்று அ.தி.மு.க., அல்ல என்ற மனநிலை, மக்களிடம் உருவாகிறது என்பது தானே அர்த்தம். இதற்கு யார் காரணம்?ஆனா, அந்த மாற்று சக்தி பன்னீர்செல்வம் இல்லை என்பது மட்டும் உறுதி!அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: தமிழகம் முழுதும் 24 மணி நேரமும், எல்லா இடங்களிலும் மது விற்கப்படுவது, மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதிகாரிகளுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் மட்டும் தெரியாது என்பது வியப்பாக உள்ளது. துாங்குறவங்களை எழுப்ப லாம்... துாங்குற மாதிரி நடிக்கிற வங்களை எழுப்ப முடியாதுன்னு சொல்வாங்களே... அதுதான் இது!