தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு: நாட்டை காங்கிரஸ் விரைவில்
வழி நடத்தும்; அதற்கான சூழ்நிலை துவங்கி விட்டது. அதற்கான நாட்களும் வெகு
துாரத்தில் இல்லை. அந்தளவு கட்சியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., கவலையடைந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,
அது மக்களின் முன்னேற்றம் கொண்ட ஆட்சியாக இருக்கும்.நாட்டை வழிநடத்த 272 எம்.பி.,க்கள் வேணுமே... உங்க கட்சிக்கு இருப்பதோ 99 தான் என்பதால், இப்போதைக்கு நீங்க வழிநடத்த வாய்ப்பே இல்லை!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு: 2024ம் ஆண்டு நிதி ஆயோக் ஆய்வறிக்கை படி, வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, மாநில எரிசக்தி ஆகிய குறியீடுகளில் தமிழகம் முதலிடம். இதர குறியீடுகளில் முன்னிலை மாநிலமாகும். தி.மு.க., அரசின் சாதனையாக இது குறித்து பெருமைப்பட்டு கொள்கின்றனர். இதே குறியீடுகளில், 2019 நிதி ஆயோக் அறிக்கையில், பழனிசாமி ஆட்சியில் தமிழகம் முதலிடம் பிடித்தது. கேரளாவை பின்னுக்கு தள்ளியது. இது அ.தி.மு.க., ஆட்சி சாதனையின் நீட்சியே தவிர வேறல்ல.சரி இருக்கட்டும்... நீங்க விட்ட இடத்துல இருந்து அவங்க தொடர்வதை பாராட்டலாமே!தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'கேள்வித்தாள் கசிந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே, நீட் தேர்வுக்கு மறு தேர்வு தேவை இல்லை. தேர்வு நடத்தியதில் எந்தவித தவறும் நடந்ததாக தெரியவில்லை' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதுநாள் வரை எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல், இந்த பிரச்னையை ஊதி பெரிதாக்கி, மாணவர் மற்றும் பெற்றோரிடையே குழப்பம் மற்றும் பதற்றத்தைஉருவாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.'நீட்' தேர்வை வைத்து நீட்டா அரசியல் பண்றவங்க, குழப்பத்தை ஏற்படுத்தாம குருமாவா பண்ணுவாங்க?அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: சிகரெட் காட்சிகளை மையப்படுத்தி நடித்து, இளைய சமுதாயத்தை சினிமா நடிகர்கள் பாழ்படுத்துவது கண்டனத்துக்குரியது. நடிகர் சூர்யா தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜா இயக்கத்தில் புதிய படத்தின் டீசர் காட்சியில், சிகரெட் புகைத்த படி சூர்யா வரும் காட்சி உள்ளது. நடிப்பை நம்பாமல், சிகரெட்டை நம்பிய போதே நடிகராக அவர் தோற்று போய் விட்டார்.அப்ப எல்லா ஹீரோவும்அந்நியன், 'அம்பி' மாதிரி நடித்தால், நம்ம இளைய சமுதாயமும் அப்படியே மாறிடுமா?