அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், 438 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக
உள்ளன. இதை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதற்காக, ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள்,
ஊடகங்கள் வழியே செய்தி வெளியிட்டனர். இது அரசால் குற்றமாக
பார்க்கப்படுகிறது என்றால், நடப்பது சர்வாதிகார ஆட்சி. அரசின் தவறுகளை ஊடகங்கள் வாயிலாக சுட்டிக் காட்டுபவர்கள், 'தேச துரோகிகள்' என்பது, எல்லா ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும் தானே!முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தி, தி.மு.க.,வுக்கு எதிர் பா.ஜ., என களத்தை மாற்றவே அக்கட்சி முயற்சிக்கும். அதேவேளை, எடுபடாத பழனிசாமி தலைமையில் சேர புதிதாக யாரும் வர மாட்டர். அவரை தவிர்த்து, 2026க்கு முன் எல்லோரும் ஒன்று சேர்ந்தால், கட்சி காப்பாற்றப்படும். அது நடக்காமல் போனால், 2026 தேர்தலோடு பழனிசாமி அரசியலோடு சேர்ந்து, கட்சியும் கல்லறைக்கு போய்விடும்.'புலிக்கு பயந்தவங்க என் மேல படுத்துக்குங்க' என்ற கதையா தான் இருக்கு இவரது கூப்பாடு!விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை: காவிரி பிரச்னையில், தமிழகத்திற்கு விரோதமாக கர்நாடக அரசு நடந்து கொள்வது இரு மாநில உறவை சீர் செய்ய முடியாத அளவுக்கு பாழாக்கி விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் போதிய நீர் இருந்தும், 'தண்ணீர் தர வாய்ப்பு இல்லை' என்று கூறுவது, கர்நாடக அரசின் சுயநலம் சார்ந்த பிடிவாத போக்கையே காட்டுகிறது.இதை அப்படியே ராகுலுக்கு ஒரு போன் போட்டு, 'சித்தராமையாவை கொஞ்சம் கண்டிச்சு வைங்க'ன்னு சொல்லி இருக்கலாமே!தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி: பா.ஜ., வெறுப்பு அரசியல் செய்து வருகிறது. கூட்டணி கட்சிகளின் துணை இல்லாமல், பா.ஜ., ஆட்சி நடத்த முடியாது. அவர்களை விட, எதிர்க்கட்சிகளாக இருக்கும் நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். இங்கிலாந்தில், 15 ஆண்டுகளுக்கு பின் ஆட்சி மாற்றம் வந்தது போல, இந்தியாவிலும் வரும். காங்., தொடர்ந்து, மூன்று லோக்சபா தேர்தல்களில் தோற்றும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக சொல்லும் இவர் மனோதிடத்தை பாராட்டியே ஆகணும்!